திரிஷா இல்லனா நயன்தாரா, ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற அடல்ட் காமெடி படங்களின் வரிசையில் வந்துள்ள மற்றொரு படம்.
நாயகன் விமல் மற்றும் சிங்கம் புலி ஆகிய இருவரும் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே அவ்வப்போது சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு நாள் இவர்கள் இருவரும் திருடச் சென்ற இடத்தில் ஆளுக்கு ஒரு பணப்பை கிடைக்கின்றது. பிறகு இருவருமே அந்த பணப்பைகளை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டு ஊரைவிட்டுச் செல்ல திட்டமிடுகின்றனர். விமல் தன் காதலி ஆஷ்னா சவேரியை அழைத்துக் கொண்டும், சிங்கம்புலி தனியாகவும் வெளியூருக்குச் சென்று விடுகின்றனர். இதற்கிடையே இவர்கள் பணப்பையை திருடிய இடத்தில் ஒரு டப்பாவையும் சேர்த்து திருடி விடுகின்றனர். பிறகு அந்த டப்பாவை தேடி ஆனந்தராஜ் குழுவைச் சேர்ந்த ரவுடி கும்பல் அவர்களை துரத்துகிறது. மற்றொரு பக்கம் பூர்ணா தலைமையிலான போலீஸ் அவர்களை தேடுகிறது. அதே நேரம் மியா ராயும் இவர்களை துரத்துகிறார். இதில் மியா ராய் ஏன் துரத்துகிறார்...? இருவரும் போலீசில் சிக்கினார்களா...? ரவுடி கும்பல் என்னவானது...? திருடிய பணம் என்னவானது...? என்பதே 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.
அடல்ட் காமெடியை பிரதானமாக வைத்து முதல் பாதியை நகர்த்திய இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இரண்டாம் பாதியையும் கலகலப்புடன் சொல்ல முயற்சி செய்துள்ளார். அதிலும் பல இடங்களில் வரும் அந்த 'வா', அந்த மாதிரி படங்களின் ரசிகர்களுக்கு ஜாலிதான். கதையில் ஆனந்தராஜ் வருகைக்குப்பின் படம் வேகமெடுப்பது சற்று ஆறுதலாக உள்ளது. இயக்குனர் காட்சிக்கு காட்சி அடல்ட் காமெடியை மட்டுமே நம்பி படத்தை எடுத்துள்ளார். ஆனால் படம் நன்றாக இருக்க இது மட்டும் போதுமா...?
விமல் எப்போதும் போல் தன் அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு அவருக்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். நாயகி ஆஷ்னா சவேரி அதிக வசனம் இல்லாமல் கவர்ச்சி பொம்மையாக வலம் வந்துள்ளார். இவரை காட்டிலும் மியா ராய் கவர்ச்சியில் ஒருபடி மேலே போய் 'வா' என்ற ஒற்றை வரி வசனத்தை வைத்தே விமலோடு சேர்த்து ரசிகர்களையும் மிரட்டி உள்ளார். சிங்கம்புலியின் கதாபாத்திரம் கதையோட்டத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. பல இடங்களில் விமலை காட்டிலும் சிங்கம்புலியே அதிகமாக ஸ்கோர் செய்கிறார். வில்லனாக வரும் ஆனந்தராஜ், தன் அனுபவத்தால் சிங்கம்புலிக்கு சரியான டப் கொடுத்து படத்தின் வேகத்தை இன்னும் ஒரு படி கூட்டியுள்ளார். மற்றபடி போலீசாக வரும் பூர்ணா, மன்சூர் அலிகான், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லோகேஷ், வெற்றிவேல் ராஜ் ஆகியோர் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்துள்ளனர்.
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும், நடராஜன் சங்கரின் இசையும், படத்திற்கு துணை நிற்கின்றன. அயர்ச்சி தரும் திரைக்கதையில் அடல்ட் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களை வைத்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குனர் அந்த கிரியேட்டிவிட்டியை திரைக்கதையிலும் சேர்த்திருந்தால் படம் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.
படத்தில் விமலுக்கு இருக்கும் மச்சம், படம் பார்க்க வந்தவர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - 18+ க்கு மட்டும். அதிலும் இப்படிப்பட்ட படங்களை ரசிப்பவர்களுக்கு மட்டும்.