இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது நேர விரயமாகவும், பொழுதுபோக்காகவும், அல்லது 'பப்ஜி' போன்ற மொபைல் வீடியோ கேம்களாகவும் மாறிவருகின்றது. படிப்பு என்பது கடமையாகவும் பெருமையாகவும் போட்டியாகவும் அதற்கும் மேல் பாரமாகவும் மாறிவிட்டது. இந்த நிலையில் வாழ்க்கை என்னவாகியிருக்கிறது என்ற கேள்வியாகவும் அதற்கு விடையாகவும் வந்திருக்கின்றது இயக்குனர் சுசீந்திரனின் 'ஜீனியஸ்' திரைப்படம்.
பள்ளியில் படிப்பு, படிப்பு தொடர்பான போட்டிகள் என அனைத்திலும் டாப் மாணவன் தினேஷ் (அறிமுக நாயகன் ரோஷன்). அவனது திறமையை, பள்ளி ஆண்டுவிழாவில் அவன் பெறும் பரிசுகளால் உணர்ந்த அவனது தந்தை (ஆடுகளம் நரேன்), அப்போதிலிருந்து படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த விடாமல் அவன் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் படிப்பிலேயே இருக்க வைக்கிறார். தினேஷும் படித்து முடித்து ஒரு பெரிய நிறுவனத்தின் திறமையான ஊழியன் ஆகிறான். ஆனாலும் விளையாட்டு, பொழுதுபோக்கு, தாத்தா - பாட்டி பாசம் என அத்தனையையும் இழந்த அவனது வாழ்க்கை பின்னாளில் என்னவாகிறது என்பதே 'ஜீனியஸ்'.
சுசீந்திரன், இயக்குனர்களில் ஒரு விஜய் சேதுபதி போல வரிசையாக படங்கள் கொடுக்கிறார், அடுத்தும் வரிசையில் படங்களை வைத்திருக்கிறார். அந்த வேகம், அவசரம் படத்தில் ஆங்காங்கே தெரிகிறது. எனினும் எடுத்துக்கொண்ட கதை, சமகாலத்துக்கு அவசியமானதாகவும் பேசப்படவேண்டியதாகவும் இருப்பது படத்தின் பலம். கிராமத்தில் தாத்தா - பாட்டியுடன் அந்த சிறுவன் கழிக்கும் விடுமுறைப் பொழுது, நம் ஒவ்வொருவரையும் எண்ணி ஏங்க வைப்பது. படத்தின் அந்தப் பகுதி காட்சிகள் குளுமையாகவும் இதமாகவும் மனதில் நிற்கின்றன. தந்தையின் கண்டிப்பில் பள்ளி வயது மகன், எந்த எதிர்ப்பையும் காட்டாமல், வேறு வழியில்லாமல் அந்த வயது இன்பங்கள் அனைத்தையும் துறந்து படிப்பது நம்மையும் அந்த வேதனையை உணர வைக்கிறது. பதின் வயது நட்பும், அதை இழக்கும்போது அடையும் சோகமும் பின்னர் வேலைக்கு வந்த பின்பும் அவன் அடையும் பணி அழுத்தமும் நன்றாக நமக்குக் கடத்தப்படுகின்றன. அதன் பின்னர் நிகழ்வதுதான் படத்தின் தொய்வுப்பகுதி.
நாயகன் ரோஷன், அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதம் முதலில் சற்றே அதிர்வை ஏற்படுத்தினாலும் பிறகு வேடிக்கையாகிறது. அத்தனை சீரியஸான பிரச்சனை இப்படி ஒரு இடத்தில் தீர்வது போல காட்டியிருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. கிராம வாழ்க்கை உண்மையில் ஒப்பீட்டு அளவில் மன அழுத்தம் குறைவானதுதான். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் அனைவருக்கும் அது வாய்க்குமா? பிரச்சனையை தீவிரமாக சொல்லிய இயக்குனர் சுசீந்திரன், தீர்வுகளை சற்றே அசால்ட்டாக சொல்லிய உணர்வு. என்றாலும், ஒரு நிமிடம் நம் வாழ்க்கை முறை குறித்து நம்மை யோசிக்க வைப்பது படத்தின் வெற்றி.
அறிமுக நாயகன் ரோஷன், இப்படத்தின் தயாரிப்பாளர். தயாரிப்பில் இருந்த டென்சன் நடிப்பில் தெரிகிறதோ? பாத்திரத்தில் ஒன்றி நடிக்க முயன்றுள்ளார். தினேஷ் பாத்திரத்தின் சிறு வயதில் நடித்த இருவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. மிக அழகாய் பாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார்கள். நாயகி பிரியா லால், சிறிது நேரம் வந்தாலும், பெரிதாய் நடிக்கும் தேவையில்லை என்றாலும், கவனம் ஈர்க்கிறார். அடுத்தடுத்த படங்களில் அவரிடம் அதிகமாக எதிர்பார்க்கலாம். அப்பாவாக ஆடுகளம் நரேனுக்கு ஈஸியான பாத்திரம், சிரமமில்லாமல் பொருந்துகிறார். மீராகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் ஜெயபாலன் என மற்ற நடிகர்களுக்கு படத்தில் ஸ்பேஸ் குறைவு என்றாலும் அவர்களின் பங்கு நிறைவுதான். படத்தில் நம்மை சிரிக்கவைப்பவர்கள் சிங்கம் புலியும் நாயகன் ரோஷனும்தான். ஈரோடு மகேஷ், பாலாஜி, சிங்கமுத்து காம்போ முயற்சி தோல்விதான்.
குருதேவின் ஒளிப்பதிவில் 'நீங்களும் ஊரும்' பாடல் காட்சியும் கிராமத்து எபிசோடும் மனதில் நிற்கின்றன. யுவன் இசையில், 'நீங்களும் ஊரும் சொல்வது போல' பாடல் மட்டும் சற்றே யுவனை நினைவூட்டுகிறது. மற்றவை சுசீந்திரனுடனான பழைய கூட்டணிகளை ஒப்பிட்டு அதிருப்தியடைய வைக்கின்றன. படத்தொகுப்பாளர் தியாகு கட்சிதமாக வெட்டி ஒட்டி படத்துக்கு பெரும் நன்மை செய்துள்ளார். படத்தின் நேரம் ஒண்ணே முக்கால் மணிநேரம்தான்.
அவசியமான ஒரு பிரச்சனையை மக்களிடம் பேசியுள்ளார் சுசீந்திரன், அனாவசியமான சில விஷயங்களோடு சேர்த்து...