2005இல் வெளிவந்த 'சண்டக்கோழி' திரைப்படம் பலருக்கும் பல விதங்களில் முக்கியமானது. விஷாலை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகம் செய்தது 'சண்டக்கோழி'. 'ஜி' தோல்விக்குப் பிறகு லிங்குசாமியை மீண்டும் வெற்றி இயக்குநராக்கியது 'சண்டக்கோழி' திரைப்படம்தான். ராஜ்கிரண், அதற்கு முன்பே 'கம்-பேக்' கொடுத்திருந்தாலும் தன் பழைய பாணி கெத்துடன் வளம் வந்தது இந்தப் படத்தில்தான். யுவனுக்குத் தேவைப்பட்ட மாஸ் வெற்றி உள்பட பல விதங்களில் இந்தப் படம் முக்கியமான படமாக இருந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக சண்டக்கோழி 2 வெளிவரும்போது இயல்பாக எதிர்பார்ப்பு உருவாகிறது. தனது இரண்டாம் படமான சண்டக்கோழியில் சிலிர்த்துக்கொண்டு சண்டைக்குப் போகும் சேவலாக விஷால் கலக்கியிருந்தார். இப்போது, சண்டக்கோழி-2, விஷாலுக்கு 25ஆவது படம். விஷாலுக்கு வாழ்த்துகள்... படம் எப்படியிருக்கிறது?
ஏழு வருடங்களுக்கு முன், வேட்டைக்கருப்பு கோவில் திருவிழாவில், பந்தி பரிமாறும்போது ஏற்படும் ஒரு சண்டையைத் தொடர்ந்து நடக்கும் கொலைகளால் திருவிழா தடைபடுகிறது. அதனால், சுற்றியுள்ள ஊர்களில் தண்ணீர் பிரச்சனையிலிருந்து பல பிரச்சனைகள் ஏற்படுவதாக மக்கள் நம்புகின்றனர். தன் முயற்சியால் கோவில் திருவிழாவை நடத்துகிறார் அந்தப் பகுதிக்கே பெரியவரான துரை அய்யா (ராஜ்கிரண்). திருவிழாவை முன்னிட்டு ஏழு வருடங்களாக வெளிநாட்டிலிருந்த பாலு (விஷால்) ஊருக்கு வருகிறார். அந்த பழைய பிரச்சனையில் இழப்பை சந்தித்த வரலக்ஷ்மி, அதே திருவிழாவிலேயே பழிக்குப் பழிவாங்கவேண்டுமென வன்மத்துடன் காத்திருக்கிறார். அதைத் தடுப்போம், திருவிழாவை சுமூகமாக நடத்துவோம் என்று வாக்குத் தந்திருக்கும் துரை அய்யாவும் பாலுவும் வென்றார்களா என்பதுதான் 'சண்டக்கோழி-2'.
படத்தின் அடிப்படை களம் திருவிழா என்பதால், கோவில், திருவிழா, அதைச் சுற்றிய ஊர் என வண்ணமயமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. 'பருத்திவீரன்', 'வெயில்' போல வெயில் தகிக்கும் கிராமங்கள் அல்ல லிங்குசாமியின் கிராமங்கள். 'அய்யா சொல்வதுதான் கடைசி சொல்' என்று ஊர் மக்கள் மதிக்கும் துரை அய்யா, அமைதி அதிரடி கலந்த நாயகன் பாலு, கலகல துறுதுறு நாயகி, அழுத்தமான சண்டைக்காட்சிகள், உணர்வுபூர்வமான உறவுகள் என சண்டக்கோழியின் பாசிட்டிவ் விஷயங்களை இதிலும் பயன்படுத்தியிருக்கிறார் லிங்குசாமி. அது நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. ஆனால், மிக முக்கிய பாசிட்டிவ் விஷயங்களான நாயகனுக்கும் வில்லனுக்குமான அந்த வலுவான பிரச்சனை, நாயகனின் பின்னணி தந்த சர்ப்ரைஸ் என இந்த இரண்டு முக்கியமான விஷயங்களையும் மிஸ் பண்ணிவிட்டார். முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் இணைத்த விதமும் இடங்களும் புத்திசாலித்தனம். மீரா ஜாஸ்மின் இல்லாத காரணத்தை லாவகமாகக் கூறிவிட்டார் இயக்குனர். முதல் பாகத்தில் வரவேற்பை பெற்ற வசனங்களை ஆங்காங்கே அதே பாணியில் பயன்படுத்தியிருப்பது ரசிக்கத்தக்கது.
தொடக்கத்தில் காட்டப்படும் படத்தின் முக்கிய பிரச்சனை, பலவீனமாக இருப்பது மிகப்பெரிய குறையாக இருந்து படம் முழுவதும் நம்மை தொந்தரவு செய்கிறது. லிங்குசாமியும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதியிருக்கும் கதை இன்னும் 'சண்டக்கோழி' என்ற பிம்பத்துக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதி வசனங்கள் ஊர்ப்பாசம், மரியாதை, விசுவாசம் என அனைத்தையும் அழகாகப் பேசுகின்றன. ஆனால், முக்கிய உணர்வான ஆவேசம், கோபத்தை மட்டும் சற்றே சுமாராகப் பேசுகின்றன. 'திருவிழாவுல புலி வேஷம் போடலாம், புலிக்கு முன்னாடியே வேஷம் போடக்கூடாது', 'இது ஆடுபுலியாட்டமில்ல, ஆடும் புலியும் சேர்ந்து ஆடுற ஆட்டம்' என்று அழுத்தமாக இருக்க வேண்டிய பன்ச் வசனங்கள் பெரும்பாலும் எதுகை மோனையாக மட்டுமே இருக்கின்றன. வரலக்ஷ்மியின் பாத்திரம் ரசிக்கவைத்தாலும் இன்னும் கொஞ்சம் நுணுக்கங்கள் இருந்திருக்கலாம். வில்லன் பக்கம் கொஞ்சம் வீக்காக இருப்பதும் படத்துக்குப் பின்னடைவு. வட்டார வழக்கு, சொலவடைகள் போன்ற விஷயங்களில் தமிழ் படங்கள் உண்மைக்கு நெருக்கமாக வந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படம் காட்டும் தேனி வட்டாரவழக்கில் 'நேட்டிவிட்டி' கம்மியாக இருக்கிறது.
விஷால், பக்குவமாக இருக்கிறார், சண்டை வரும்போது பொறிபறக்க வைக்கிறார். முதல் பாகத்தின் குறும்பு இல்லை, அதற்கு காரணமும் இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், படத்தின் மிகப்பெரிய ஆசுவாசம். தப்புத்தப்பாக தேனி பாஷை பேசினாலும் குறும்பால் கவர்கிறார். ராஜ்கிரண், அதே கம்பீரம், அதே நடிப்பு. அவர் இந்தப் பாகத்திற்கும் பெரும் பலமாக இருக்கிறார். கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த் ராமதாஸ் காமெடி பெரிதாக வேலை செய்யவில்லை. சண்முகராஜனுக்கும் 'கை' தென்னவனுக்கும் சில காட்சிகள், வசனங்கள் இருக்க ஜோ மல்லூரி, கஜராஜ், பிறைசூடன், உள்ளிட்ட பல நடிக்கக்கூடிய நடிகர்கள் வெறும் 'பேக்டிராப்'பாக நிற்கிறார்கள். யுவன் இசை பலவீனமான பல காட்சிகளில் தனியாகப் போராடுகிறது. பின்னணி இசையில் உற்சாகமூட்டிய யுவன், பாடல்களில் ஏமாற்றிவிட்டார். சக்தியின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக பிரம்மாண்டமாகக் காட்டியிருக்கிறது.