இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனி முதன்முதலாகத் தமிழில் தயாரித்துள்ள திரைப்படம் எல் ஜி எம். இதுவரை விளையாட்டுகளில் நம்பர் ஒன்னாக இருந்து வரும் எம்.எஸ். தோனி தற்பொழுது எல்ஜிஎம் படம் மூலம் சினிமாவிலும் தயாரிப்பாளராகக் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்தப் படம் சினிமாவிலும் அவரை நம்பர் ஒன் அரியணையில் கொண்டு செல்ல, நல்ல ஆரம்பமாக இருந்ததா, இல்லையா?
நாயகன் ஹரிஷ் கல்யாண் நாயகி இவானா ஆகியோர் ஒரே ஐடி கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். இருவருக்கும் இடையே இரண்டு வருட நட்புக்குப் பிறகு காதல் மலர்கிறது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். ஹரிஷ் கல்யாணின் அம்மா நதியா பெண் பார்க்க இவானா வீட்டிற்கு குடும்பத்துடன் செல்கிறார். போன இடத்தில் மாமியார் நதியாவிடம் நன்றாகப் பேசிப் பழகியபின்தான் திருமணம் செய்து கொள்வேன் என இவானா ஹரிஷிடம் கூறுகிறார்.
இதையடுத்து ஹரிஷும், இவானாவும் ஒரு டூர் ஏற்பாடு செய்கின்றனர். அந்த டூருக்கு குடும்பத்துடன் சென்றாலாவது இவானாவிற்கும், நதியாவிற்கும் ஒரு பழக்கம் ஏற்படும் என நினைத்து இரு வீட்டார் குடும்பத்துடனும், நண்பர்களும் மொத்தமாக டூருக்கு செல்கின்றனர். போன இடத்தில் நதியாவுக்கு இந்தப் பிளான் தெரிய வர பிரச்சனை வெடிக்கிறது. இதையடுத்து டூருக்கு வந்த அனைவரையும் கழட்டிவிட்டு நதியாவும், இவானாவும் தனியாக கோவாவிற்கு டூர் செல்கின்றனர். போன இடத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதா, இல்லையா? இருவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு ஹரிஷ், இவானா திருமணம் நடந்ததா, இல்லையா? என்பதே எல் ஜி எம் படத்தின் மீதிக் கதை.
ஒரு வித்தியாசமாக கதைக் கருவைத் தேர்வு செய்து அதைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி. கதைக் கருவை மட்டும் வித்தியாசமாகத் தேர்வு செய்த இயக்குநர் திரைக்கதையில் ஏனோ சற்றுத் தடுமாறி இருக்கிறார். படம் ஆரம்பித்த முதல் பாதி முழுவதும் ஒரு சிறிய கதையை நல்ல காட்சி அமைப்புகளோடு ஸ்லோ அன் ஸ்டெடியாக நகர்த்தி ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர், இரண்டாம் பாதியில் ஏனோ பாதை மாறி பல திசைகளில் கதையைப் பயணிக்கச் செய்து கடைசியில் சுபம் போட்டு முடித்திருக்கிறார். மகனுக்கும் அம்மாவுக்குமான கெமிஸ்ட்ரியை மிகச் சிறப்பாக ரசிக்கும்படி காட்சிப்படுத்தி இருக்கிறது இப்படம். அதேபோல் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கும் நண்பர் மிர்ச்சி விஜய்க்குமான கெமிஸ்ட்ரியும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதுவே படத்திற்கு பிளஸ் ஆகவும் மாறி இருக்கிறது.
உறவுகளுக்கு இடையே இருக்கும் புரிதல்களை மிக அழகாக வெளிப்படுத்தும்படியான காட்சி அமைப்புகள் மூலம் நேர்த்தியாகத் திரைக்கதை அமைத்த இயக்குநர், அதைச் சற்று மெதுவாக நகர்த்தி இருக்கிறார். அவை ரசிக்கும்படி இருந்தாலும் காட்சிகள் ஒரே திசையில் பயணிக்காமல் பாதை மாறி திக்கு தெரியாமல் ஆங்காங்கே பயணித்து ஒரு வழியாக கடைசியில் ஆரம்பித்த இடத்திற்கு வந்து சுபமாக முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதி படத்தை இன்னும் கூட சிறப்பாக கையாண்டிருக்கலாம். மற்றபடி, கதைத் தேர்வும் அதில் நடித்த நடிகர்களின் பங்களிப்பும் மிகச் சிறப்பாக அமைந்து இப்படத்தை கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறது.
இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் கதாபாத்திரத் தேர்வு. கதாபாத்திர தேர்வு அனைத்துமே மிக பிரஷ்ஷாக அமைந்திருக்கிறது. நாயகன் ஹரிஷ் கல்யாண் எப்போதும்போல் தனது சார்மிங்கான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி இவானாவும் தனது பங்குக்கு சின்னச் சின்ன முகபாவனைகளில் கூட சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு முத்தாய்ப்பாக இவரது வசன உச்சரிப்பும் அழகாக அமைந்திருக்கிறது. படத்தின் இன்னொரு நாயகி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு அழகாக நடித்திருக்கிறார் நடிகை நதியா. வசன உச்சரிப்பு, முக பாவனைகளில் அப்படியே எண்பதுகளின் நதியாவைக் கண்முன் நிறுத்துகிறார்.
நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் மிர்ச்சி விஜய் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறார். இவரது டைமிங் வசனங்கள், ரைமிங் பஞ்ச்சுகள் பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறது. படம் முழுவதும் நாயகனுடன் பயணிக்கும்படியான இவரது கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல் இந்தப் படத்திலும் யோகிபாபு இருக்கிறார். பல இடங்களில் சிரிப்பு மூட்ட முயற்சி செய்து இருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரங்களில் வரும் ஸ்ரீநாத், வினோதினி, விக்கல் டீம், வெங்கட் பிரபு, விடிவி கணேஷ், தீபா சங்கர், ஆனந்த் வைத்யா, சாண்டி உள்ளிட்ட பலர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்து கவனம் பெற்று இருக்கின்றனர்.
டைரக்ஷன் மட்டுமல்லாது இப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணியே இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை நன்று. விஷ்வஜித் ஒளிப்பதிவில் டூர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குடும்பத்துடன் சென்று பார்க்கும் பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கும் இப்படம் இன்னமும் கூட வேகத்துடனும், விவேகத்துடனும் அமைந்திருக்கலாம்.
எல் ஜி எம் - மினிமம் கியாரண்டி.