நாட்டில் இளம் வயதிலேயே கரு கலைப்பு என்பது சர்வ சாதாரணமாக பெருகிவருகிறது. பெண் குழந்தை என்பதாலும், குழந்தையை வளர்க்க வசதி இல்லை என்பதாலும், திருமணத்திற்கு முன்பே கரு உருவாவதனாலும், திருட்டுத்தனமாக கலைக்கப்படும் கருக்களால் வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும், தாய்மார்களும் இறக்கின்றனர். அப்படி திருட்டுத்தனமாக நடக்கும் கரு கலைப்பினால் ஏற்படும் விளைவு என்ன என்பதை அலச முயற்சி செய்திருக்கிறாள் இந்த 'தியா'.
டீனேஜர்களாக இருக்கும் சாய்பல்லவியும், நாகசவுரியாவும் காதலில் மூழ்கி அதில் சாய்பல்லவி கர்ப்பமாகிறார். படிக்கும் வயதில் குழந்தை பிறந்தால் இருவரின் வாழ்க்கை வீணாகிவிடும் என்று கருதிய இருவீட்டாரும் கூடி பேசி கருவை கலைத்துவிடுகின்றனர். பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து சாய்பல்லவியும், நாகசவுரியாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்போது எதிர்பாரத விதமாக நாகசவுரியாவின் தந்தை உட்பட கருவை கலைப்பில் சம்பந்தப்பட்டவர்கள் இறக்கின்றனர். இதையடுத்து சாய்பல்லவியின் வயிற்றில் இருந்து கலைக்கப்பட்ட கரு பேயாகி, கலைக்க காரணமாக இருந்தவர்களை பழிவாங்குகிற உண்மை சாய் பல்லவிக்கு பின்னர் தெரியவருகிறது. இதையடுத்து கடைசியில் கரு கலைப்பிற்கு காரணமான சாய்பல்லவியின் கணவர் நாகசவுரியவையும் அந்த கரு பழி வாங்க முயற்சி செய்ய, அதை சாய்பல்லவி தடுத்தாரா...? இல்லையா...? என்பதே படத்தின் மீதி கதை.
தமிழில் அறிமுகமாகியிருக்கும் சாய்பல்லவி தனக்கு கொடுத்த அழுத்தமான கேரக்டரை மிகைப்படுத்தாமல் அழகாக நடித்துள்ளார். கலைந்த கருவை எண்ணி துடிப்பது, பின் கலைத்த குழந்தையை பார்த்தபின் வெளிப்படுத்தும் தாய்ப்பாச நடிப்பை நன்கு வெளிப்படுத்தியது, ஆபத்தில் உள்ள கணவரை காப்பாற்ற துடிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் உருகவைத்துளார். நாயகன் நாகசவுரியாவுக்கு நடிக்க பெரும்பான்மையான இடங்களில் வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை திருப்தியாக செய்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக வரும் வெரோனிகா படம் முழுவதிலும் அனுதாபத்தையும், கோபத்தையும் காட்ட முயற்சி செய்துள்ளார். அவரது சலனமில்லாத பார்வை அழகு. இருந்தும் அவர் வரும் காட்சிகளில் மிரட்டல் குறைவு. போலீசாக வரும் ஆர்.ஜே. பாலாஜியின் கதாபாத்திரம் எரிச்சலூட்டுகிறது. அவரது கதாபாத்திரத்தை இப்படத்தில் வீணடித்துள்ளனர்.
சாம் சி. எஸ்ஸின் பின்னணி இசை மிரட்டல். ஒவ்வொரு திகில் காட்சிகளிலும் சரி, அனுதாபம் மிகுந்த காட்சிகளிலும் சரி காட்சிகளுக்கேற்ற இசையால் பின்னியிருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் அழகு. தனது வழக்கமான கதைசொல்லும் பாணியையே இப்படத்திலும் கடைபிடித்துளார் இயக்குனர் ஏ.எல். விஜய். அழுத்தமான காட்சிகளிலும் கூட கதாபத்திரங்கள் மிதமாகவே நடிப்பை வெளிப்படுத்துவது அயர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹாரர் படம் எடுப்பதென்று முடிவுசெய்துவிட்டு அதில் பழிவாங்குதல் என்னும் வழக்கமான விஷயமே இருந்தாலும் கூட அதில் உணர்வு பூர்வமாக சமுகத்திற்கான ஒரு விஷயத்தை சேர்த்ததை பாராட்டலாம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சஸ்பென்சையும், சுவாரஸ்யத்தையும் கூட்டியிருக்கலாம். இருப்பினும் யாரும் எதிர்பாராத வித்தியாசமான கிளைமாக்ஸ் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
தியா - பழிவாங்கும் பேய்... பாசமான தாய்