2015 ஆம் ஆண்டு அருள்நிதி அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவான டிமான்டி காலனி திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. வழக்கமான பேய் படத்திலிருந்து வித்தியாசமான ஒரு திரைக்கதை மூலம் உருவான திரைப்படம் அதன் காரணமாகவே நன்றாக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி இருக்கிறது. முதல் பாகம் கொடுத்த அதே வித்தியாசத்தையும், வரவேற்பையும் இந்த படமும் கொடுத்ததா, இல்லையா?
நாயகி ப்ரியா பவானி சங்கரின் கணவர் சாம் மர்மமான முறையில் தூக்கிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த தற்கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆவிகளுடன் பிரியா பவானி சங்கர் பேச முற்படுகிறார். அந்த சமயம் சாமுக்கு பதிலாக அவரிடம் முதல் பாகத்தில் இறந்த வேறு ஒரு ஆவி தொடர்பு கொண்டு பேசுகிறது. முதல் பாகத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அருள்நிதி இந்த பாகத்தில் காப்பாற்றப்படுகிறார். அவருக்கு ஒரு தம்பி இருப்பதாகவும் அவருக்கும் இவருக்கும் அந்த டிமான்டி காலனி பேயால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆவி கூறுகிறது. அதேபோல் ப்ரியா பவானி சங்கர் கணவரின் சாவுக்கும், அருள்நிதி உயிருக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாகவும் கூறுகிறது. இதைத்தொடர்ந்து பிரியா பவானி சங்கர் கணவரின் சாவுக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? இவர் ஏன் அருள்நிதியின் உயிரை காப்பாற்ற வேண்டும்? அதற்கு ஏன் இவர் இந்த அளவு பாடுபடுகிறார்? என்பதே டிமான்டி காலனி 2 படத்தின் மீதி கதை.
வழக்கமாக பேய் படம் என்றாலே ஒரு இருட்டான இடம், சுற்றி சுற்றி கருப்பான உருவம் வந்து செல்வது, அது ஒரு பங்களாவுக்குள் ஒளிந்து கொண்டு அனைவரையும் பயமுறுத்துவது, கோரமான முகத்தை வைத்து பயமுறுத்துவது போன்றவையே பெரும்பாலும் பேய் படங்களை ஆக்கிரமித்து இருக்கும். இந்த கிளிஷேவான விஷயங்கள் எதுவுமே பெரும்பாலும் படத்தில் இடம்பெறாததால் டிமான்டி காலனி முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதேபோன்ற விஷயத்தை இன்னும் மெருகேற்றி ஒரு படி மேலே வைத்து டிமான்டி காலனி 2 படத்தைக் கொடுத்து படத்தையும் வெற்றி பெற செய்து கரை சேர்த்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்தில் ஒரு சிறிய ரூமில் பேயிடம் மாட்டிக் கொண்டு நாயகர்கள் படும் பாட்டை மிக மிக விறுவிறுப்பாகவும் வேகமாகவும் பயமுறுத்தும் படியும் சொன்ன அதை ஞானமுத்து இந்த தடவை ஒரு ரெஸ்டாரண்டை தேர்வு செய்து அதில் மாட்டிக்கொள்ளும் நாயகன் நாயகி என கதையை உருவாக்கி அதன் மூலம் ரசிக்கும்படியான விறுவிறுப்பான திரை கதையை கொடுத்து பார்ப்பவர்களுக்கு பரவசத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். பேய் படம் என்றாலே பயமுறுத்தி விட்டால் படம் ஜெயித்து விடும் என்ற மித்தை உடைத்து கதையும் கதை கருவும் ஒரு பேய் படத்துக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்ற உண்மையை இந்த படத்தின் மூலம் உடைத்து இருக்கிறார். படம் ஆரம்பித்து நான் லீனியரில் பயணிக்கிறது. முன்பாகத்துக்கும் இரண்டாம் பாகத்திற்கும் ஆன தொடர்பை மிகவும் வித்தியாசமான திரை கதையாக கொடுத்து பல்வேறு காட்சிகளுக்குள் முக்கியமான கதை கருவை வைத்து ஏதோ பேயை காண்பித்து பயமுறுத்தினால் போதும் மட்டும் என்று இல்லாமல் முதல் பாகத்திற்கான கதை கருவில் இருந்து வேறு ஒரு கிளை கதையை உருவாக்கி அதையும் சுவாரசியமாக காட்டி படத்தையும் விறுவிறுப்பாக கொடுத்து முதல் பாதியை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இரண்டாம் பாதியையும் அதே வேகத்துடன் ஆரம்பித்து போகப் போக பேய் வரும் காட்சிகளில் மட்டும் சற்றே அயற்சியை கொடுத்து பின் மீண்டும் விறுவிறுப்பான வேகமான காட்சிகளால் படத்தை நேர்த்தியாக கொடுத்து ஒரு நல்ல பேய் படம் பார்த்த திருப்தியை கொடுத்து தியேட்டரில் கைதட்டல் பெற்று இருக்கிறார்.
நாயகன் அருள்நிதி இந்த படத்தில் இரட்டை வேடம். ஒரு நாயகன் துடுக்கான நாயகனாகவும் இன்னொரு நாயகன் டீசன்ட்டான துடுக்கு கொண்ட நாயகனாகவும் கலக்கி இருக்கிறார். படத்தில் இரண்டு நாயகர்கள் இருந்தாலும் ஒரு நாயகனுக்கு மட்டுமே படம் முழுவதும் அதிக வேலை. அதை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்து கவனம் பெற்று இருக்கிறார் நாயகன் அருள்நிதி. நாயகி பிரியா பவானி சங்கர் படத்தின் இன்னொரு கதாநாயகனாகவே படம் முழுவதும் வருகிறார். இவரின் கதாபாத்திர படைப்பும் படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. தன் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். பிரியா பவானி சங்கரின் மாமனாராக வரும் அருண்பாண்டியன் தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். புத்த மத சாமியாராக நடித்திருக்கும் டிசெரிங் டோர்ஜி, அருள்நிதி சித்தப்பா முத்துக்குமார், கல்லூரி மாணவியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்தை தாங்கி பிடிக்க உதவி இருக்கின்றனர். இவர்கள் அனைவரின் கதாபாத்திரமுமே நன்றாக உபயோகப்படுத்தி இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
வழக்கம்போல் காது கிழியும் சத்தமான இசையை கொடுத்து இந்த தடவையும் ஆங்காங்கே காதை மூட செய்திருக்கிறார் இசையமைப்பாளர் சாங் சி எஸ். பாடல்கள் சுமார் ரகம் பின்னணி இசை சில இடங்களில் காதில் கிழித்தாலும் பல இடங்களில் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் பேய் மற்றும் ஹோட்டல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு பார்ப்பவர்களுக்கு சிலிப்பை கொடுத்திருக்கிறது.
முதல் பாகத்தை ஒரு ரூம்குள்ளேயே வைத்து முடித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை சற்றே விரிந்து பல்வேறு இடங்களுக்கு டிராவல் செய்து அதே போல் கதையையும் இன்னும் நன்றாக விரிவுபடுத்தி ஒரு நல்ல பயமுறுத்தும் பேய் படம் பார்த்த உணர்வை இப்ப படம் மூலம் கொடுத்து ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்திருக்கிறார்.
டிமான்டி காலனி 2 - திகில் காலனி!