Skip to main content

‘டாடா’ திரைப்படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம் 

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

dada movie review

 

பிக் பாஸ்-க்கு பிறகு கவின் நடிப்பில் வெளியாகியுள்ள இரண்டாவது படம் ‘டாடா’. முதல் படம் ‘லிஃப்ட்’ ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படமும் வரவேற்பைப் பெற்றதா? இல்லையா?

 

பொறுப்பற்ற மாணவராகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் கவின், மாணவி அபர்ணாதாஸ் இருவரும் ஒரே கல்லூரியில் படித்துக்கொண்டு காதலிக்கின்றனர். இவர்கள் காதல் கர்ப்பம் வரை சென்று விடுகிறது. இந்த கர்ப்பத்தை கலைக்க கவின் கூற அதை மறுக்கிறார் அபர்ணாதாஸ். இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டு சிறிய வாடகை வீட்டில் வசிக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் கவின் மனைவி பேச்சைக் கேட்காமல் குடித்துவிட்டு ஊதாரியாகவே திரிகிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அபர்ணாதாஸ் குழந்தையைப் பெற்று அதை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு கண்காணாமல் பெற்றோருடன் சென்று விடுகிறார். அதுவரை குடிகாரனாகவும் பொறுப்பற்றும் திரிந்து கொண்டிருந்த கவின் தனது மகனுக்காக நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்து குழந்தையைத் தனி ஆளாக வளர்க்கிறார். இதையடுத்து சில பல ஆண்டுகள் கழித்து மகன் வளர்ந்த சமயம் நாயகி அபர்ணாதாஸை கவின் மீண்டும் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்கிறது. இதையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா? அபர்ணா தாஸ் ஏன் இவர்களை விட்டு பிரிந்து சென்றார்? இவர்களின் குழந்தையின் நிலை என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்துள்ளது ‘டாடா’ திரைப்படம்.

 

மிகவும் அரதப்பழசான ஒரு கதையை அதுவும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகும் என்று எளிதில் யூகிக்கக் கூடிய வகையில் உள்ள ஒரு கதையை சிறப்பான திரைக்கதை மூலம் இரண்டே கால் மணி நேரம் அயற்சி இல்லாமல் கூறி வெற்றி அடைந்துள்ளார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு. இவரது ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளும், மனதின் ஆழம் வரை சென்று வருடும் அழகான சென்டிமென்ட் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தை கரை சேர்த்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாகத் தந்தைக்கும் மகனுக்குமான சென்டிமென்ட் காட்சிகளும், நாயகனுக்கும் நாயகிக்குமான காதல் காட்சிகளும், மிக தத்ரூபமாக அமைந்து அதே சமயம் எதார்த்தமாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு நல்ல ஃபீல் குட் மூவியை கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகும் என்று முன்கூட்டியே ஆடியன்ஸ்க்கு தெரிந்திருந்தாலும் காட்சிகளுக்கு இடையே எந்த வகையிலும் போர் அடிக்காமல் அதேசமயம் உருகவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து இந்த ஆண்டின் கவனிக்கத்தக்க ஒரு படமாக இப்படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு. இவருக்கு விருதுகள் நிச்சயம். 

 

dada movie review

 

நாயகன் கவின் எப்போதும் போல் தனது எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் சின்ன சின்ன முக பாவனைகள் மற்றும் அழகான வசன உச்சரிப்புகள் மூலம் கவனம் பெற்றுள்ளார். இவரைப் போலவே தனக்கு அதிக ஸ்பேஸ் இப்படத்தில் இல்லை என்றாலும் கொடுத்த கொஞ்ச நஞ்ச இடங்களிலும் சிறப்பாக ஸ்கோர் செய்து நடித்திருக்கிறார் நாயகி அபர்ணா தாஸ். இவரது மென்மையான நடிப்பு பார்ப்பவர்களுக்கு அனுதாபம் ஏற்படுத்துகிறது. பீஸ்ட் படத்தில் சிறிது நேரமே வந்து மனம் கவர்ந்த இவர் இப்படத்திலும் கவனம் பெற்றுள்ளார். நாயகன் கவினின் நண்பர்களாக வரும் அருவி, வாழ் பட நாயகன் பிரதீப் ஆண்டனி மற்றும் முதல் நீ முடிவும் நீ புகழ் ஹரிஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து மனதில் பதிகின்றனர். குறிப்பாக முதல் பாதியை ஹரிஷும் இரண்டாம் பாதியை பிரதீப் ஆண்டனியும் தங்களது தோள் மேல் சுமந்து படத்தை தூண் போல் நின்று தாங்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு மிகவும் பிளஸ் ஆக அமைந்து பார்ப்பவர்களை சில முக்கியமான ட்ராஜடியான காட்சிகளைக் கூட சிரிக்க வைத்து அயற்சியை தவிர்க்கச் செய்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் பிரதீப் ஆண்டனி ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றுள்ளார்.

 

dada movie review

 

கவினின் தாய் தந்தையாக வரும் பாக்கியராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் எந்தெந்த இடங்களில் எவ்வளவு முக்கியத்துவம் தேவையோ அதை தங்களது அனுபவ நடிப்பால் கொடுத்து படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளனர். இவர்களது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளது. கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துவிட்டு சென்றிருக்கிறார் விடிவி கணேஷ். இவருக்கும் கவினுக்குமான கெமிஸ்ட்ரி லைட்டாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஞாபகப்படுத்துகிறது. அது நன்றாகவும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. கவினின் மகனாக நடித்திருக்கும் குழந்தை ஆத்விக் படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி இருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பும் அழகான தமிழ் உச்சரிப்பும் படம் பார்ப்பவர்களை நெகிழச் செய்திருக்கிறது. அதேசமயம் இவருக்கும் கவினுக்குமான அப்பா மகன் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து அதுவே படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. 

 

ஜென்மார்ட்டின் இசையில் ‘கிருட்டு கிருட்டு’ பாடல் ஆடல் ரகம். பின்னணி இசை மனதை வருடி உள்ளது. குறிப்பாக காதல் காட்சிகளைக் காட்டிலும் சென்டிமென்ட் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜென்மார்ட்டின். எழிலரசு ஒளிப்பதிவில் காதல் காட்சிகளும் சென்டிமென்ட் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இன்டீரியர் காட்சிகள் அழகான ஒளி அமைப்புகள் மூலம் அழகாகத் தெரிகிறது.

 

dada movie review

 

ஒரு எளிமையான கதையை எடுத்துக்கொண்டு அதை தன் சிறப்பான, எதார்த்தமான, ஜனரஞ்சக திரைக்கதை மூலம் அடுத்தடுத்து நடக்கப் போகும் விஷயங்களை முன்கூட்டியே யூகிக்கும்படி இருந்தாலும் அதைக் கொஞ்சம் கூட அயற்சி ஏற்படாதவாறு அழுத்தமான காட்சி அமைப்புகள் மூலம் சிரிக்கவும், ரசிக்கவும், உருகவும் வைத்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு. மொத்தத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ஃபீல் குட் மூவியாக மாறி இருக்கிறது ‘டாடா’ திரைப்படம்.

 

டாடா - அன்பானவன்!

 

 

சார்ந்த செய்திகள்