தொடர்ந்து சிறுமிகளை கடத்திக் கொலை செய்யும் சைக்கோ. அவனை தேடியலைந்து பிடிக்கும் போலீஸ்கார நாயகன். பல படங்களில் பார்த்திருக்கும் சிறிய லைன்தான். ஆனால் அந்த பல படங்களில் இருந்து வேறுபடுகிறது ராட்சசன். எப்படி?
கதாநாயகனின் பாத்திரப் படைப்பிலிருந்து சுவாரசியம் துவங்குகிறது. இயக்குனராகும் ஆசையில் இருக்கும் ஒரு உதவி இயக்குனர். தன் முதல் படத்திற்காக பல முக்கியமான கொலை வழக்குகளை ஆராய்ந்து குறிப்பெடுத்து அதிலேயே மூழ்கியிருக்கிறான். வழக்கமான பல காரணங்களால் முதல் பட வாய்ப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருக்க, குடும்ப சூழ்நிலையின் காரணமாக, அப்பாவின் போலீஸ் வேலைக்கு போக சம்மதிக்கிறான். எஸ்.ஐ தேர்வு எழுதி சப் இன்ஸ்பெக்டராகி விடுகிறான். அவன் சந்திக்கும் முதல் வழக்கு அவன் கதைக்காக எடுத்து வைத்திருந்த வழக்கு ஒன்றுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
அந்த நூலைப் பிடித்து கொலைகாரனை நோக்கிய தேடலை ஆரம்பிக்க, அது எப்படி சுற்றிச் சுழன்று, குழப்பமான முடிச்சாகி பின் மெல்ல அவிழ்கிறது என்பதுதான் ராட்சசன். முண்டாசுப்பட்டி படத்திற்குப் பிறகு முற்றிலும் வேறொரு களத்தை கையெலெடுத்திருக்கிறார் இயக்குனர் ராம்.
தொடர் கொலைகள், ஆங்காங்கே கிடைக்கும் சின்ன சின்ன க்ளூக்கள், அதைப் பிடித்து நடக்கும் தேடல்கள், திருப்பங்கள் என ஒரு பரபர த்ரில்லருக்கான அத்தனை அக்மார்க் அம்சங்களும் தவறாமல் இடம்பிடித்திருக்கிறது. படத்தின் தொழில்நுட்பத் தரமும் முக்கியமாக இசையும் த்ரில்லர் படத்திற்கான தடதடப்பை தக்கவைக்கின்றன.
இயக்குனர் கனவில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டராக விஷ்ணு. முந்திய படங்களைக் காட்டிலும் உடல் மொழியிலும் உணர்வுகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இருந்தாலும் இன்னும் ஏதோ ஒரு தடுப்புச் சுவருக்குள்ளேயே உணர்வுகளை அடக்கிக் கொண்டிருப்பது போன்றதொரு தோற்றம். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இன்னும் கொஞ்சம் உடைபட்டிருக்கலாமே எனத் தோன்றுகிறது.
அமலாபாலுக்கு பெரிய வேலை இல்லை. முண்டாசுப்பட்டி ராமதாஸ்க்கு முக்கியமான கதாப்பாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார். சப் இன்ஸ்பெக்டருக்கும் இன்ஸ்பெக்டரும் இடையில் எழும் ஈகோ யுத்தம் திரைக்கதைக்கு பல இடங்களில் உதவுகிறது என்றாலும், அதற்கான காரணமும் அதன் ஆழமும் அரைகுறையாய் இருப்பது போன்ற உணர்வு எழுகிறது.
நாயகன் உதவி இயக்குனராய் இருந்து போலீஸாக ஆகிறான் என்பது சுவாரசியமான ஒரு பாத்திரப்படைப்பாக இருந்தாலும், அது திரைக்கதையில் எந்தளவு முக்கியமான பங்காற்றுகிறது, அதனால் கதைக்கு என்ன பலன் என பல கேள்விகள் எழுகிறது. நேரடியான போலீஸாக இருந்திருந்தாலும் இதுவெல்லாம் நடந்திருக்குமே, இயக்குனரின் திறமைகளை போலீஸ்காரனாக பயன்படுத்தி அந்த கேஸை முடித்திருக்கலாமே என பல கேள்விகளை எழுப்புகிறது அந்த பாத்திரப்படைப்பு.
விறுவிறுவென நகரும் திரைக்கதைதான். ஆனால் பெரும்பாலான திருப்பங்கள் எளிதில் யூகித்து விடும்படி இருப்பதும், அவை திரையில் விரிய எடுத்துக்கொள்ளும் நேரமும் படத்தை சற்றே பின்னே இழுக்கின்றன.
ஆனால் தொடர்கொலைகளை செய்யும் அந்த சைக்கோ யார் என்பதும் அந்த பின்கதையும் அதுசார்ந்த திருப்பங்களும் புதுமையாகவும் சுவாரசியமாகவும் கையாளப்பட்டுள்ளன. அதற்கு இத்தனை தூரம் யோசித்தவர்கள், மொபைல் சிக்னலை ட்ராக் செய்தே வில்லனை கண்டுபிடிக்கும் வழமையான முறைகளை தவிர்த்து அதற்கும் கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது யோசித்திருக்கலாம். திரைக்கதையின் மிகமுக்கியமான சம்பவங்கள் அனைத்தும் யதேச்சையாக நிகழ்வது மிகுந்த செயற்கைத்தனத்துடன் இருக்கின்றன. கோ இன்சிடென்ஸ் இருக்கலாம். அதுவே கதையை நகர்த்தலாமா?
ராட்சசத்தனமான த்ரில்லர் இல்லைதான். ஆனால் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் படம் பார்த்த நிறைவை தர தவறவில்லை ராட்சசன்.