Skip to main content

தமிழக அரசியலுக்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தம் இருக்கு...? செக்கச் சிவந்த வானம் - விமர்சனம்  

Published on 27/09/2018 | Edited on 28/09/2018

'புத்திய மாத்தி பொழைக்கச் சொன்னா கத்திய மாத்தி காவு வாங்கியே செவந்து போச்சு நெஞ்சு'... படத்தில் ஆங்காங்கே வரும் இந்த பாடல் வரிகளைப் போல அதிகாரமென்று வரும்போது உறவு, அன்பு என்பதையெல்லாம் மறந்துவிட்டு நடத்தும் சகோதர யுத்த ரத்தத்தால் செக்கச் சிவந்த வானம் இது. தமிழ் சினிமாவின் காட்சி மொழியிலும் ஒளிப்பதிவு, ஒலி, இசை, குறியீடுகள் என பல விஷயங்களில் அடுத்த கட்டத்தைக் காட்டிய முன்னோடியான இயக்குனர் மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படம் இந்த செக்கச் சிவந்த வானம்.

 

aravind samy



சேனாபதி, (பிரகாஷ்ராஜ்) சென்னையின் மிக பலம் பொருந்திய பெரும்புள்ளி. ரியல் எஸ்டேட், மாஃபியா என குற்ற நடவடிக்கைகள் இவரது கட்டுப்பாட்டில் இருக்கும். அவருக்கு மூன்று மகன்கள்... வரதராஜன் (அரவிந்த்சாமி), தியாகராஜன் (அருண்விஜய்), எத்திராஜ் (சிம்பு). திடீரென்று ஒரு நாள் சேனாபதி மீது நடக்கும் கொலை முயற்சியில் படுகாயமடைகிறார்.  இந்தத் துப்பாக்கிச் சூட்டை ஏற்பாடு செய்தது யார், பெரியவர் செத்தா யாருக்கு பெரிய லாபம் என்ற கேள்விக்கான விடையும் அதன் விளைவுகளுமே செக்கச் சிவந்த வானம். ட்ரைலரைப் பார்த்து  'காட்ஃபாதரா பொன்னியின் செல்வனா' என்றெல்லாம் பேச்சுக்கள் ஓட 'அவ்வளவெல்லாம் யோசிக்காதீங்க, இது ரொம்ப சிம்பிள்' என சிம்பிளான, வழக்கமான ஒரு கதையை, சரியான ட்விஸ்ட்டுடன் முடித்திருக்கிறார் மணிரத்னம். 'முதலில் பிரிக்கணும், அப்புறம் அழிக்கணும்' என்னும் அடிநாதம் தமிழக அரசியலில் நாம் காணும் காட்சிகளை நினைவு படுத்தலாம்.

 

str



படத்தின் உருவாக்கம், ஒளிப்பதிவு தரம், இசையைப் பயன்படுத்திக்கொண்ட விதம் என அனைத்திலும் மணியின் தரம் எப்பொழுதும் போல உச்சம். முதல் நொடியிலிருந்தே தொடங்கிவிடும் கதையில் காட்சிகள் சரசரவென தொகுக்கப்பட்டதில் ' போர் அடிக்கிறது' என்ற உணர்வு ஏற்பட எங்கும் இடைவெளி இல்லை. நான்கு நாயகர்களுக்கும் நல்ல பங்களிப்பு, நடிப்பைக் காட்ட ஆளுக்கு ஒரு ஸீன், ஆக்ஷனுக்கு ஒரு ஸீன் என அழகாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது படம். முரட்டு அரவிந்த்சாமி, க்ளாஸ் அருண் விஜய், கேஷுவல் எஸ்.டி.ஆர்... இவர்களது பாத்திரங்கள் அவ்வாறே...

படத்தில் மூவர் போட்டியில், சின்ன வித்தியாசத்தில் முதலிடம் சிம்புவுக்குக் கிடைக்கிறது. ஸ்டைலான தோற்றம், அசால்ட்டான பேச்சு என ஈர்க்கிறார். ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் அவர் ஓட சிரமப்படுவது போல நமக்கு ஒரு உணர்வு. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளாமல் தனி ரூட்டில் மிக எளிதாக அசத்துகிறார் விஜய் சேதுபதி. அவரது வழக்கமான, இயல்பான பேச்சையும் செயல்பாடுகளையும் அழகாகப் பயன்படுத்தியுள்ளார் மணிரத்னம். "புதுசா நல்ல சட்டை போட்டிருந்தேன் மேடம், அதுல கை வச்சுட்டான், சட்டை அழுக்காயிருச்சு, அதான் டென்சன் ஆயிட்டேன்" என்று ஒருவனைத் தாக்கியதற்கு உயரதிகாரிகளிடம் விளக்கம் சொல்லும் சஸ்பெண்டான போலீசாக படத்தின் சிரிப்புப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

 

arun vijay



ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா... மூன்று நாயகிகளும் சிறப்பான தோற்றம், நடிப்பு என்றாலும் மனதில் நிற்பது ஜோதிகாவும், சேனாபதியின் மனைவியாக நடித்துள்ள ஜெயசுதாவும்தான். தன் தந்தையை கொன்று விட்ட மைத்துனனிடம் "நீங்க நல்லா இருப்பீங்களா தம்பி" என கேட்கும் இடத்தில் 'ஜோ' நிற்கிறார். "என்னடா உன்னை வீட்ல காணாம்னு தேடுறாங்க, நீ இங்க இருக்க" என அணி மாறிய அடியாளிடம் எதார்த்தமாக ஜெயசுதா கேட்பது ஆண்களின் அதிகார யுத்தத்தில் பெண்களின் நிலை குறித்து சொல்லும் ஒரு சின்ன சாம்பிள்.  பிரகாஷ் ராஜுக்கு இது பெரிய விஷயமே இல்லை. படம் விளக்கத் தவறிய 'சேனாபதி'யின் கெத்தை தன் நடிப்பால் விளக்கியிருக்கிறார். தியாகராஜன், சிவா அனந்த் நடிப்பும் சிறப்பு.

வன்மம், வன்முறை, மாற்றி மாற்றி தாக்குவது, வியூகம் என பரபரப்பாகச் சென்றாலும் சகோதரர்களுக்குள் இத்தனை வன்மத்துக்கான அடிப்படை காரணமோ தர்க்கமோ பலமாக இல்லாதது பெரிய குறை. (நிஜத்திலும் சகோதர யுத்தங்களை பார்க்கிறோம் என்றாலும்) 'பாத்திரங்களின் பின்புலம் ஆழமாக இல்லை' என்பது பொதுவாக மணிரத்னம் படங்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு... அது உண்மையும் கூட. ஆனால் அவரோ நடக்கும் சம்பவங்களின் முன்-பின் பகுதிகளை ரசிகர்களின் கற்பனைக்கே பெரும்பாலும் விட்டுவிடுகிறார். 'இது இயக்குனர் கோடார்ட் பாணி' என அவரே முன்பு கூறியிருக்கிறார். ஆனாலும்...? "நம்ம வீட்ல எல்லோரும் சுயநலவாதிகள். பெரியவர் அப்படி வளர்த்துட்டார்", "அங்க நான் முப்பது பேத்துல ஒருத்தன், இங்க நான்தான் ராஜா" என மணிரத்னம் - சிவா அனந்தின் சின்னச் சின்ன வசனங்கள் மட்டுமே பாத்திரங்களின் தன்மையை விளக்குகின்றன. வசனங்கள்தான் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து பலமாகவும் இருக்கின்றன.  இதையெல்லாம் தாண்டி நான்கு வலிமையான ஈர்ப்புள்ள நாயகர்களின்  'ப்ரெசன்ஸு'ம், இறுதியில் வரும் அந்த ட்விஸ்ட்டும் குறைகளை மறக்கச் செய்வதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றன. இப்படி ஒரு கூட்டணியை சாத்தியப்படுத்தியது மணிரத்னம் ஃபேக்டர்.

 

jothika



ஏ.ஆர்.ரஹ்மான் இசை மணிரத்னம் படத்தில் எப்படி வேலை செய்யும் என்பது நாம் அறிந்ததே. செக்கச் சிவந்த வானத்தில் இன்னும் அதிகமாக வேலை செய்திருக்கிறது. எவ்வளவு நவீன இசை வந்தாலும், 'இது அதுக்கும் மேல' என்பது போல் தன் படங்களில் உணர வைக்கிறார் ரஹ்மான். முழு பாடல்களையெல்லாம் போய் யூ-ட்யூபில் கேளுங்க, இங்க அதுக்கெல்லாம் நேரமில்லை என்பது போல பாடல்கள் வெட்டப்பட்டு படத்திற்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அது பெரும் பலமாக இருக்கிறது. எத்தனையோ ட்ரோன் கேமரா ஷாட்டுகளைப் பார்த்துவிட்டாலும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் அவை புதிதாக இருக்கின்றன. மணிரத்னத்தின் ஸ்பெஷலான நுண் அர்த்தம் கொண்ட கோணங்கள், ஃப்ரேம்கள் இதில் அதிகமில்லை என்றாலும் படம் கேட்ட பரபரப்பை ஒளிப்பதிவு தந்திருக்கிறது. இதற்கு கிளைமாக்ஸ் காட்சி ஒரு சாம்பிள். ஸ்ரீகர் பிரசாத் கூர்மையாகவும் வேகமாகவும் காட்சிகளை தொகுத்துள்ளார்.

'கடல்', 'காற்று வெளியிடை' மணிரத்னத்தை மட்டும் பார்த்த 2000 கிட்ஸ்சுக்கு இது 'அக்னிநட்சத்திரம்' ஸ்டைல் மணிரத்னம்... நாயகன், தளபதி பார்த்தவர்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். மொத்தத்தில் இது மணிரத்னம் மசாலா...  

 

                

சார்ந்த செய்திகள்