சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரிலேயே அதிக நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 2005 இல் வெளியான சந்திரமுகி திரைப்படம். முதன் முதலில் தமிழ் சினிமாவில் காமெடி பேய் படம் என்ற புதிய ஜானரை இந்தப் படமே அறிமுகம் செய்து வைத்தது. அதன் பின் இந்த ஜானரை பின்பற்றி வெளியான முனி, காஞ்சனா சீரிஸ் உட்பட பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. அந்த வகையில் தற்பொழுது ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரத்தை ராகவா லாரன்ஸ் ஏற்று நடித்து சந்திரமுகி 2 பாகம் தற்பொழுது ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்தப் படம் முதல் பாகம் கொடுத்த அதே பரவசத்தை மீண்டும் கொடுத்ததா, இல்லையா?
முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு பெரிய குடும்பம் வேட்டையபுரம் அரண்மனைக்கு தங்க வருகின்றனர். வந்த இடத்தில் அவர்கள் மீண்டும் சந்திரமுகி ஆவியை தூண்டி விட்டு வெளியே வர வைத்து விடுகின்றனர். அதன் பின் சந்திரமுகி ஆவி ராதிகாவின் பெரிய குடும்பத்தை அழிக்க திட்டமிடுகிறது. இதை தடுக்க வேட்டையன் ஆவியும் களம் இறங்குகிறது. இதையடுத்து இந்த ஆவிகளிடமிருந்து அந்த குடும்பம் தப்பித்ததா, இல்லையா? வேட்டையனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் சண்டையில் யார் ஜெயித்தார்? என்பதே சந்திரமுகி 2 படத்தின் மீதி கதை.
முதல் பாகத்தில் நாம் என்னவெல்லாம் பார்த்து, ரசித்து பரவசம் அடைந்தோமோ அதையெல்லாம் மீண்டும் ரீகிரியேட் செய்து அதன் மூலம் நம்மை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பி வாசு. முதல் பாகத்தில் ரஜினியும், வடிவேலும் முதல் பாதி முழுவதும் லூட்டி அடித்து நம்மை ரசிக்க வைத்தது போன்று இந்த படத்தில் பாகத்தில் ராகவா லாரன்ஸும் வடிவேலும் லூட்டி அடித்து ரசிக்க வைக்க முயற்சி மட்டுமே செய்திருக்கின்றனர். முதல் பாகத்தில் காமெடியில் இருந்த இளமையும், துடிப்பும் இந்தப் படத்தில் சற்றே மிஸ்ஸிங். அதேபோல் கிளிஷேவான காட்சிகளும் முதல் பாதி முழுவதும் படர்ந்து இருந்தது. இதனால் முதல் பாதி முழுவதும் பார்ப்பவர்களுக்கு சற்றே அயர்ச்சி கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. இருந்தும் சந்திரமுகி பேய் வெளியே வந்தவுடன் ஆரம்பிக்கும் இரண்டாம் பாதி நன்றாக வேகம் எடுத்து குறிப்பாக சந்திரமுகியின் பிளாஷ்பேக் காட்சிகள் சிறப்பாக அமைந்து இரண்டாம் பாதியையும் காப்பாற்றி படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் மற்றும் நிகழ்கால காட்சிகள் சரிசம விகிதத்தில் கலவையாக திரைக்கதைக்கு வேகம் கொடுத்து, அதே சமயம் விவேகமான ரசிக்கும் படியான காட்சி அமைப்புகளும் ஒருசேர கவர்ந்து படத்தை காப்பாற்றி இருக்கிறது. அதற்கு பக்க பலமாக பின்னணி இசையும் அமைந்திருக்கிறது.
கதையின் நாயகனாக வரும் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அப்படியே பிரதிபலித்து நடித்து இருக்கிறார். பல காட்சிகள் ரஜினியின் மேனரிசம் திரையில் அப்படியே தெரிகிறது. இருந்தும் பிளாஷ்பேக் காட்சியில் வரும் வேட்டையன் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவரும் சந்திரமுகியாக வரும் கங்கனாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தனர். சந்திரமுகியாக வரும் கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு நல்ல தேர்வு. நடனம், நளினம் என உடல் மொழி விஷயத்தில் சற்றே பின்தங்கி இருந்தாலும் முகபாவனைகள், வசன உச்சரிப்பு, நடிப்பு ஆகியவைகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று பட்டையை கிளப்பி இருக்கிறார் கங்கனா. குறிப்பாக இவருக்கும் லாரன்ஸ்க்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. பேரழகி சந்திரமுகிக்கே உரித்தான திமிரும், அழகும், பவ்யமும் ஒருசேர அழகாக இவருக்கு அமைந்து கதாபாத்திரத்திற்கு மேலும் அழகை கூட்டி இருக்கிறது. காமெடி டிபார்ட்மெண்ட்டை தன் தோளில் சுமந்து நடித்திருக்கும் வைகைப்புயல் வடிவேலு அவருக்கான வேலையை ஓரளவுக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரின் நகைச்சுவை சில இடங்களில் நம்மை சோதித்தாலும் சில இடங்களில் நமக்கு கிச்சு கிச்சு மூட்டவும் தவறவில்லை. அவருக்கென்று கிடைக்கும் கேப்புகளில் சின்னதாக கிடா வெட்டி இருக்கிறார்.
படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீட்டின் பெரிய அம்மாவாக வரும் ராதிகா ஆக்ரோஷமாகவும், அனுதாபமாகவும் நடித்து மீண்டும் கவனம் பெற்று இருக்கிறார். இவரது கணவராக வரும் சுரேஷ் மேனனும் அவரது பங்குக்கு நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் நாயகியாக வரும் மகிமா நம்பியார் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அதை நடிப்பிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம் போல் இவருக்கு பெரிதாக வேலை இல்லை. தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸில் நிறைவான வேலையை செய்திருக்கிறார். இவருடன் வரும் சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா ஆகியோரும் அவரவருக்கான வேலையை செய்திருக்கின்றனர். கால் ஊனமுற்றவராக நடித்திருக்கும் லட்சுமிமேனன் ஆரம்பத்தில் சாதுவாக இருந்து இரண்டாம் பாதிக்கு மேல் வேறு விதமாக மாறி அமர்க்களப்படுத்தி இருக்கிறார். எந்தெந்த இடத்திற்கு எந்தெந்த வகையில் முகபாவனைகள் தேவையோ அதை சிறப்பாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரவி மரியா, விக்னேஷ், மனோபாலா, சிவாஜி, சாமியார் உட்பட பலர் அவரவருக்கான வேலையை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.
கீரவாணி இசையில் வரும் பேய் சம்பந்தப்பட்ட பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்ற வைத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இவரது உலகத்தரம் வாய்ந்த இசை கொடுத்த பிரம்மாண்டம் படத்தையும் காப்பாற்றி இருக்கிறது. அதேபோல் இவரது இசையில் வரும் நீ கோசமே, தூரி தூரி தீம்தனனா பாடல்கள் ஹிட் ரகம். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் பிளாஷ்பேக் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கங்கனா சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
சந்திரமுகி முதல் பாகத்தில் நாம் என்னவெல்லாம் பார்த்தோமோ அதேபோன்று ஜெராக்ஸ் எடுத்த திரைக்கதையை இந்த படத்தில் வேறு நடிகர்களை மாற்றி வைத்து கொடுத்த இயக்குநர் பி வாசு அதை இன்னமும் முதல் பாகம் போல் ரசிக்கும் படி கொடுத்து இருந்தால் முதல் பாகம் கொடுத்த அதே பரவசம் தற்பொழுதும் கிடைத்திருக்கும். இருந்தும் இரண்டாம் பாதி படத்தை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறது.
சந்திரமுகி 2 - கொஞ்சம் சபாஷ் முகி!