ராக்கி, சாணிக் காயிதம் படங்கள் மூலம் பல கோணங்களில் வன்முறையைக் காட்டி கலங்கடிக்கச் செய்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் டீமில் இணைந்த தனுஷ் கேப்டன் மில்லராக உருவெடுத்திருக்கிறார். சாதாரண அனல் ஈசனாக இருக்கும் தனுஷ் எப்படி சுதந்திரப் போராட்டத்திற்கு முன் ஏற்படும் கிளர்ச்சிகள் மூலம் கேப்டன் மில்லராக மாறுகிறார்? என்பதைப் பார்ப்போம்.
சுதந்திர இந்தியாவின் முந்தைய காலகட்டத்தில் பழங்குடியின மக்களில் ஒருவராக இருக்கும் அனல் ஈசன் தனுஷ், மன்னர்கள் மற்றும் ஆதிக்க சாதிக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்களால் ஒடுக்கப்படுகிறார். அந்த கிராமத்தில் தனுஷ் மட்டுமல்லாது கிராமத்து பழங்குடியின அனைத்து மக்களும் இவர்களின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கண்டு வெகுண்டு எழும் அனல் ஈசன் தனுஷ் மிலிட்டரியில் சேர்ந்தால் தனக்கு சரிசம மரியாதை கிடைக்கும் என எண்ணி ராணுவத்தில் சிப்பாயாக சேருகிறார். போன இடத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தன் இன மக்களையே தனுஷ் கையால் கொல்ல வைக்கின்றனர். மரியாதை கிடைக்கும் என எண்ணி சென்ற இடத்தில், தனக்கும் தன் மக்களுக்கும் நடக்கும் அடக்குமுறைகளை கண்டு வெகுண்டெழும் தனுஷ், அதன் பிறகு மண்ணுக்கும் மக்களுக்குமான போராளியாக உருவெடுத்து எப்படி கேப்டன் மில்லராக மாறுகிறார்? என்பதே கேப்டன் மில்லர் படத்தின் மீதி கதை.
ஆதிக்க மனிதர்களின் ஒடுக்குமுறைகளுக்கு இடையே ஒரு சாதாரண மனிதன் எப்படி அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக உருவெடுக்கிறான் என்பதை எதார்த்த காட்சி அமைப்புகளோடு கூடிய வன்முறை நிறைந்த காட்சிகளாகப் படம் விரிகிறது. தனது வழக்கமான வன்முறை நிறைந்த திரை மொழியோடு காட்சிகளை அமைத்து அதனுள் தனது ட்ரேட் மார்க் திரைக்கதை அமைப்பு மூலம் ஒரு வன்முறை நிறைந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இந்த முறை இவர் எடுத்திருக்கும் கதைக் கரு என்பது சுதந்திர இந்தியாவின் முந்தைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டு அக்காலகட்டத்தில் இந்தியா எங்கும் நடந்த சுதந்திரப் போராட்டக்காரர்களின் கிளர்ச்சிகள், தியாகங்கள், கோபங்கள், சாதிக்கு எதிரான வன்முறைகள், ஒடுக்கு முறைகள், அடக்குமுறைகள் என அத்தனை விஷயங்களையும் சற்று பேண்டஸி நிறைந்த வன்முறை சினிமாவோடு கலந்து கொடுத்து ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை தந்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
சமூக ரீதியான பிரச்சனைகள், ஒரு வீரன் எப்படி உருவாகிறான், அதற்குள் நடக்கும் அடக்குமுறை, ஒடுக்குமுறை ஆகியவற்றுடன் சுவாரசியமாக நகரும் முதல் பாதி படம் பின்பு ஒரு நாயகனின் எழுச்சி, அவருக்கான மாஸ் காட்சிகள், அதற்கிடையே ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்குள் உள்ளடக்கிய கிளைமாக்ஸ் டுவிஸ்ட் என இரண்டாம் பாதி சற்றே நீண்டு அதே சமயம் பல்வேறு திருப்பங்களுடன் அதிரடியாக முடிந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. குறிப்பாக படத்தின் பிளஸ் ஆக ஹாலிவுட் தரத்தில் இருக்கும் மேக்கிங்கும், அதற்கு ஏற்றார்போல் அமைந்த கதாபாத்திரங்களும், படத்திற்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும், அதேபோல் அவர்கள் வாழும் பகுதியில் இருக்கும் அக்கால விஷயங்களை அப்படியே கண் முன் கொண்டு வந்த கலை இயக்கமும் என அனைத்தையும் சேர்ந்து ஒரு தரமான படமாக கொடுத்திருக்கின்றன.
வழக்கம்போல் இந்த படத்தை தன் தோள்மேல் சுமந்து தனியாளாக ராஜநடை போட்டு படத்தை கரை சேர்த்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது யதார்த்த நடிப்பும், அதிரடியான ஆக்சன் சம்பவங்களும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் மூன்று கெட்டப்புகளில் வரும் தனுஷ் அந்தந்த கெட்டப்புகளுக்கு ஏற்றவாறு தரமான நடிப்பை மிகச் சரியான அளவில் வெளிப்படுத்தி படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. நாயகியாக வரும் பிரியங்கா மோகன் கதாபாத்திரம் சிறிது நேரமே வந்தாலும் அது ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்திருப்பது மனதில் பதியும்படி இருக்கிறது. தனுஷின் அண்ணனாக வரும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர் பார்க்கும் பார்வையிலேயே மிரட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் தனுஷோடு சேர்ந்து இவர் வரும் காட்சி செம மாஸ். அதேபோல் சிறிது நேரமே வந்தாலும் சின்ன வேடத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மாஸ் காட்டியிருக்கிறார் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தனுஷின் நண்பராக வரும் இவர் தேவையான நேரத்தில் தோன்றி ரசிகர்களுக்கு பரவசத்தை கொடுத்துள்ளார். கூடவே இருந்து கொண்டு குழி பறிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குமாஸ்தா காளி வெங்கட் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து அனைவரிடத்திலும் வெறுப்பை சம்பாதித்து கவனம் பெற்றிருக்கிறார்.
போராளி குமரவேல் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். மன்னர் குடும்பத்து வில்லன்களாக வரும் ஜெயபிரகாஷ், ஜான் கொக்கன் ஆகியோரும் சிறப்பான நடிப்பின் மூலம் வெறுப்பை சம்பாதித்து இருக்கின்றனர். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் நிவேதிதா, விஜி சந்திரசேகர், அருணோதயன், வினோத் கிஷன், கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் நபர், அதிதி பாலன், ஆங்கர் சுவாதி, ஆங்கர் ஐஸ்வர்யா, அப்துல் லீ உட்பட பலர் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆகியோர் அவரவருக்கான வேலையை மிக மிக சிறப்பாக வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். இப்படத்தின் இன்னொரு நாயகனாக பார்க்கப்படுவது இயக்குநருக்கு பிறகு கலை இயக்குநர் தா. இராமலிங்கம். இவரது கலை இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன் இருந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்வியல் அவர்கள் பயன்படுத்திய நிலம், வீடு பொருட்கள் துணிமணிகள் ஆகியவற்றை அப்படியே கண்முன் கொண்டு வந்து அக்காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார். கர்ணன் படத்திற்குப் பிறகு தனுஷ் உடன் இணைந்து இவர் செய்திருக்கும் கலை இயக்கம் கவனிக்கத்தக்கவாறு அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
அதேபோல் இன்னொரு நாயகனாகப் பார்க்கப்படுவது ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை காட்சிக்கு காட்சி பின்னணி இசையில் அதிரடி இசை மூலம் படத்திற்கு மாஸ் கூட்டி இருக்கிறார். குறிப்பாக கில்லர் மில்லர் பேக்ரவுண்ட் பாடல் காட்சி சிறப்பு. சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகளும் சேசிங் காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அக்கால விண்டேஜ் விஷயங்களை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி அதிலும் பல இடங்களில் நன்றாக விரிந்து தெரியும் வைட் ஆங்கில் காட்சிகளையும் கொடுத்து அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். இவர்களது உழைப்பு இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
மிகவும் பின் தங்கியிருக்கும் ஒரு சாமானியனின் கோபம், ஏக்கம், தவறு, குற்ற உணர்ச்சி, இதனால் அவன் எடுக்கும் அதிரடி முடிவு என அனல் ஈசன் என்ற தனுஷ் எப்படி கேப்டன் மில்லர் என்னும் போராளியாக உருவெடுத்து தன் கேள்விகளுக்கு எந்த வகையில் விடை தேடிக் கொள்கிறான் என்பதை அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சி அமைப்புகளோடு கூடிய படமாக கேப்டன் மில்லர் அமைந்திருக்கிறது.
கேப்டன் மில்லர் - போராளி!