இதுவரை காமெடி, காதல், ஆக்ஷன், கமர்ஷியல் படங்கள் கொடுத்து ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன் தற்பொழுது சயின்ஸ் பிக்ஷன் கதை மூலம் பொங்கல் ரேஸில் குதித்திருக்கிறார். இவரது டிரேட்மார்க் விஷயங்களோடு சயின்ஸ் பிக்ஷன் இணைந்து கலக்கியிருக்கும் அயலான் திரைப்படம் போதிய வரவேற்பைப் பெற்றதா இல்லையா?
விண்ணிலிருந்து பூமியில் விழும் ஓர் அதிசய உலோகக் கல், உலகமே அழிந்தாலும் பரவாயில்லை அதன் மூலம் தான் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனால் போதும் என நினைக்கும் வில்லன் சரத் கேல்கரிடம் கிடைக்கிறது. அந்தக் கல்லை வைத்துக்கொண்டு அவர், பூமியில் ஆழமாகத் துளையிட்டு அதன் மூலம் கிடைக்கும் நோவா கேஸை பயன்படுத்தி உலகையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார். இதைத் தடுக்க விண்வெளியிலிருந்து ஒரு வேற்று கிரகவாசி அயலான் பூமிக்கு வருகிறது. வந்த இடத்தில் அயலானுக்கு எதிரிகளால் ஆபத்து நேர்கிறது. அந்த ஆபத்திலிருந்து எந்த ஜீவராசிகளுக்கும் தீங்கு நினைக்காத நேர்மையான மனிதன் சிவகார்த்திகேயன், அயலானை காப்பாற்றி இந்த உலகத்தையும் காப்பாற்றினாரா இல்லையா? என்பதே அயலான் படத்தின் மீதி கதை.
ஒரு கதையாகப் பார்க்கும் பட்சத்தில் இது நாம் ஏற்கனவே பார்த்த ஒரு கதையாக இருந்தாலும், அவற்றுள் அயலான் என்னும் வேற்று கிரகவாசியை உட்புகுத்தி சயின்ஸ் பிக்ஷன் படமாகக் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் 'இன்று நேற்று நாளை' புகழ் ரவிக்குமார். வழக்கமான திரைக்கதை டெம்ப்லேட்டுகளான ஹீரோவுக்கான ஓபனிங் சாங், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட காதல் காட்சிகள், நாயகனுக்கு உதவி செய்யும் காமெடி நடிகர் நண்பர்கள், மிகப்பெரிய கார்ப்பரேட் வில்லன், பக்கபலமாக இருந்து கொண்டு கெட்டது செய்யும் வட இந்திய கதாநாயகி, சூப்பர் பவர் கொண்ட வேற்றுக் கிரகவாசி என ஏழு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படம், அக்காலகட்டத்திற்கு ஏற்ற விஷயங்களை உள்ளடக்கி அது தற்பொழுது அவுட் டேட்டாக மாறி இருக்கும் இந்த சமயத்தில் இப்படம் ரிலீஸ் ஆகி இருந்தாலும் அவற்றையெல்லாம் மறக்கடிக்கப்பட்டு பெரியவர்கள், குழந்தைகள், தாய்மார்கள் எனக் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அயலான் அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.
திரைக்கதை என்று பார்க்கும் பட்சத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை முன்பே கணிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், பண்டிகை காலகட்டத்தில் குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்காக படத்தைப் பார்த்து ரசித்துவிட்டு வரும் ஒரு படமாக இப்படம் உருவாகி இருப்பது இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துவிட்டது. அதுவே இப்படத்தை கரை சேர்க்க உதவியிருக்கிறது. லாஜிக்குகளை தள்ளி வைத்துவிட்டு வெறும் பொழுதுபோக்கிற்காக சென்றால் நிச்சயம் ஏமாற்றம் இருக்காது. வழக்கம்போல் தனக்கே உரித்தான நடிப்பை இந்த படத்திலும் வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் நாயகன் சிவகார்த்திகேயன். இவருக்கென ஒரு மாஸ் பாடல் காட்சி, ஹீரோயினுடன் காதல் காட்சி, காமெடி நடிகர்களுடன் கலகலப்பான காட்சி, ஏலியனுடன் உணர்வுப்பூர்வமான காட்சி என ஒரு நாயகனுக்கு உண்டான அத்தனை காட்சிகளும் இப்படத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் தன்னை சிறப்பாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் பல இடங்களில் சூப்பர் ஸ்டார் தென்படுகிறார். அவை மற்றவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ குழந்தைகள் தாய்மார்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்திருப்பது அவருக்கு பிளஸ் மற்றவர்களுக்கு மைனஸ்.
வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார் ரகுல் பிரீத் சிங். காமெடிக்கென இருக்கும் டிபார்ட்மெண்ட்டை தங்கள் தோள் மேல் சுமந்து படம் முழுவதும் வலம் வந்துள்ளனர் கருணாகரன், யோகி பாபு, கோதண்டம், பால சரவணன் ஆகியோர். அதில் அவர்களுக்கு ஓரளவு பலனும் கிடைத்திருக்கிறது. இவர்கள் ஏலியனோடு சேர்ந்து கொண்டு அடிக்கும் லூட்டி படத்தில் கலகலப்பாக அமைந்திருக்கிறது. வேற்றுக் கிரக மனிதன் அயலானாக வரும் ஏலியன் சிறப்பாக நடித்து குழந்தைகளுக்கு ஹீரோவாகவே மாறி இருக்கிறார். இவருக்கு பின்னாடி குரல் கொடுத்திருக்கும் நடிகர் சித்தார்த் அந்த ஏலியனுக்கு தன் குரல் மூலம் உயிரூட்டி மாஸ் காட்டியிருக்கிறார். கார்ப்பரேட் வில்லனாக வரும் சரத் கேல்கர் வழக்கமான வில்லத்தனம் காட்டி இறுதியில் நாயகனிடம் தோற்றுள்ளார். இவருக்கு அடியாளாக வரும் முன்னாள் நாயகி இஷா கோபிகர் வெறும் ஆக்சன் காட்சிகளில் மட்டும் தோன்றி அதிரடி காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருக்கும் மூத்த நடிகை பானுப்பிரியா அவருக்கான வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார். இவர்களைத் தவிர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகச் செய்திருக்கின்றனர்.
இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுவது படத்தின் டெக்னீசியன்கள். குறிப்பாக பேண்டம் எஃப் எக்ஸ் கம்பெனி கிராபிக்ஸ் காட்சிகளை மிக மிக சிறப்பாக கையாண்டு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. குறிப்பாக ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகளை அது ஒரு ஏலியன் என்ற எண்ணமே நமக்கு வராதபடி டேட்டூ என்ற கதாபாத்திரம் நம்மோடு வாழ்ந்த படியான ஒரு உணர்வை கொடுத்து அந்த கதாபாத்திரத்தோடு நம்மை பயணிக்கும்படி காட்சி அமைப்புகளை மிக எதார்த்தமாக கொடுத்து படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இந்த விஎஃப்எக்ஸ் டீமுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் படத்தில் இன்னொரு நாயகனாக இருப்பது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். வேற லெவல் சகோ பாடல் ஆடல் ரகம். வழக்கம்போல் தனது பிரம்மாண்டமான ஹாலிவுட் தர பின்னணி இசை மூலம் படத்திற்கு உயிரூட்டி உள்ளார். இவரது பின்னணி இசை படத்திற்கு இன்னொரு நாயகனாக அமைந்திருக்கிறது. நிரவ்ஷா ஒளிப்பதிவில் கிராபிக்ஸ் காட்சிகள் வி எப் எக்ஸ் காட்சிகள் ஏலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பூம்பாறை கிராம சம்பந்தப்பட்ட காட்சிகள் என அனைத்து காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
படம் ஆரம்பித்து முதல் பாதி வழக்கமான டெம்ப்லேட்டுகளோடு ஆரம்பித்து போகப் போக நன்றாக வேகமெடுத்து ரசிக்கும்படி அமைந்துள்ளது. முதல் பாதியில் இருந்த அத்தனை சுவாரசியமும் இரண்டாம் பாதியில் முழுவதுமாக கிடைக்காமல் ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பண்டிகை நாளில் குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்கான ஒரு படத்தை பார்த்து ரசித்துவிட்டு வந்தால் போதும் என நினைக்கும் குடும்ப ரசிகர்களுக்கு இப்படம் நல்ல விருந்தாக அமைந்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு டாட்டூ என்ற சூப்பர் ஹீரோ இப்படம் மூலம் கிடைத்திருக்கிறார்.
அயலான் - குடும்பத்தோடு குழந்தைகளும் இணைந்து கொண்டாடும் வெற்றி!