மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் தமிழகத்தில் பல்வேறு தற்கொலைகள் இப்பொழுதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது. மாநில ஆளுங்கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்தும், மத்தியில் நீட் தேர்வை ஆதரித்தும் தேர்வுகள் நடைபெற்று வரும் இந்த சூழலை மையமாக வைத்து இதனால் ஏழை எளிய மாணவர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு அவசியமா? அதனால் நடக்கும் குளறுபடிகளால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது? என்ற மையக்கருத்தை வைத்து உருவாகி இருக்கும் அஞ்சாமை திரைப்படம் எந்த அளவு பார்ப்பவருக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் விதார்த், வாணி போஜன் தம்பதியினர் அவர்களுடைய மகன், மகளுடன் வாழ்ந்து வருகின்றனர். நாடக நடிகராக இருக்கும் விதார்த் தன்னைப் போலவே தன் மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தன் சொத்து சுகத்தை எல்லாம் விற்று மகனை படிக்க வைக்கிறார். மகன் கார்த்திக் மோகன் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதன் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவருக்கு தான் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு படிக்கிறார். மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு அவசியம் என்ற விஷயம் அவர்களுக்கு தெரிய வர மகன் கார்த்திக் மோகனை மிகப் பெரிய இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து நீட் கோச்சிங்கில் படிக்க வைக்க கையில் இருக்கும் மொத்த பணத்தையும் செலவு செய்து டியூஷன் படிக்க வைக்கிறார் விதார்த். இதற்கிடையே மகனும் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்ய அவர் நீட் தேர்வுக்காக அந்த இன்ஸ்டிடியூட் மூலம் விண்ணப்பிக்கிறார்.
இவருக்கு தேர்வு மையம் ஜெய்பூரில் உறுதி செய்யப்படுகிறது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு பசி, தூக்கம் என்று பாராமல் கையில் சிறிது பணத்துடன் தந்தை விதார்த்தும், மகன் கார்த்திக் மோகனும் ரயிலில் ஜெய்ப்பூருக்கு விரைகின்றனர். அங்கே பல்வேறு சிக்கல்களும், கொடுந்துயரங்களும் நடந்தேறுகிறது. அதனால் வெகுண்டு எழும் மாணவன் கார்த்திக் மோகன் நீட் தேர்வு அதிகாரிகளின் குளறுபடிகள் தான் காரணம் என எண்ணி போலீஸ் அதிகாரி ரகுமான் உதவியுடன் தமிழக அரசின் மீது வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இந்த வழக்கில் யார் வெற்றி பெற்றார்கள்? மாணவன் கார்த்திக் மோகனுக்கு நியாயம் கிடைத்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
மருத்துவப் படிப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் அவசியமா என்ற கருத்தை மையமாக வைத்துக் கொண்டு இன்றைய சூழலில் சமூகத்திற்கு மிக அவசியமான ஒரு படத்தைக் கொடுத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி சுப்பராமன். அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கால் நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை மையமாக வைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகள் எந்த அளவு துயரங்களை சந்திக்கின்றனர் என்ற கதைக் கருவை விதார்த் குடும்பத்துடன் இணைத்து மிக சுவாரசியமாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுப்புராமன்.
ஒரு பின் தங்கிய கிராமத்திலிருந்து நன்றாக படிக்கும் மாணவன் அவன் குடும்பம் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனை படிக்க வைக்கின்றனர். அதற்காக அவர்கள் படும் அள்ளல்கள், துன்பங்கள் என வெறும் துயரங்களை மட்டும் காட்டி சீரியல் போல் படத்தை கொடுக்காமல் மனதுக்கு நெருக்கமாக எதார்த்தமான சினிமாவாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக முதல் பாதி மிகவும் யதார்த்தமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமான குடும்பப் படமாக நகர்ந்து இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவில் பயணம் செய்து இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிவடைந்து இருக்கிறது.
தமிழக மக்கள் நீட் தேர்வை ஏன் எதிர்க்கின்றனர் என்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் அதற்குரிய நியாயத்தையும் செய்திருக்கிறது. ஒரு நுழைவுத் தேர்வால் எந்த அளவு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது திரைப்படம். அதே சமயம் நீட் தேர்வு அவசியமா இல்லையா என்ற விஷயத்தைத் தாண்டி அப்படி நுழைவுத் தேர்வு வைக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் எந்த அளவு மிகவும் தெளிவாகவும் அனைத்து மாணவர்களும் உபயோகப்படும்படியும் இருக்க வேண்டும் என்ற மையக்கருத்தை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் கொடுத்து அதையும் ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்தை கரை சேர்த்திருக்கிறது.
படத்தின் நாயகன் விதார்த் ஏழை விவசாய குடும்பத்தின் அப்பாவாக அப்படியே கண்முன் வாழ்ந்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு பாடத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக தந்தைக்கும் மகனுக்குமான இவரது கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து கைதட்டல் பெற்று இருந்தாலும் அதை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என ஒற்றை கையில் தட்டி விடும்படியான ஒரு சிறப்பான நடிப்பை மிக நேர்த்தியாகவும் அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் நடித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து தமிழின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் நடிகர் விதார்த்.
மகனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் வாணி போஜன் மிக மிகச் சிறப்பாக நடித்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலு சேர்த்து இருக்கிறார். இவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை. குறிப்பாக முதல் பாதியிலேயே இவரது கதாபாத்திரம் முடிந்து விடும்படி இருந்தாலும் தான் இருக்கும் வரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய வேண்டுமோ அதை மிக மிக சிறப்பாக செய்து பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகன் போலீஸ் ஆபீஸர் ரகுமான். முதல் பாதையில் போலீஸ் ஆகவும் இரண்டாம் பாதியில் வக்கீலாகவும் அவதாரம் எடுக்கும் இவர் அந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இவர் மாணவர்கள் மேல் காட்டும் கரிசனம் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் ராமர் மனதில் பதிகிறார். அதேபோல் ரேகா நாயரும் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த முக்கிய கதாபாத்திரங்களும் அவரவர் வேலை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
அறிமுக ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் படத்திலேயே இவரது ஷார்ட் டிவிசன்ஸ் மற்றும் லைட்டிங் சிறப்பாக அமைந்திருக்கிறது. ராகவ் பிரசாத் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. பட்த்தொகுப்பாளரும், கலை இயக்குநரும் தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் மற்றும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகவும், அதேசமயம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதில் இருக்கும் குளறுபடிகளால் எந்த அளவு இன்னல்கள் ஏற்படுகிறது என்ற உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருப்பது போன்ற நிதர்சனத்தை மிக யதார்த்தமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் சுப்புராமன். இதற்காகவே அஞ்சாமை படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.
அஞ்சாமை - அவசியம்!