Skip to main content

எளிய மக்கள் மீது நடக்கும் அவலம் - ‘அநீதி’ விமர்சனம்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Aneethi movie review

 

வெயில், அங்காடித் தெரு படம் மூலம் எளிய மனிதர்களின் கதையை உருவாக்கி விருதுகள் பெற்று கவனம் ஈர்த்த இயக்குநர் வசந்தபாலன் ஜெயில் படத்திற்குப் பிறகு கையில் எடுத்திருக்கும் திரைப்படம் அநீதி. இந்தத் தடவை உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களின் வலியைக் கூற முயற்சி செய்து எடுத்திருக்கும் அநீதி படம் வசந்த பாலனின் முந்தைய படங்களைப் போல் கவனம் பெற்றதா, இல்லையா?

 

உணவு டெலிவரி பாயாக இருக்கும் அர்ஜுன் தாஸ், தினசரி தான் டெலிவரி செய்யும் வீடுகளில் பல்வேறு அவமானங்களுக்கு இடையே உணவு டெலிவரி செய்து வருகிறார். இதனாலேயே அவருக்கு ஓசிடி என்னும் மன நோய் ஏற்படுகிறது. இதனால் தன்னை அவமானப்படுத்துபவர்களை எல்லாம் கொலை செய்வது போல் அவருக்கு எண்ணம் ஏற்படுகிறது. இதற்காக அவர் ஒரு மனநல மருத்துவரை அணுகி ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார். இதற்கிடையே அவர் உணவு டெலிவரி செய்ய இசிஆரில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவிற்குச் செல்கிறார். போன இடத்தில் துஷாரா விஜயனுடைய நட்பு ஏற்படுகிறது. அதுவே நாளடைவில் காதலாக மாறி இவரது மன நோயையும் சரி செய்கிறது. இருவரும் சந்தோஷமாகக் காதலித்து வருகின்ற சமயத்தில் ஒரு நாள் இரவில் துஷாரா விஜயனின் முதலாளி அம்மாவிடம் இருவரும் மாட்டிக் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து, அந்த முதலாளியம்மா அடுத்த சில மணி நேரத்தில் இறந்து விடுகிறார். முதலாளி அம்மாவின் பிள்ளைகளுக்கும், போலீசாருக்கும் அவர் எப்படி இறந்தார் எனச் சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் அர்ஜுன் தாசும், துஷாரா விஜயனும் கொலை குற்றத்திற்கு ஆளாகின்றனர். இதையடுத்து அந்த முதலாளியம்மா எப்படி இறந்தார்? இந்தக் கொலை குற்றத்தில் இருந்து இருவரும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே அநீதி படத்தின் மீதிக் கதை.

 

ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் உணவு டெலிவரி பாய்ஸ்களுக்கு நடக்கும் அநீதிகளையும், எளிய மனிதர்கள் மீது சட்டங்கள் சமமாக இருந்ததா அல்லது அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட்டதா என்பதையும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். உணவு டெலிவரி செய்யும் நபர்களின் வாழ்க்கையையும், அவர்களது வலியையும் நம்முள் மிக எளிமையாக கடத்தி அதை உணரும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். அதேபோல் எளிமையானவர்கள் மீது சட்டம் எவ்வாறு பாய்கிறது. காவல் நிலையங்களில் அவர்கள் மீது நடக்கும் அநீதிகளையும் மிக ஆழமாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இருந்தும் கதை ஆரம்பிக்கும் சமயத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர்களின் வாழ்க்கையைக் காண்பித்து விட்டு, பிறகு கதை வேறு ஒரு திசையில் நகர்ந்து கொலை, குற்றம், வழக்கு என பயனித்து பிறகு அழுத்தம் நிறைந்த கண் கலங்க வைக்கும்படியான பிளாஷ்பேக் உடன் நகர்ந்து, பிறகு மீண்டும் உணவு டெலிவரி செய்யும் நபர்களின் போராட்டம், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து படம் நிறைவடைகிறது.

 

Aneethi movie review

 

ஒரு விஷயத்தை வைத்துத் தொடங்கும் திரைப்படம் அதன் சாராம்சங்களுடனே பயணித்து முடியும் பட்சத்தில் அது கவனம் பெறும். ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் சமயத்தில் ஒரு கதையும், நடுவே வேறு ஒரு கதையும், முடிவில் வேறு ஒரு கதையுமாக அமைந்து, மூன்றும் ஒரு புள்ளியில் சந்திப்பது போல் திரைக்கதை அமைத்து படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். அது இப்படத்திற்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பது போகப் போகத் தெரியும். இருந்தும் வசந்த பாலனின் எதார்த்தமான காட்சிகள் ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்து குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் வரும் அர்ஜுன் தாஸ் மற்றும் காளி வெங்கட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்து, அதில் நடித்த நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்து இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கின்றனர். இறுதிக்கட்ட காட்சிகள் கண்களைக் குளமாக்கிப் படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு எளிய மனிதர்களின் வலியை வேதனையுடன் படமாக்கும் இயக்குநர் வசந்த பாலன் இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார்.

 

மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், இப்படம் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று கைத்தட்டல் பெற்று இருக்கிறார். சின்னச் சின்ன முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என இவரது சிறப்பான நடிப்பு படத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது. இவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் நாயகி துஷாரா விஜயன். பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டுப் பெண் போல் தோன்றியிருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர், அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாக உள்வாங்கி அதற்கேற்றார் போல் தன் எதார்த்த நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். இவர் பயந்து பயந்து, நடுங்கி அழுகின்ற காட்சிகள் எல்லாம் சிறப்பாக நடித்து அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். பிளாஷ்பேக்கில் சில காட்சிகளிலேயே வந்தாலும் தன் எதார்த்த படிப்பை மிக மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, குறிப்பாக தென்மாவட்ட வட்டார வழக்கை தன் சிறப்பான வசன உச்சரிப்புகள் மூலம் கொடுத்துக் கைதட்டல் பெற்று இருக்கிறார் நடிகர் காளி வெங்கட். இவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தைக் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இவரது அப்பாவியான நடிப்பு பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்திருக்கிறது.

 

முதலாளி அம்மாவாக வரும் ஜெயன் வில்லத்தனமான நடிப்பில் சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, சாரா ஆகியோரும் வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர். இவர்கள் வரும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படும்படி நடித்து கவனம் பெற்று இருக்கின்றனர். அர்ஜுன் தாஸ் நண்பராக வரும் பரணி, அவர் வேலையைச் செய்து விட்டு சென்றிருக்கிறார். சில காட்சிகளிலேயே வந்தாலும் சிரிப்பலையை உருவாக்க முயற்சி செய்து விட்டு சென்றிருக்கிறார் அறந்தாங்கி நிஷா. 

 

எட்வின் சாக்கிய ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஜிவி பிரகாஷ் தன் இசையில் மிரட்டி இருக்கிறார். அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் காதல் பாடல் மற்றும் பின்னணி இசை சிறப்பு.

 

படம் ஆரம்பித்து ஒரு கதையில் தொடங்கிப் போகப் போக வேறு ஒரு கதையில் பயணித்து அங்கும் இங்குமாகச் சுற்றி மறுபடியும் வந்த இடத்திலேயே முடிந்திருப்பது சற்று அயற்சி ஏற்படும் படி இருந்தாலும், எளிய மக்கள் மீது நடக்கும் அவலங்களையும், அநீதிகளையும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பது படத்தை நிமிரச் செய்து கரை சேர்க்க உதவி இருக்கிறது.

அநீதி - எளியவர்களின் வலி!


 

சார்ந்த செய்திகள்