'கிரிக்கெட் என்ற விளையாட்டை நாம் எவ்வளவு சீரியஸாகப் பார்க்கிறோம், அதுபோல் விவசாயத்தை விளையாட்டாகக் கூட பார்க்கவில்லை' என்ற ஆதங்கத்தைப் பேச வந்துள்ள படம் அருண் ராஜா காமராஜின் கனா. இந்தியாவில் கிரிக்கெட் என்றாலே அது ஆண்கள் கிரிக்கெட் மட்டும்தான் என்னும் ஆதிக்கத்தைத்தாண்டி வெற்றிகரமாக வளர்ந்து வரும் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வந்துள்ளது இந்த கனா.
கிரிக்கெட் மீதும் விவசாயத்தின் மீதும் தீராக் காதல் கொண்ட சத்யராஜ் 2007ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையில் தோல்வியடைந்து வெளியேறிய ஆட்டத்தைப் பார்த்து கண் கலங்குகிறார். இதைப் பார்த்த அவரது மகள் எப்படியாவது ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆக மாறி தன் அப்பாவின் கண்ணீரை துடைத்து சிரிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுக்க முயற்சி செய்கிறார். இன்னொரு புறம் விவசாயத்துக்காக வங்கியில் விவசாயக் கடன் வாங்கி பெருத்த நஷ்டம் அடைகிறார் சத்யராஜ். பின் அந்தக் கடனைக் கட்ட இயலாமல் அவரது வீடு வங்கியால் ஜப்தி செய்யப்படுகிறது. இதையடுத்து சத்யராஜ் ஜப்தி செய்யப்பட்ட தன் வீட்டை மீட்டாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் பெரிய கிரிக்கெட் வீராங்கனையானாரா என்பதுதான் கதை.
பொதுவாக, கிரிக்கெட் படம் என்றாலே அதில் நாயகர் ஒரு பேட்ஸ்மேனாக, அதுவும் ஒரு வலதுகை பேட்ஸ்மேனாகத்தான் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவார். அதுவும் அவர் ஆடுகின்ற ஒவ்வொரு ஆட்டத்திலும் அவருடைய திறமையை காட்டி கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பது போன்று தான் பல படங்களில் காட்டப்படும். குறிப்பாக ஆட்டங்கள் பெரும்பாலும் கடைசி பந்தில் வெற்றி பெறும்படியாகவே முடியும். அந்த வகையில் இதுபோல் எந்த ஒரு காட்சியும் இந்தப் படத்தில் இல்லாமல் ரசிக்கவைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதற்கு இயக்குனர் அருண்ராஜா காமராஜிற்கு பெரிய பாராட்டுக்கள்.
'உன்னால முடியாதுனு யாராவது சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல, உன்ன', 'இந்த உலகம் ஜெயித்திடுவேன்னு சொன்னா கேட்காது, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும், நீ எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டுப் பேசு', 'ஆசைப்பட்டா மட்டும் போதாது, அதுக்கு அடம்பிடிக்கத் தெரியனும். நாம பிடிக்கிற அடத்துலதான் அது எந்த அளவுக்கு நமக்குப் பிடிச்சிருக்குன்னு அடுத்தவங்களுக்குத் தெரியும்' போன்ற எனர்ஜெட்டிக் வசனங்களை எக்கச்சக்கமாக வைத்துள்ளார் அருண்ராஜா. கிரிக்கெட்டிலும் சரி, விவசாயத்திலும் சரி, எதார்த்தங்களை தைரியமாகவும், வெளிப்படையாகவும் காட்டி உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு பெண் நம் சமூகத்தில் இருந்து கிரிக்கெட்டுக்குள் நுழைந்தால் எந்தெந்த கஷ்டங்களையும், அவமானங்களையும் எதிர்கொள்ள நேரும் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். அதே சமயம் ஒரு விவசாயி வாங்கிய கடனை கட்டமுடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்வதும் அதற்கு அவர்கள் படும் கஷ்டமும் அவமானமும் அதை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் அவன் படும் கஷ்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தி உள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நெகிழ வைத்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு இப்படம் மூலம் ஒரு நல்ல இயக்குனர் உதயமாகி உள்ளார்.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தன் உடலை வருத்தி நடிப்பில் சாதித்துள்ளார். முக அழகு, உடல் அழகு என்று எதையுமே கண்டுகொள்ளாமல் நடிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தன் உடலை வருத்தி படத்தில் நடித்ததற்கு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஸ்பெஷல் லவ் ஸ்மைலீக்கள். படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளார் நடிகர் சத்யராஜ். ஒவ்வொரு விவசாயியும் படும் கஷ்டங்களையும் அவமானங்களையும் அப்படியே தன் நடிப்பால் கண்முன் நிறுத்தி சில இடங்களில் நம்மை கலங்கவும் வைத்துள்ளார்.
படத்தில் சச்சின் ஆக வரும் சவரிமுத்துவும், டெண்டுல்கராக வரும் ஆண்டனி பாக்கியராஜும் திரைக்கதையின் வேகத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளனர். இவர்கள் வரும் காட்சிகள் கலகலப்பு. ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவாக வரும் நடிகை ரமா அப்படியே கிராமத்து தாயை கண் முன்னே கொண்டு வந்துள்ளார். எப்போதும் சிடுமூஞ்சி ஆகவே இருக்கும் அவர் பல இடங்களில் தன் இயல்பான நடிப்பால் வெறுப்பையும் அனுதாபத்தையும் சம்பாதிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷை ஒரு தலையாகக் காதலிக்கும் புதுமுகம் தர்ஷன், இளவரசு, முனிஸ்காந்த், நமோ நாராயணன் ஆகியோர் படத்தின் கலகலப்பு பகுதிக்குப் பொறுப்பு. சிவகார்த்திகேயன், படத்தைத் தயாரித்து ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் கோச்சாக, களத்தில் அவர் அளிக்கும் பயிற்சியை விட வார்த்தைகளில் அவர் கொடுக்கும் உத்வேகம் ஆழமாக இருக்கிறது. சில இடங்களில் சற்று அதிகமோ என்று தோன்றினாலும் படத்தின் நோக்கத்துக்கு மாறாக இல்லாததால் நெருடலாக இல்லை. இரண்டாம் பாதி, படத்தின் கவனம் ஐஸ்வர்யாவிடமிருந்து சிவகார்த்திகேயன் பக்கம் திரும்புகிறதோ என்பது போன்ற தோற்றம் தோன்றி மறைகிறது. தயாரிப்பாளராக அவருக்கு இது ஒரு நல்ல துவக்கம். நல்ல தயாரிப்பாளராகவேண்டும் என்பது அவரது கனவென்றால் அது நிஜமாகத்தொடங்கியிருக்கிறது.
இசையமைப்பாளர் திபு நிநன் தாமஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஜீவனை கூட்டியுள்ளது. காட்சிக்கு காட்சி இவரின் இசை பார்ப்பவர்களை மட்டுமல்லாமல், நடித்தவர்களுக்கும் உத்வேகம் ஏற்படுத்தும் படியாக அமைந்துள்ளது. சில இடங்களில் கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கிறது. மோகன் ராஜன், ஜி கே பி, ராபிட் மேக், மற்றும் அருண் ராஜா காமராஜ் ஆகியோரின் பாடல் வரிகளும் மோட்டிவேஷன் ரகம். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனின் கேமராவில் ஸ்டேடியத்தின் பிரம்மாண்டமும், கிராமத்தின் அழகும், அதேசமயம் வறட்சியும் நேர்த்தியாக படமாகியிருக்கின்றன. கிரிக்கெட் பகுதிகளில் உண்மையான மேட்ச் பார்க்கும் உணர்வை ஏற்படுத்த சிரத்தை எடுத்திருக்கிறார்கள்.
திருவள்ளுவரின் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற வரிகளுக்கு ஏற்றார் போலவே 'நம் எண்ணம் என்றுமே உயர்ந்த இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்' என்ற வாழ்க்கை தத்துவத்தை அழகாகவும், அதேசமயம் உணர்ச்சிப்பூர்வமாகவும் பிரதிபலித்துள்ளது இந்த கனா.