Skip to main content

பூலோகம் தந்த கூட்டணியின் படைப்பு - ‘அகிலன்’ விமர்சனம்! 

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Agilan tamil movie review

 

பொன்னியின் செல்வன் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி தனி ஹீரோவாக நடித்து வெளியாகி இருக்கும் படம் அகிலன். பூலோகம் தந்த வெற்றியை அடுத்து அதே டீம் உடன் இணைந்து இப்படத்தை கொடுத்துள்ள ஜெயம் ரவி முந்தைய படத்தில் பெற்ற வரவேற்பை இப்படம் மூலமும் பெற்றாரா இல்லையா?

 

சென்னை துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டு பல்வேறு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி இந்தக் கடத்தல் மாஃபியாவின் தலைவனான கபூரை சந்திக்க திட்டம் போடுகிறார். ஒரு கட்டத்தில் கபூரை சந்திக்கும் செய்முறை அவர் கொடுக்கும் ஒரு மிகப்பெரிய அசைன்மென்ட்டை செய்து முடிக்க களம் இறங்குகிறார். இதற்கு தடையாக துறைமுகத்தின் சீஃப் போலீஸ் காவலரும் டிஐஏ அதிகாரியுமான சிராக் ஜானி வருகிறார். இந்த தடையை மீறி ஜெயம் ரவி கபூர் கொடுத்த அசைன்மென்ட்டை வெற்றிகரமாக முடித்தாரா? இல்லையா? ஜெயம் ரவி இந்த கடத்தல் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன? அவர் எப்படி கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் ஆக மாறுகிறார்? என்பதே அகிலன் படத்தின் மீதி கதை.

 

பூலோகம் படம் மூலம் வட சென்னை பகுதியில் இருந்த குத்துச்சண்டை கலாச்சாரத்தை மிக இயல்பாக காட்டி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இப்படத்தில் துறைமுகம் மற்றும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை நல்ல மெசேஜோடு கூடிய கதையாக ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த எந்த படத்திலும் ஒரு துறைமுகத்தை இந்த அளவு அக்குவேரு ஆணிவேராக பிரித்துக் காட்டியது கிடையாது. அந்த அளவு ஒரு துறைமுகத்தில் இரண்டரை மணி நேரம் சுற்றிப் பார்ப்பது போன்ற உணர்வை இப்படம் மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன். காட்சிப்படுத்துதல் மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகும் என்பதை யூகிக்கும் படி இருந்தாலும் அதை மிக திரில்லிங்காகவும், ரசிக்கும் படி சுவாரஸ்யமாகவும் கொடுத்து பாஸ் மார்க் வாங்கி படத்தை கரை சேர்த்திருக்கிறார். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக திரைக் கதையை அமைத்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் படியான காட்சி அமைப்புகள் மூலம் முதல் பாதி நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சில பல வேகத்தடைகள் இருந்தாலும் கடைசி கட்டத்தில் நிறைவான காட்சி அமைப்புகள் மூலம் படம் முடிந்து ஒரு நல்ல மேசேஜோடு கூடிய திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துள்ளது. 

 

படத்துக்கு படம் நிறைவான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து வரும் ஜெயம் ரவி இப்படம் மூலம் வட சென்னையை சேர்ந்த அகிலன் என்ற கதாபாத்திரமாகவே மாறி உள்ளார். இவரது உடல் அமைப்பும் வசன உச்சரிப்பும் அகிலன் என்ற கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி உள்ளது. காட்சிக்கு காட்சி மிகவும் அசால்டாக நடித்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றுள்ளார் ஜெயம் ரவி. வழக்கமான கதாநாயகியாக வரும் ப்ரியா பவானி சங்கர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். இவருக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. தனக்கு கொடுத்த நேரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டு சென்று இருக்கிறார். இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் டானியா ரவிச்சந்தர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். இன்டெலிஜென்ட் ஆஃபீஸ்ராக வரும் சிராக் ஜானியின் மிரட்டலான நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. இவரது மிடுக்கான தோற்றமும், கம்பீரமான வசன உச்சரிப்பும் ஜெயம் ரவிக்கு நன்றாக ஈடு கொடுத்து நடித்துள்ளார். இனி வரும் காலங்களில் இவரை அதிகமாக போலீஸ் கதாபாத்திரங்களில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. படத்தில் சிறிய வில்லனாக வரும் ஹரிஷ் பெரோடி வழக்கமான வில்லத்தனம் காட்டி சென்றுள்ளார். வில்லன் கபூர் ஆக வரும் இந்தி நடிகர் தருண் அரோரா தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். யூனியன் தலைவர் ஜனநாதன் ஆக வரும் மதுசூதனன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துவிட்டு கவனம் பெற்றுள்ளார். படத்தில் ஜெயம் ரவி நண்பர்களாகவும் அடியாட்களாகவும் நடித்துள்ள நடிகர்கள் சிறப்பான பங்களிப்பு செய்து படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

 

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில் கடல், கப்பல், ஹார்பர் என அதை சார்ந்த இடங்களை பல ஆங்கில்களில் சிறப்பாக காட்சிப்படுத்தி இரண்டரை மணி நேரம் ஹார்பருக்கு கூட்டிச் சென்று சுற்றிக் காட்டி விட்டு கூட்டி வந்துள்ளார். இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவும், சிறப்பான காட்சி அமைப்புகளும் படத்தின் இன்னொரு நாயகனாகவே மாறி இருக்கிறது. வழக்கம்போல் இரைச்சலான பின்னணி இசை மூலம் பார்ப்பவர்கள் காதை கிழித்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் வித்தியாசமாக எதையும் முயற்சி செய்யாமல் தனக்கு என்ன வருமோ அதையே முந்தைய படங்களை போல் இப்படத்திலும் கொடுத்து கவனம் ஈர்க்க முயற்சி செய்துள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் மனதில் பதியவில்லை. 

 

பூலோகம் படத்தில் குத்து சண்டை மற்றும் அதைச் சுற்றி நடக்கும் அரசியலை அதிரடியாகவும், தெள்ளத் தெளிவாகவும் காட்டிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இப்படத்தில் ஹார்பரில் நடக்கும் ஊழல்களையும், சரக்கு கப்பல்களால் நமக்கு ஏற்படும் விலைவாசி உயர்வுக்கான காரணங்களையும், தெளிவாக விளக்கி கூறி அதில் இருக்கும் அரசியலை அகிலன் படம் மூலம் பிரித்து மேய்ந்துள்ளார். குறிப்பாக கதையைக் காட்டிலும், திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி மிகவும் டீட்டியலாக காட்டி மீண்டும் ஒரு வெற்றி படத்தை அகிலன் மூலம் கொடுத்துள்ளார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்.

 

அகிலன் - புது அனுபவம்!

 

சார்ந்த செய்திகள்