தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் சில படங்கள் தான் அந்தத் தலைமுறையின் காதல் படங்களாக கொண்டாடப்படும். உதாரணத்திற்கு அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே போன்ற படங்களை சொல்லலாம். அப்படி இந்த தலைமுறைக்கான காதல் படமாக உருவாகியிருக்கிறது '96'.
டீசரில், ட்ரெய்லரில் நமக்கு கோடிட்டுக் காட்டப்பட்ட அதே பள்ளிக்கூட, முதல் காதல் கதைதான். ஆனால் உணர்வுப்பூர்வமாக அது நம்முன் விரியும் விதம், ஒரு கவிதையின் நயத்துடன் இருக்கிறது. 1996ஆம் பேட்ச் பள்ளி மாணவர்கள் 20 வருடங்கள் கழித்து ஒன்றுகூடுகிறார்கள். பள்ளிக் காலங்களில் காதலித்து, சூழ்நிலைகளினால் பிரிந்த ராமும் ஜானுவும் அத்தனை வருடங்கள் கழித்து அங்கு சந்திக்கிறார்கள். ஆனால், இருவரின் சூழலையும் காலம் வேறு வேறாக்கி தூரமாக்கியிருக்கிறது. இருவரும் பேசி, சிரித்து, அழுது கழிக்கும் அந்த ஓர் இரவுதான் படம். இடையிடையே ஃப்ளாஷ்பேக்குகளின் மூலம் இருவரது பள்ளிக் காதல், பிரிவு உள்ளிட்ட சுவாரசியமான சம்பவங்களும் விவரிக்கப்படுகின்றன.
மூன்றாம் பிறை சீனு முதல் விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் வரை தமிழ் சினிமா எத்தனையோ காதலர்களை கண்டிருக்கிறது. '96' ராம் அவர்களை விட பெருங்காதலன் ! பொதுவாக பல இயக்குனர்கள் விஜய் சேதுபதியின் வழக்கமான பலத்தைத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனாலயே விஜய் சேதுபதியின் மீது ‘எல்லா பாத்திரங்களிலும் விஜய் சேதுபதிதான் தெரிகிறார்’ எனும் விமர்சனம் உண்டு. ஆனால் '96'ல் விஜய் சேதுபதியைத் தாண்டி ராம் தெரிகிறார். ஜானுவின் மேல் உள்ள அளவற்ற காதல், ஆனால் அவளை பார்க்கும்போது நிலைகொள்ளா கால்கள், படபடக்கும் இதயம் என ராம், விஜய் சேதுபதியின் சிறந்த பாத்திரப் படைப்புகளில் ஒன்று.
ஜானு, இந்த படத்தின் உயிர்நாடி. த்ரிஷா வரும் ஒவ்வொரு நொடியும் ஜானு நமக்குள் ஆழச்செல்கிறாள். சின்னச் சின்ன பார்வைகள் முதல், புன்னகை, கண்ணீர் என மிக இயல்பான நடிப்பில், நேர்த்தியாக எழுதப்பட்ட அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் த்ரிஷா. இளவயது விஜய் சேதுபதியாக வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும், இளவயது த்ரிஷாவாக வரும் கௌரியும் மிக இயல்பாக ராமையும் ஜானுவையும் நமக்கு அறிமுகம் செய்துவைத்து விடுகிறார்கள். அதுவும் பல இடங்களில் ஆதித்யா விஜய் சேதுபதியின் முகபாவனைகளை அப்படியே பிரதிபலித்திருப்பது அட்டகாசம். ஜனகராஜ், இந்த இனிப்பான நினைவுகளுக்கு மேலும் இனிப்பு சேர்க்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ். பகவதி பெருமாள், தேவதர்ஷினி உள்ளிட்ட பிற நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு துணை நிற்கிறது.
முதல்காட்சி முதல் முற்றும்வரை ஆட்கொள்கிறது இசை. இரண்டே பேர், ஒரு இரவு. இசைக்கு எத்தனை பெரிய இடமிருக்க வேண்டும்? அத்தனை இடத்திலும் பிரவாகமெடுத்திருக்கிறது கோவிந்த் வசந்தாவின் இசை. மிகப்பெரும் ஹிட்டடித்த ‘காதலே காதலே’ பாடல் படத்தில் இடம்பெற்றிருக்கும் இடம் அற்புதம். அதைப்போல தளபதி படத்தில் வரும் ‘யமுனை ஆற்றிலே’ பாடலை வைத்து ஒரு சிறிய கதை பின்னியிருக்கிறார்கள். அதன் முடிவு அழகான கவிதையாய் இருக்கிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று துண்டுதுண்டாக பிரித்து பாராட்ட இயலாத தொழில்நுட்பம்தான் ஒரு படத்தின் கலையழகை கூட்டும். ’96 ல் ஒளிப்பதிவு செய்த மகேந்திரன் ஜெயராஜு, சண்முகசுந்தரம், படத்தொகுப்பு செய்த கோவிந்தராஜ் அளித்துள்ள ஒத்திசைவு படத்தின் கலைத்தன்மையை கூட்டுகிறது.
‘அய்யோ… இந்த காதல் சேர்ந்துவிட வேண்டுமே’என்று நம்மை பித்துக்கொள்ள வைக்க சில காதல்களால்தான் முடியும். அப்படியொரு காதல் இருக்கிறது '96' படத்தில். ‘அச்சோ.. இப்படி ஆயிருச்சே.. இப்படி பண்ணிருக்கலாமே.. ச்சே’என்று ரசிகர்கள் ஆதங்கப்படுவதே ஒரு நல்ல படத்தின் வெற்றி. வெறும் திரைப்படம்தான், இது நிஜமல்ல என்று தெரிந்தும் மிகச் சில படங்கள்தான் அந்த பாத்திரங்களுக்காக நம்மை பலநாட்கள் ஏங்கவைக்கும். அப்படி நம்மை ஏங்க வைக்கிறார்கள் ராமும் ஜானுவும்.
காதலின் கொண்டாட்டமான தருணங்களையும் பெருவலிகளையும் இயல்பாய் இணைத்த வகையில், இந்த படம் மறக்கவியலாத ஒரு காதல் கதையாக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறது. தமிழ் ரசிகர்கள் சிரித்து, அழுது, வலியுற்று, மறக்க முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டாடப் போகும் ஒரு படமாக '96' இருக்கக்கூடும்.