
பொதுவாக முன்னணியில் இருக்கும் நாயகிகள் பின்னாளில் மார்க்கெட் இழந்து விடும் பட்சத்தில் அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் போலீஸ் ஆபீஸர், பயமுறுத்தும் பேய், ஆக்ஷன் கதைகள் எனக் கதையின் நாயகியாக நடித்து பெயர் வாங்க முயற்சி செய்வார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் சோனியா அகர்வால், 7/ஜி படத்தின் மூலம் பேய் கதையை கையில் எடுத்து அதில் கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார். அவர் எடுத்த முயற்சி அவருக்கு கை கொடுத்ததா? இல்லை சொதப்பியதா?
ஐடியில் வேலை பார்க்கும் ரோஷன் பஷீர், ஸ்மிருதி வெங்கட்டை காதலித்து திருமணம் செய்து ஒரு புதிய அப்பார்ட்மெண்டில் தன் மகனோடு சொந்த வீடு வாங்கி குடியேறுகிறார். அந்த வீட்டில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான சினேகா குப்தா, தனக்கு கிடைக்காத நாயகன் யாருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணி சூனியம் வைத்து ஒரு சூனிய பொம்மையை அந்த வீட்டினுள் மறைத்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து நாயகன் ரோஷன் பஷீர் வேலை மார்க்கமாக வெளியூர் செல்கிறார். இந்தச் சமயத்தில் வீட்டில் தனியாக இருக்கும் ஸ்மிருதி வெங்கட் பல்வேறு அமானுஷ்யங்களை அந்த வீட்டினுள் சந்திக்கிறார். அந்த வீட்டுக்குள் இருக்கும் அமானுஷ்ய ஆத்மாவான சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட்டை பயமுறுத்தி கொடுமை செய்கிறது. ஸ்மிருதி வெங்கட்டும் இது தன்னுடைய வீடு, நான் அந்த வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கிறார். இதனால் அந்த பேய், ஸ்மிருதி வெங்கட்டின் மகனை துன்புறுத்துகிறது. இதனால் கோபமடையும் ஸ்மிருதி வெங்கட், அந்த அமானுஷ்ய ஆத்மாவை எதிர்த்து போராடுகிறார். இதையடுத்து அந்த அமானுஷ்ய ஆத்மா யார்? அது ஏன் இவர்களை துன்புறுத்த வேண்டும்? அந்த பேயிடம் இருந்து தன் மகனை ஸ்மிருதி வெங்கட் காப்பாற்றினாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் பேய் அந்த வீட்டுக்கு குடி வரும் நபர்களை துன்புறுத்துகிறது. இது நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்து பழக்கப்பட்ட ஒரு கதை. அப்படியாப்பட்ட இந்த கதையில் சின்ன சின்ன வித்தியாசங்களை வைத்து அதன்மூலம் முழு படத்தையும் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஹரூன். பொதுவாக பேய் என்றாலே மிகவும் உக்கிரமாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் வரும் பேய் சற்று செண்டிமெண்ட் பேயாக வருகிறது. இதுவே மற்ற பேய் படங்களில் இருந்து இந்த படம் வேறுபடுகிறது. இந்த ஒரு சின்ன விஷயத்தை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் படத்தை தொய்வில்லாமல் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர், கொஞ்சம் திரைக்கதையிலும் மெனக்கெட்டு சுவாரசியத்தை கூட்டி இருக்கலாம். மிகவும் பயமுறுத்தும் பேயாக இல்லாமல் குழந்தைகளும் ரசிக்கக்கூடிய பேயாக இதில் வரும் பேய் இருக்கிறது. இதனால் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் சென்று இந்த பேய் படத்தை சற்று ரசிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை இப்படம் உருவாக்கி இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் எதிர்பார்க்காத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், மிகவும் மோசமான படமாகவும் இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் பேய் படமாக அமைந்து இருக்கிறது. ஆரம்பத்தில் சில பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இயக்குநர் போகப் போக அவை அனைத்தையும் சற்று ஜனரஞ்சகமாக மாற்றி இருப்பது கொஞ்சம் ஸ்வாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது. இருந்தும் பெரிதாக மாறு தட்டிக் கொள்ளும் அளவுக்கு இல்லாமல், ஓரளவு பொழுதுபோக்கு படமாகவே இப்படம் அமைந்திருக்கிறது.

கதையின் நாயகி மற்றும் பேயாக வரும் சோனியா அகர்வால், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இவரது அனுதாபமான நடிப்பு பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்திருக்கிறது. மற்றொரு நாயகியாக வரும் ஸ்மிருதி வெங்கட், கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை நிறைவாக கொடுத்திருக்கிறார். கணவனுக்கு மனைவியாகவும், மகனுக்கு தாயாகவும் என இருவேறு கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கும் அவர், தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகன் ரோஷன் பஷீர் பேருக்கு நாயகனாக படத்தில் வருகிறார். இரண்டு மூன்று காட்சிகள் வந்துவிட்டு செல்லும் இவர், இரண்டு பாடல்களுக்கு மட்டும் தலையை காட்டி விட்டு செல்கிறார். சூனியக்கார காதலியாக வரும் சினேகா குப்தா, ஆரம்பத்தில் பயமுறுத்தி போக போக சிரிப்பு காட்டி விட்டு சென்றிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சுப்பிரமணிய சிவா மனதில் பதிகிறார். இசையமைப்பாளராக இருக்கும் சித்தார்த் விப்பின், இப்படத்திற்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் நடிப்பில் வில்லத்தனமும் காட்டி இருக்கிறார். வில்லனாக வரும் இவர் இவருக்கு நடிப்பில் எந்த அளவு வில்லத்தனம் காட்டி பயமுறுத்த முடியுமோ அதை செவ்வன செய்திருக்கிறார். சில இடங்களில் இவரது வில்லத்தனம் சற்றே சிரிப்பு வரும்படியாக இருக்கிறது. கண்ணா ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகளும், பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சித்தார்த் விப்பின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே ரகம் தான்.
படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளில் இருக்கும் திருப்புமுனைகளும், எதிர்பார்ப்புகளும், அடுத்தடுத்து நகரும் காட்சிகளிலும் தொடர்ந்திருந்தால் இது ஒரு நல்ல ரசிக்கத்தக்க பேய் படமாக மாறி இருக்கும்.
7/G - சென்டிமென்ட் பேய்!