கடந்த 1997ஆம் ஆண்டு இத்தேதியில் டி.நாகராஜன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான படம் அரவிந்தன். இதில் நக்மா, பார்த்திபன், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தின் மூலமாகதான் யுவன் சங்கர் ராஜா முதன் முதலாக தமிழ் சினிமா துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
வருடா வருடம் இந்த தேதியை யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடத்துடன் யுவன் சங்கர் ராஜா சினிமாத் துறைக்குள் அடியெடுத்து வைத்து 23 ஆண்டுகள் ஆகின்றன. இதை அவரது ரசிகர்கள் ட்விட்டரி, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் யுவன் குறித்தும் அவருடைய படைப்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். யுவனுக்கு வாழ்த்து தெரிவித்து #23YearsofYuvanism என்ற ஹேஸ்டேகை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில், “இத்தனை ஆண்டுகளாக உங்களுடைய அன்பும், ஊக்கமும் இல்லையென்றால் இது நடந்திருக்காது. உங்கள் அன்பு மட்டுமே என்னை உயரத்திற்குச் செல்ல ஊக்கப்படுத்தியது. இன்னும் செல்வேன். என்னுடைய இதயம் அன்பினாலும் நன்றியுணர்வாலும் நிரம்பியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது யுவன் இசையில் 'மாமனிதன்', 'குருதி ஆட்டம்', 'வலிமை', 'டிக்கிலோனா', 'ஜன கன மண', 'பொம்மை', 'சக்ரா' உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.