கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்க முத்திரையை பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ளார். சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து, ரசிகர்கள் மற்றும் குடும்பதினருக்கு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த யுவன் சங்கர் ராஜா பல கேள்விக்கு பதிலளித்தார். அந்தவகையில் பத்திரிகையாளர் ஒருவர் " இசையமைப்பாளராக ஒரு உயரத்தை தொட்டு விட்டீர்கள், படத்தை தயாரித்தும் வருகிறீர்கள், அடுத்து என்ன திட்டம் வச்சிருக்கீங்க" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யுவன்," நான் இப்போ ஒரு கதை எழுதி வச்சிருக்கேன். பெண்களை மையப்படுத்திய கதை. ஜியோ நிறுவனத்துடன் இணைந்து அந்த கதையை இயக்கவுள்ளேன். விரைவில் அதுகுறித்து உங்களுடன் பேசுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.