எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் ‘யோலோ’ திரைப்படத்தின் பூஜை, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.சாம், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா ஃபியா, விக்னேஷ், லக்ஷ்மி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் பூஜையில் இயக்குநர் அமீர், இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இந்நிகழ்வினில், இயக்குநர் அமீர் பேசியதாவது, “ஒரு துவக்க விழா, இங்குள்ள பலருக்கு இது வழக்கமான விழா. ஆனால் சாமிற்கும் அவரது குழுவிற்கும் அவர்கள் வாழ்க்கையைத் துவக்கும் விழா. எனக்கு சேதுவைத் துவங்கிய நாள் தான் ஞாபகம் வருகிறது. 93ல் பாலாவின் அகிலன் பூஜை போட்ட அன்றே நின்று போய்விட்டது. தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களிடமும் அந்தக்கதை போய் வந்தது. ஆனால், அது நடக்கவில்லை. பின் அது சேதுவாக மாறியது. இங்கு தான் பூஜை போட்டோம், பூஜை அன்று தொழிலாளர்கள் பிரச்சனையில் நின்று போனது. 7 வருடம் கழித்து தான் முடிந்தது. அப்புறமும் படம் வரவில்லை. என்றாவது ஒரு நாள் படம் வரும் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம்.
பாலா தன் ஒட்டுமொத்த உழைப்பையும் தந்து, ஒரு தலைமுறையினருக்கு வாழ்வை வாய்ப்பை தரும் படைப்பை உருவாக்கி வைத்திருந்தார். ஒரு திரைத் தலைமுறையே அவர் மூலமாகத்தான் வந்தது. அந்த ஆலமரம் தான் பல புதிய கிளைகளைத் தந்துள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு தான் இந்தப்படமும். எந்தக்காலத்திலும் ஒருவன் தனியாக ஜெயிக்க முடியாது. அப்படித்தான் இன்று இங்கு மகேஷ் இருக்கிறார். சாம் செய்ய வேண்டியது ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டியது தான். இயக்குநர் சாமை என்னிடமிருந்து சமுத்திரக்கனி கூட்டிக்கொண்டு போய்விட்டான். நல்ல ஆட்களையெல்லாம் அவன் கூட்டிக்கொண்டு போய்விடுவான். சாமிற்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டும். எங்கள் கிளையைப் பரப்ப சாம் வந்திருக்கிறான் என நம்புகிறேன். இந்தப்படம் பெரிய வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன் நன்றி.