
கன்னியாகுமரி நாகர்கோவிலில் உள்ள வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வடிவேலு பங்கேற்று திறந்து வைத்தார். பின்பு மேடையில் வருமான வரியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் “மீம்ஸ் கிரியேட்டருங்க தான் நம்ம எந்த நேரமும் பிஸியா இருக்கிற மாதிரியே மக்கள் மத்தியில கொண்டு போய்ட்டாங்க. எதைப் பத்தி யார் பேசுனாலும் என்னுடைய கலவை இல்லாம இருக்க மாடிங்குது. எந்த சம்பவம்னாலும் அப்படித்தான். எதையும் தழுவாம நழுவாம என்னுடைய காமெடி இல்லைன்னு நினைக்கிற போது ரொம்ப பெருமையா இருக்கு. அதுக்கு காரணம் மீம்ஸ் கிரியேட்டருங்க தான். மனசு கவலையா இருந்தாக் கூட எதுக்கோ நான் பண்ண காமெடிய எதிலோ கொண்டு கோர்த்து மக்களை சிரிக்க வைக்கும் போது ஜனங்களுக்கு ரொம்ப சந்தோஷமா மாறுது” என்றார்.
பின்பு அவரிடம் அவர் ஹீரோவாக நடிப்பது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என எல்லாருக்குமே பல படங்கள் தோல்வியாகியிருக்கு. அது வாழ்க்கையில சகஜம் தான. எப்போதும் ஜெயிச்சிட்டே இருந்தா நல்லா இருக்காது. ஒரு படம் ஓடும், இன்னொரு படம் ஓடாது அதுக்கு என்ன பன்ன முடியும். இப்பதான் பாதி படத்த ஃபோன்லையே பாத்துறீங்களே. அப்புறம் படம் எப்புடி தியேட்டர்ல ஓடும். எல்லாரும் தியேட்டருக்கு போய் பார்க்கனும்” என்றார்.