
தெலுங்கு சினிமாவில் நான் தசாப்தங்களாக நடித்து வருபவர் சிரஞ்சீவி. முன்னணி நடிகரான இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்திய நாட்டின் உயரிய விருதுகளாக பத்ம விபூஷன், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய திரைப்படத் துறையில் 537 பாடல்களுக்கு 24 ஆயிரம் வித்தியாசமான நடன அசைவுகளை ஆடியிருப்பதாக இவருக்கு கின்னஸ் சாதனை கொடுக்கப்பட்டது. சினிமாவை தவிர்த்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் திரைப்படத்துறை மற்றும் சமூகத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில் முதல் இந்தியராக இந்த விருதை பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது சிரஞ்சீவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிரஞ்சிவி தம்பி மற்றும் ஆந்திர துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாண், நடிகர் சாய் தரம் தேஜ், சத்யா உள்ளிட்ட நடிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.