தர்மபிரபு, கூர்கா படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் யோகிபாபு தொடர்ந்து பல படங்களில் காமெடியனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த செய்திகளுக்கு விளக்கமளித்து நடிகர் யோகிபாபு பேசும்போது...
![yogibabu](http://image.nakkheeran.in/cdn/farfuture/noSuLMXM_xQw2JacF2AZ75hsaQXvt0ZbRZ5Lx4DAfmI/1570258320/sites/default/files/inline-images/yogibabu-1280x720.jpg)
''தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில்தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான்தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அதுவும் அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி" என்றார்.