கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு, பிரியா கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி வெளியான படம் 'ரிப்பீட் ஷூ'. இப்படத்தின் விநியோகம் மற்றும் சேட்டிலைட்ஸ் உரிமத்திற்காக தயாரிப்பாளர் கார்த்தியிடம் ரூ.1.10 கோடி ஒப்பந்தம் செய்து அதில் முதல் தவணையாக ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மதுராஜ் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக கடந்த 30ஆம் தேதி சொந்த ஊரான மதுரைக்குச் சென்றுவிட்டதாகவும் இதனால் அவர் சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த 1ஆம் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த தயாரிப்பாளர் கார்த்தி 13 பேர் கொண்ட கும்பலுடன் அங்கிருந்த ஊழியர்கள் கோபி, பென்சர் ஆகிய இருவரையும் அடித்து கத்தியைக் காட்டி மிரட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரையும் அடைத்து வைத்துப் பணம் கேட்டு மிரட்டி அவர்கள் செல்போன்களை பறித்து ஏ.டி.எம் கார்டின் மூலம் ரூ.70 ஆயிரம் தொகையை எடுத்துக்கொண்டுள்ளார்களாம். பின்னர் இருவரையும் தாம்பரம் இரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு போலீசில் சொன்னால் கொன்றுவிடுவோம் எனக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்களாம்.
இதனைத் தொடர்ந்து மதுரைக்குச் சென்ற மதுராஜ் சென்னைக்குத் திரும்பியதும் இந்த சம்பவம் தெரிய வந்து கோபி, பென்சர் ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அதில் பென்சர் மட்டும் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மதுராஜ். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸ், தாம்பரம் அருகே பதுங்கி இருந்த நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் நாகராஜ் மற்றும் வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும் சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போன பென்சரை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.