பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகியுள்ளது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் யாஷ் பேசுகையில், "புனித் ராஜ்குமாரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். ஹோம்பாலேயின் பயணம் புனித் அவர்களால் தொடங்கப்பட்டது. இதில் நானும் சிறிய அளவில் பங்களிப்பு செய்திருக்கிறேன். இப்படத்தின் மூலம் கிடைக்கும் எல்லா புகழும் என்னுடைய கன்னட சினிமாவுக்கும், அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சேர வேண்டும். அத்துடன் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கும் பேரும் புகழும் கிடைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் எங்களது கனவுகளை நனவாக்க நல்லதொரு வாய்ப்பை வழங்கினார்கள்.
இது பிரசாந்த் நீலின் படம். அதில் நான் ஒரு பகுதியாக இருந்தேன். அவர் கதாநாயகர்களை நேசிக்கிறார். ஒவ்வொரு படைப்பாளியும் முன்னணி நடிகர்களை நேசிக்கும் போது அவர்களிடமிருந்து சிறந்தவற்றை பெறுகிறார்கள். ரவீனா டாண்டன் ஒரு அற்புதமான நடிகை. சஞ்சய் தத் ஒரு சிறந்த போராளி. தன்னுடைய உடல்நலச் சிக்கல்களுக்கு இடையில் சண்டைக்காட்சிகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, படத்தை ஒப்பற்ற நிலைக்கு கொண்டு சென்றார். நான் அவரின் மிகப்பெரிய ரசிகன்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஐந்து வருடங்கள் பொறுமையாக காத்திருந்த என் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு நன்றி. அவரின் முதல் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்பது அதிர்ஷ்டம்தான். படத்தில் பணியாற்றிய நடிகை மாளவிகாவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி'' எனக் கூறினார்.