ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானய்யா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் பலரது கவனத்தை ஈர்த்து மேலும் திரைத்துறையில் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.
இப்படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்த நிலையில் முதல் இரண்டு வாரத்தில் அதிக மணிநேரங்கள் (25,540,000) பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்த நிலையில் அந்த சாதனையை யாமி கவுதமின் சோர் நிகல் கே பாகா (Chor Nikal Ke Bhaga) படம் முறியடித்துள்ளது. கடந்த மாதம் 24ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியான முதல் இரண்டு வாரத்தில் (29,000,000) மணிநேரங்களைக் கடந்துள்ளது. அஜய் சிங் இயக்கியுள்ள இப்படத்தில் யாமி கௌதம், சன்னி கௌஷல், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினேஷ் விஜன் மற்றும் அமர் கௌசிக் இருவரும் தயாரித்த இப்படத்தின் கதைக்களம் விமானத்தில் நடக்கும் ஹைஜாக் பற்றி அமைந்திருக்கும்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பதிவில், "யாமி கவுதம் தொடர்ந்து அமைதியாக; மிகவும் சிறப்பாக; மிக வெற்றிகரமான படங்களை வழங்கி வருகிறார். இது மிகவும் ஊக்கமளிக்கிறது. முழு படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துப் பாராட்டியுள்ளார்.