எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பிரபல மலையாள தயாரிப்பாளரான சுவர்க்கசித்திரா அப்பச்சன் குறித்தும், அவர் தயாரித்த அழகிய தமிழ் மகன் படத்தின்போது நிகழ்ந்த சம்பவம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
”விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான அழகிய தமிழ் மகன் படம் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயத்தை கூறுகிறேன். இந்தப் படத்தை பரதன் இயக்க, சுவர்க்கசித்திரா அப்பச்சன் தயாரித்திருந்தார். கேரளாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான அப்பச்சன், சுவர்க்கசித்திரா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். விஜய்யின் காதலுக்கு மரியாதை படமே அனியத்திபிராவு என்ற மலையாள படத்தின் ரிமேக் தான். அந்தப் படத்தையும் சுவர்க்கசித்திரா அப்பச்சன்தான் தயாரித்திருந்தார். தமிழ், மலையாளம் இரண்டிலுமே ஃபாசில் தான் இயக்கினார். ஃபாசில் இயக்கிய பல படங்களை சுவர்க்கசித்திரா அப்பச்சன் தயாரித்திருப்பதால் அவருக்கும் ஃபாசிலுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.
அதனால் காதலுக்கு மரியாதை படத்தை ஃபாசில் இயக்கிக்கொண்டிருந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சுவர்க்கசித்திரா அப்பச்சன் சென்றிருக்கிறார். அவரை விஜய்க்கு ஃபாசில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்போது விஜய்யிடம் அப்பச்சன் கால்ஷீட் கேட்க, விஜய்யும் ஓகே சொல்லியிருக்கிறார். அதன் பிறகு, விஜய்யை வைத்து ப்ரெண்ட்ஸ், அழகிய தமிழ் மகன் என இரண்டு படங்களை அவர் தயாரித்தார்.
அழகிய தமிழ் மகன் படத்திற்கு விஜய் கால்ஷீட் கொடுத்தபோது, முதலில் வேறு படம்தான் எடுப்பதாக இருந்தது. சுவர்க்கசித்திரா அப்பச்சன் ரன் அவே என்று மலையாளத்தில் ஒரு படத்தை தயாரித்திருந்தார். அந்தப் படத்தை தமிழில் ரிமேக் செய்யலாம் என முடிவெடுத்து விஜய்க்கு படம் போட்டுக்காட்டுகிறார். ஆனால், விஜய்க்கு படம் பிடிக்கவில்லை. பின், சேரன், எஸ்.ஜே.சூர்யா என நிறைய பேர் கதை சொன்னார்கள். அதில் பரதன் கூறிய கதை விஜய்க்கு பிடித்திருந்ததால் அழகிய தமிழ் மகன் படத்தை அப்பச்சன் தயாரித்தார்.
படத்திற்கான வேலைகள் தொடங்கியதும் இசையமைப்பாளராக ரஹ்மானை புக் செய்யும்படி விஜய் கேட்டுக்கொள்கிறார். சுவர்க்கசித்திரா அப்பச்சன் தயாரித்த சில படங்களில் ஆரம்பக்காலங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் வாசித்திருக்கிறார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அப்பச்சன் மூவாயிரம் சம்பளம் கொடுப்பாராம். அதனால் இருவருக்கும் அறிமுகம் இருந்தது. அதன் பிறகு, மிகப்பெரிய இசையமைப்பாளராகி கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலைக்கு ரஹ்மான் உயர்ந்துவிட்டார்.
அந்த நேரத்தில் ரஹ்மான் இந்தி படங்களுக்கு 2 கோடியும் தமிழ்ப்படங்களுக்கு 1 கோடியும் சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார். அப்பச்சனுக்காக அழகிய தமிழ் மகன் படத்திற்கு 75 லட்சம் மட்டும் சம்பளம் வாங்கினார். ஏ.ஆர்.ரஹ்மானை கமிட் செய்த விஷயத்தை விஜய்யிடன் சென்று சொன்னதும் அவருடன் ஒரு போட்டோ எடுக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று விஜய் கேட்டிருக்கிறார். அதன் பிறகு, விஜய், பரதன், அப்பச்சன் என மூவரும் ஒன்றாக சென்று ரஹ்மானுடன் போட்டோ எடுத்திருக்கிறார்கள்.
18 கோடியில் அழகிய தமிழ் மகனை எடுக்க பட்ஜெட் போட்டார்கள். ஆனால், 21 கோடியில்தான் படத்தை எடுக்க முடிந்தது. பின், படத்தை 27 கோடிக்கு விற்றதில் தயாரிப்பாளருக்கு 6 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது”.