எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....
"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார்.
அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில் அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".