Skip to main content

பைக் ரேஸ் விபத்தால் படுக்கையில் அஜித்... ‘அமராவதி’ படத்திற்கு கைகொடுத்த விக்ரம்! 

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் எஸ்.பி.பியின் பங்கு குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

வாழ்க்கையில் நாம் முன்னேறுவதற்கும் உயர்ந்த இடத்தை அடைவதற்கும் மூலக்காரணமாக பல பேர் இருப்பார்கள். இவர்களெல்லாம் நம் வாழ்க்கையில் ஒளியேற்றும் விளக்காக இருப்பார்கள் என்று நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட மனிதர்கள் தக்க நேரத்தில் செய்த சிறிய உதவி நம் வாழ்க்கையில் பெரிய அளவில் உயர்வைக் கொடுத்திருக்கும். எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாயினும் இன்று வெற்றிபெற்றுள்ள அனைவருக்குப் பின்னாலும் நிச்சயம் இதுபோன்ற ஆட்கள் இருப்பார்கள். மற்றவர்கள் துணையின்றி தனியாளாக நாம் மேலெழுந்து வருவது கடினம். அந்த வகையில், தல அஜித்குமாரின் வாழ்க்கையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எப்படி ஒளியேற்றும் விளக்காகத் திகழ்ந்தார் என்பது குறித்து உங்களுக்கு கூறுகிறேன்.

 

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாரின் மகன் சரணும் அஜித்தும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அதன்மூலம், எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு அஜித் அறிமுகமாகியிருந்தார். அஜித்தின் வசீகரமான முகம், நடை பாவனைகளைக் கவனித்த எஸ்.பி.பி, அஜித்தை திரைப்பட நடிகராக்க வேண்டும் என்று நினைக்கிறார். அந்த சமயத்தில் இயக்குநர் கொல்லப்புடி சீனிவாஸ் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்' என்ற படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார். வசீகரமான தோற்றம் கொண்ட இளம் கதாநாயகனைப் படக்குழு தேடிக்கொண்டிருப்பது தெரியவந்ததும், அவர்களிடம் நடிகர் அஜித் ஃபோட்டோவை எஸ்.பி.பி காண்பிக்கிறார். நடிகர் அஜித் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதிய படத்தின் இயக்குநர், அஜித்தை நாயகனாக வைத்து படம் இயக்கத் தொடங்குகிறார். நடிகர் அஜித்தின் சினிமா எண்ட்ரி தெலுங்கு திரைப்படம் வாயிலாகத்தான் அமைந்தது. அதற்கான வாய்ப்பை அஜித்திற்காகப் பரிந்துரை செய்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 

 

ajith

 

படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், படத்தின் இயக்குநர் கொல்லப்புடி சீனிவாஸ் எதிர்பாராத விதமாக மரணமடைகிறார். இதனால், படத்தை மேற்கொண்டு தொடங்குவதில் சிக்கல் எழுந்தது. முதல் திரைப்படத்திலேயே இவ்வாறு நடந்தது அஜித்திற்கு ஏமாற்றம் தரக்கூடியதாகவும் எஸ்.பி.பிக்கு வருத்தம் தரக்கூடியதாகவும் இருந்தது. அந்த வருடத்தில், தமிழில் ‘அமராவதி’ என்ற திரைப்படம் தயாராகவிருந்தது. அந்தப் படத்தைச் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் தயாரிக்க, இயக்குநர் செல்வா இயக்கவிருந்தார். படத்திற்கு இளம் கதாநாயகனைப் படக்குழு தேடிக்கொண்டிருந்தது. நாம் ஏற்கனேவே அஜித்திற்காக எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. அது நிச்சயம் அஜித்திற்கு மனவருத்தத்தைத் தந்திருக்கும் என்று நினைத்து, மீண்டும் ஒருமுறை அஜித்திற்காகப் பரிந்துரை செய்யலாம் என முடிவெடுக்கிறார் எஸ்.பி.பி. அஜித்தின் புகைப்படத்தைக் காட்டி இயக்குநர் செல்வாவிடம் பரிந்துரைக்கிறார். அஜித்தின் உருவம் இயக்குநர் செல்வா எதிர்பார்க்கும் கதாநாயகன் உருவத்தோடு ஒத்துப்போனதால், அஜித்தையே நாயகனாக நடிக்கவைக்கலாம் என்ற முடிவிற்கு ‘அமராவதி’ படக்குழு வருகிறது. அஜித்திற்கு ஜோடியாக சங்கவி தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘அமராவதி’ திரைப்படம் வெளியானபோது வர்த்தகரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. 

 

இதற்கிடையில் ஒரு சம்பவம் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து பின்தயாரிப்பு பணிகள் தொடங்குவதற்கான இடைப்பட்ட நேரத்தில் அஜித்திற்கு விபத்து ஏற்படுகிறது. பைக் ரேஸின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அஜித் சில மாதங்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நிலையுண்டானதால், படத்திற்கு அஜித் டப்பிங் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நடிகர் விக்ரம், பிரபுதேவா உள்ளிட்ட பல நடிகர்களுக்கு டப்பிங் செய்துவந்தார். அதனால், அவரையே ‘அமராவதி’ படத்தில் டப்பிங் பேசவைக்கலாம் என படக்குழு முடிவெடுத்தது. ‘அமராவதி’ படத்தில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்தவர் நடிகர் விக்ரம்தான். நடிகர் அஜித்தின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒருநபர் என்றால், ஆரம்பக்கட்டங்களில் தெலுங்கிலும் தமிழிலும் அஜித்திற்காக பரிந்துரைசெய்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்தான்.  

 

 

சார்ந்த செய்திகள்