எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரை வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தார். இந்தியாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான ஒரு நடிகர் இல்லவே இல்லை என்று நாம் அனைவரும் நினைக்கும் அளவிற்கு தன்னுடைய பெயரை எப்படி ஆழமாக பதித்துவிட்டுச் சென்றார் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு வியக்கத்தக்க வகையில் உயிரூட்டியவர் சிவாஜி கணேசன். அதற்கு முக்கிய காரணம் கதாபாத்திரங்களை அவர் கூர்ந்து கவனிப்பதுதான். நாம் சாலையில் செல்லும்போது எத்தனையோ மனிதர்களைப் பார்ப்போம். ஆனால், யாரையும் பெரிய அளவில் கூர்ந்து கவனிக்க மாட்டோம். ஆனால், சிவாஜி கணேசன் தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் எப்படி பேசுகிறார்கள், எப்படி நடக்கிறார்கள், எப்படி சிரிக்கிறார்கள், எப்படி சோகத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கவனித்துக்கொண்டே இருப்பார். அது பணக்காரர்கள், ஏழைகள், முதியவர்கள், இளைஞர்கள் என யாராக இருந்தாலும் சரி. சிவாஜி கணேசன் மனிதர்களை இவ்வாறெல்லாம் கவனிக்கிறார் என்பது அருகே இருப்பவர்களுக்குக்கூட தெரியாது. தான் கவனித்த விஷயத்தை தேவை வரும்போது படங்களில் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்வார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை உங்களுக்குக் கூறுகிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜனும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் இருவரும் காரில் சென்றுகொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு ரயில்வே சிக்னலில் காரை நிறுத்துகின்றனர். எலும்புறுக்கி நோயால் பாதிக்கப்பட்ட முகச்சுருக்கங்கள் நிறைந்த ஒரு முதியவர் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். கடுமையாக இருமிக்கொண்டு ஒவ்வொருவரிடமாக அந்த முதியவர் பிச்சை கேட்கும் காட்சியைத் தூரத்திலிருந்து சிவாஜி கணேசனும் மேஜர் சுந்தர்ராஜனும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். க்ரீன் சிக்னல் விழுந்தவுடன் இருவரும் கடந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு 'பாபு' என்ற படத்தில் நடிக்க சிவாஜி கணேசனுக்கு வாய்ப்பு வந்தது. 'ஓடையில் நின்னு' என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான அப்படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்கினார். அப்படத்தில் இடம்பெற்றிருந்த 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...' பாடல் காலத்தைக் கடந்து, இன்றும் கேட்கப்படுகிறது. படத்தின் ஆரம்பத்தில் இளைஞனாக வரும் சிவாஜி, கடைசியில் வயது முதிர்ந்து டி.பி. நோயாளிபோல ஆகிவிடுவார். அந்தக் காட்சிகளை படமாக்கும்போது மேஜர் சுந்தர்ராஜனுக்கு ஆச்சர்யம் தாங்க முயடியவில்லையாம். அன்று ரயில்வே சிக்னலில் பார்த்த பிச்சைக்காரனின் பாவனைகள் எப்படி இருந்ததோ, அதை அப்படியே பிரதிபலித்தார் சிவாஜி. இந்த அளவிற்கு அந்த மனிதனை சிவாஜி கவனித்தாரா என்று மேஜர் சுந்தர்ராஜன் ஆச்சர்யப்பட்டாராம்.
'பாபு' படத்தை நான் பார்த்தபோது சிவாஜி நடிப்பைக் கண்டு மிரண்டுவிட்டேன். எப்படி இவ்வளவு தத்ரூபமாக நடித்தார் என்று யோசித்தேன். அப்போது எனக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது. திரையரங்கில் படம் பார்க்கும்போதே நிறைய பேருக்கு கண்ணீர் வந்துவிட்டது. படம் முடிந்த பிறகு அழுதுகொண்டே திரையரங்கைவிட்டு வெளியே வந்தால்தான் சிவாஜி ரசிகர்களுக்கு மிகப்பெரிய காவியத்தைப் பார்த்தது போன்ற திருப்தி கிடைக்கும். குறிப்பாக, சிவாஜி கடைசியில் இறந்துபோவதுபோல படம் இருந்தால், படம் சூப்பர் ஹிட். சாலையில் சந்தித்த ஒரு பிச்சைக்காரரின் உடல்மொழியைத்தான் 'பாபு' படத்தில் சிவாஜி பின்பற்றினார் என்ற விஷயமெல்லாம் அப்போது யாருக்கும் தெரியாது. பின்னாட்களில் மேஜர் சுந்தரராஜன்தான் அந்த விஷயத்தை வெளியே கூறினார்.