எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசுவது மிக உயர்ந்த குணம். சிலர் மனதில் ஒன்று நினைப்பார்கள். ஆனால், பேசும்போது அது வேறாக இருக்கும். அத்தகைய மனிதர்கள் பெரும்பாலும் போலியான குணம் கொண்ட மனிதர்களாகவே இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசக்கூடிய உயர்ந்த குணம் கொண்டவர். ரஜினிகாந்தின் இந்தக் குணத்தை நான் வியந்து பார்த்த ஒரு தருணத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்தை உருவாக்கினார். அந்த நகரத்தின் திறப்புவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெற்றன. அவர்கள் விழா மேடையிலும் அமரவைக்கப்பட்டனர். இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் குஞ்சுமோன் உட்பட பலரும் அந்த விழா மேடையில் அமரவைக்கப்பட்டனர். ஆனால், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி கணேசனுக்கு மேடையில் இடம்வழங்கப்படாமல் பார்வையாளர்கள் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் இடத்தில் வேறு எந்த நடிகராவது இருந்திருந்தால் விழாவிற்கே வந்திருக்க மாட்டார்கள். ஆனால், சிவாஜி கணேசன் பெருந்தன்மையுடன் வந்து தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார். இதை சிவாஜி கணேசனுக்கு நிகழ்ந்த அவமரியாதையாக உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் கருதினர். உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசனுக்கு எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஜெயலலிதாவின் இந்தச் செயல் கலை ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இந்தச் சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து, சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கும் விழா திருவல்லிக்கேணி சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போதும் ஜெயலலிதாதான் முதலமைச்சர். அந்த விழாவை அவர்தான் தலைமையேற்றும் நடத்தினார். அப்படி ஒரு விழா இந்தியாவில் எந்தவொரு நடிகருக்காகவும் இதற்கு முன் நடந்ததில்லை. இந்தியாவின் அனைத்து மொழிகளைச் சேர்ந்த திரை நட்சத்திரங்களும் அந்த விழாவிற்கு வருகை தந்திருந்தனர். இருபது பேர் சேர்ந்து ஒரு பிரம்மாண்ட மாலையை தூக்கிவந்து சிவாஜி கணேசன் கழுத்தில் போட்டனர். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ‘தவறு செய்வது என்பது மனித இயல்புதான்; தான் செய்த தவறை திருத்திக்கொள்வது அதைவிட பெரிய விஷயம். ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் சிவாஜி சாருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கொடுக்கப்படவில்லை. நான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து இன்று சிவாஜி சாருக்கு மிகப்பெரிய விழா எடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்’ என்றார். ஜெயலலிதாவும் அதே மேடையில்தான் இருந்தார். ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாதது பற்றி பேசிய முதல் நபர் நடிகர் ரஜினிகாந்த்தான். பலருக்கும் இது தெரிந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று எவரும் அது பற்றி பேசவில்லை. ஏன் பத்திரிகைகள்கூட அது தொடர்பாக எதுவும் எழுதவில்லை.
ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் வந்தது. மனதில் இருந்ததை தைரியமாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது, அவர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.