எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பாலுமகேந்திரா இயக்கிய 'மூன்றாம் பிறை' படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
மூன்றாம் பிறை திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், திரையுலக வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்று மக்களின் மனங்களிலும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது மூன்றாம் பிறை. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மூன்றாம் பிறை படத்தை நம்மால் மறக்கவே இயலாது. காலத்தைக் கடந்து நிற்கக்கூடிய அமர காவியம் மூன்றாம் பிறை.
1982ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் மருமகன் டி.ஜி.தியாகராஜன் சத்யா மூவிஸ் நிறுவனத்தைக் கவனித்துவந்தார். அவருக்கு ஒத்தாசையாக சத்யஜோதி தியாகராஜன் இருந்தார். அந்தக் காலத்தில் சத்யா மூவிஸ், எம்.ஜி.ஆரை வைத்து நிறைய படங்கள் தயாரித்தார்கள். பின்னாட்களில், ரஜினி, கமல்ஹாசனை வைத்தும்கூட படம் எடுத்தார்கள். ஒருகட்டத்தில் தனியாக படமெடுக்கலாம் என நினைத்த தியாகராஜன், சத்யா மூவிஸ் நிறுவனம் போல ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படங்களாக இல்லமால் மென்மையான படங்கள் எடுக்கலாம் முடிவெடுக்கிறார். அப்போதுதான் தியாகராஜனின் பால்யகால நண்பரான மணிரத்னம் மூலம் பாலுமகேந்திரா அறிமுகம் ஆகிறார்.
மணிரத்னம் 'பல்லவி அனு பல்லவி' என்ற கன்னடப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அந்தப் படத்திற்கு பாலுமகேந்திராதான் கேமராமேன். பின், பாலுமகேந்திரா தியாகராஜனிடம் சென்று ஒரு கதையை கூறினார். அந்தக் கதைதான் மூன்றாம் பிறை படமாக பின்னாட்களில் வந்தது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான முதல்படம் மூன்றாம் பிறை. கமலுக்கும் கதை பிடித்திருந்ததால் அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவராக கதாநாயகி இருக்க வேண்டும் என்பதால் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது கமல்தான் ஸ்ரீதேவியை பரிந்துரைத்தார். ஸ்ரீதேவியின் அம்மாவிடம் கமல்ஹாசனே நேரடியாக பேசி ஸ்ரீதேவியை படத்திற்குள் கொண்டுவந்தார். படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்ததால் ஸ்ரீதேவியும் நடிக்க சம்மதித்துவிட்டார்.
ஊட்டியில்தான் படப்பிடிப்பு நடந்தது. கமல், ஸ்ரீதேவி இருவருமே அற்புதமாக நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் வரும் 'கண்ணே கலைமானே' பாடல்தான் கண்ணதாசனின் கடைசி பாடல். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கண்ணதாசன் வெறும் 10 நிமிடத்தில் அந்தப் பாடலை எழுதிக்கொடுத்தார். மூன்றாம் பிறையில் வரும் 'பூங்காற்று புதிதானது' என்ற பாடலையும் கண்ணதாசன்தான் எழுதியிருப்பார்.
பொதுவாக பாலுமகேந்திரா காலை இளம்வெயிலிலும், சாயங்காலம் வெயில் குறைந்த பிறகும்தான் படப்பிடிப்பு நடத்துவார். அதனால்தான் அவர் படங்கள் மென்மையாகவும், கவித்துவமாகவும் இருக்கும். மூன்றாம் பிறை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி உணர்வுப்பூர்வமாக இருக்கும். அந்தக் காட்சியை மூடுபனியில்தான் பாலுமகேந்திரா படமாக்கியிருப்பார். வெளிச்சம் குறைவான அந்த மூடுபனியில் படம் பிடிக்க தயாரிப்பளாருக்கு உடன்பாடில்லையாம். ஆனால், பாலுமகேந்திரா உறுதியாக இருந்ததால் படமாக்கியுள்ளார்கள். பின், படம் பிடித்தவுடன் லைட்டிங் சரியாக இருக்கிறதா, காட்சி சிறப்பாக வந்திருக்கிறதா என உறுதி செய்ய அந்த ஃபிலிமை அங்கிருந்து சென்னையில் உள்ள ஸ்டூடியோவிற்கு அனுப்பியுள்ளார்கள்.
ஸ்டூடியோவில் காட்சியை பார்த்தவர்கள் ஆச்சர்யம் அடைந்துவிட்டனர். காட்சி பிரம்மாதமாக இருக்கிறது, எப்படிப்பட்ட ரிசல்ட்டை பாலுமகேந்திரா சார் கொடுத்திருக்கிறார் என்று ஸ்டூடியோவில் படம் பார்த்தவர்கள் சொன்னவுடன் தியாகராஜனுக்கு கண்கள் கலங்கிவிட்டதாம். பின், படம் வெளியானவுடன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கமல்ஹாசனுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பாலுமகேந்திராவுக்கும் கிடைத்தது. அதேபோல தமிழக அரசின் 5 விருதுகள் மூன்றாம் பிறை படத்திற்கு கிடைத்தது. மூன்றாம் பிறை படத்திற்கு பின்னால் உள்ள இந்த சுவாரசியத் தகவல்கள் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது.