எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் ஏகோபித்த வரவேற்போடு மாபெரும் வெற்றிபெற்றது. அப்படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்டா வரச் சொல்லுங்க...' என்ற பாடல், படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி படம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் பாடலைப் பாடியது கிடாக்குழி மாரியம்மா என்ற 50 வயது நாட்டுப்புற பாடகி என்பது நாம் அறிந்ததே. அந்தப்பாடல் வெளியான பிறகு, ஒரே இரவில் மிக உயர்ந்த இடத்தை கிடாக்குழி மாரியம்மா அடைந்துவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிடாக்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறு வயது முதலே பாடல்கள் பாடுவதில் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். பொதுவாக கிராமங்களில் நாற்று நடுவது, களை எடுப்பது போன்ற விவசாயப் பணிகளின்போது வேலை அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடிக்கொண்டே வேலை செய்வார்கள். அப்படி கிடாக்குழி மாரியம்மா சிறப்பாகப் பாடுவதைக் கேட்ட அந்த ஊர் ஆட்கள், ஊர் திருவிழாக்களில் பாட அவரை மேடையேற்றியுள்ளனர். அந்தக் கிராமத்தினுள் கிடாக்குழி மாரியம்மாளுக்கு நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தபோது, கோட்டைச்சாமி என்ற பிரபல நாட்டுப்புறப் பாடகரின் அறிமுகமும் கிடைக்கிறது. ஆடியோ கேசட்டுகள் மட்டும் இருந்த அந்தக் காலத்தில், கோட்டைச்சாமி பாடல்கள் என்றே தனி கேசட்டுகள் கிடைக்கும். அந்த அளவிற்கு புகழ் பெற்றவராக கோட்டைச்சாமி இருந்தார். மாரியம்மாவிற்கு 13 வயதாக இருக்கும்போதே கோட்டைச்சாமியின் இசைக்குழுவில் சேர்ந்து பாட ஆரம்பிக்கிறார். அந்த இசைக்குழு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல இடங்களில் இசைக்கச்சேரி நடத்தக்கூடிய குழு என்பதால் தன்னுடைய கிராம அளவில் இருந்த மாரியம்மாவின் புகழ், பக்கத்து ஊர்களிலும் பரவ ஆரம்பிக்கிறது. பின்னாட்களில் கோட்டைச்சாமி மாரியம்மாவையே திருமணம் செய்துகொள்கிறார்.
காலங்கள் ஓடின. 13 வயதில் மேடையில் அறிமுகமான கிடாக்குழி மாரியம்மாவிற்கு 50 வயது இருக்கும்போது முதல் சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அவர் கணவர் இறந்துவிட்டார். மாரியம்மாவும் நிறைய பாடல்கள் பாடி, தனி கேசட்டுகளெல்லாம் வெளியிட்டு நாட்டுப்புறப் பாடகர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம்வந்துகொண்டிருந்தார். 40 வயதைத் தாண்டிவிட்டாலே வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். நமக்கான வாய்ப்பும் அங்கீகாரமும் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு உதாரணம் கிடாக்குழி மாரியம்மா.
மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமா’ளில் பாடகர் அந்தோணி தாசன் பாடியிருந்தார். அவரிடம், “‘கர்ணன்’ திரைப்படத்தில் வயதான நாட்டுப்புற பாடகி குரலில் ஒரு பாடல் உள்ளது. அதைப் பாடுவதற்கு யாரவது உங்களுக்குத் தெரியுமா” என மாரி செல்வராஜ் கேட்டுள்ளார். அவர்தான் கிடாக்குழி மாரியம்மா பற்றிக்கூறி, அவருடைய பாடல்களையும் மாரி செல்வராஜிடம் காண்பித்துள்ளார். மாரி செல்வராஜ் எதிர்பார்த்த குரல்போலவே கிடாக்குழி மாரியம்மாவின் குரலும் இருந்ததால் அவரையே பாடவைத்துவிடலாம் என மாரி செல்வராஜ் முடிவெடுக்கிறார். உடனே அவர் சென்னை அழைத்துவரப்படுகிறார். பாடல் பதிவு முடிவடியும்வரை தனுஷ் படத்திற்குத்தான் நீங்கள் பாடுகிறீர்கள் என்ற விவரம் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. பாடல் பதிவு முடிந்தவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் தனுஷுடன் ஃபோனில் பேசியுள்ளார். அதன் பிறகே, தனுஷ் படத்திற்காகத்தான் இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது என அவரிடம் கூறியுள்ளனர். கிடாக்குழி மாரியம்மாவினால் அதை நம்பமுடியவில்லையாம். இது நடப்பது நனவிலா கனவிலா எனத் தன்னுடைய கையைக் கிள்ளிப்பார்த்துக்கொண்டதாக சொன்னார்கள்.
நடிகர் தனுஷ் நடித்த படமென்பதாலும், மாறுபட்ட ரசனை கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய படமென்பதாலும் அதில் பாடிய மாரியம்மாவின் பாடல் ஒரே இரவில் சூப்பர் ஹிட் அடித்தது. உலகெமெங்கும் இருக்கக்கூடிய பலகோடி தமிழ் மக்களை இப்பாடல் சென்றடைந்ததும் மாரியம்மா என்ற நட்சத்திரம் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு கிடாக்குழி மாரியம்மாவை, 'உன்னுடைய பிறவிப்பயனை நீ அடைந்துவிட்டாய்' என அவருடைய ஊர் மக்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டியுள்ளனர்.