எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இளையராஜாவின் ஆரம்பக்கால வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
வாழ்க்கையில் உயர்வு என்ற விஷயம் யார் மூலம் எப்போது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கணிக்க முடியாது. இதற்கு இசைஞானி இளையராஜா வாழக்கையையே உதாரணமாகக் கூறலாம். இன்றைக்கு நாம் அண்ணாந்து பார்க்கக்கூடிய இடத்தில் இருக்கும் இளையராஜாவிற்கு ஆரம்பக்காலத்தில் சரியான பாதையைக் காட்டியவர் கோரஸ் பாடக்கூடிய கமலா என்ற பெண்தான்.
இளையராஜா, அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், அவரது தம்பி கங்கை அமரன் மூவரும் சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்பதற்காக பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்தனர். சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில், ஓ.ஏ.கே. தேவர் தயாரித்த ஒரு நாடகத்திற்கு மூவரும் இசையமைக்கின்றனர். அந்த நாடகத்திற்காக பாட வந்தவர்தான் கமலா. அவர் பாடகி என்பதால் வந்தவுடனேயே இவர்களது இசைத்திறமை மற்றும் இசைக்கருவிகளை கையாளும் விதத்தைப் பார்த்து அசந்துவிட்டார். உடனே, இளையராஜவை அழைத்து ஏதும் படங்களுக்கு இசையமைத்துள்ளீர்களா என்று கேட்கிறார். சினிமாக்கு இசையமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரில் இருந்து கிளம்பி வந்தோம், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இளையராஜா கூறுகிறார்.
இந்தக் கமலா எச்.எம்.வி நிறுவனம் உருவாக்கும் தனிப்பாடல்களிலும் பாடுவார். இசை உலகத்தில் அவரது பெயரே எச்.எம்.வி. கமலாதான். கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசையெல்லாம் தெரியுமா என்று கமலா இளையராஜாவிடம் கேட்க, அவர் தெரியாது எனக் கூறுகிறார். மேலும், எங்களுக்கு அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அமையவில்லை. உங்களுக்குத் தெரிந்த ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்கிறார்.
நிறைய மேடைகளில் தன்ராஜ் மாஸ்டரை தன்னுடைய குரு என்று இளையராஜா கூறுவார். அந்த தன்ராஜ் மாஸ்டரை இளையராஜாவிற்கு பரிந்துரைத்தவர் எச்.எம்.வி. கமலாதான். கமலாவின் பரிந்துரையைத் தொடர்ந்து, தன்ராஜ் மாஸ்டரிடம் சென்று இசை கற்க ஆரம்பித்தார் இளையராஜா. அங்குதான் கர்நாடக இசை, மேற்கத்திய இசையை அவர் கற்றார். சில நாட்களில் கையில் காசில்லை என்றால் வடபழனியில் இருந்து மைலாப்பூருக்கு 8 கிமீ கால்நடையாகவே நடந்து செல்வாராம். அவரிடம் இசை கற்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மிகப்பெரிய ஜீனியஸிடம் நாம் இசை கற்கிறோம் என்பது இளையராஜாவிற்கு தெரிந்துவிட்டது.
தூக்கத்தில் எழுப்பி கேட்டால்கூட இப்போது இசை நோட்ஸ் கொடுப்பார் இளையராஜா. ஆனால், தன்ராஜ் மாஸ்டரை சந்திக்கும்வரை இளையராஜாவிற்கு இசை நோட்ஸ் எழுதவே தெரியாதாம். ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷ் என்று ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு இசைக்கருவிகள் வாசிக்க தன்ராஜ் மாஸ்டர் செல்கிறார். அப்போது இளையராஜாவையும் உடன் அழைத்துச்செல்கிறார். அன்று பணிகள் முடிந்த பிறகு தன்னுடைய மாணவனை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரை செய்கிறார். அதன் பிறகு, ஜி.கே.வெங்கடேஷிடன் உதவியாளராக பொன்னுக்கு தங்க மனசு படத்தில் இளையராஜா வேலை செய்கிறார். அதன் பிறகு, அந்தப் படத்தை இயக்கிய தேவராஜ் மோகனின் அடுத்த படமான அன்னக்கிளி மூலமாக இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். பஞ்சு அருணாச்சலம்தான் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினார். கமலா மூலமாக தன்ராஜ் மாஸ்டரின் அறிமுகம், அவர் மூலமாக ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம், அவர் மூலமாக தேவராஜ் மோகன் அறிமுகம், அவர் மூலமாக பஞ்சு அருணாச்சலம் அறிமுகம், அவர் மூலமாக பட வாய்ப்பு, அதன் மூலம்தான் மாபெரும் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார்.