எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய புதுமையான முயற்சிகள் மூலம் திரைத்துறையில் எவ்வாறு தனித்துவத்துடன் அறிமுகமானார் என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
வாழ்க்கையில் சாதனை படைக்கவேண்டுமென நினைத்தால் முதலில் புதுமை படைக்க வேண்டும். இன்று வாழ்க்கையில் வெற்றிபெற்றுள்ள அனைவருமே வாழ்க்கையில் புதுமை படைத்தவர்கள்தான். வர்த்தகத்துறை, விளையாட்டுத்துறை, அறிவியல்துறை, சினிமாத்துறை என எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றிபெறுபவர்களை நாம் கவனித்தால் அவர்கள் ஏதாவது புதுமையாகச் செய்தவர்களாகவே இருப்பார்கள். அந்த வகையில், சினிமாத்துறையில் இருந்து உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். இயக்குநர் பாரதிராஜா அவருடைய வாழ்க்கையில் எத்தகைய புதுமைகளைச் செய்ததால் புகழ்பெற்ற இயக்குநராக உயர்ந்தார் என்பதைப் பார்ப்போம்.
பாரதிராஜாவின் அறிமுகப்படம் '16 வயதினிலே'. இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாகவும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும், நடிகர் ரஜினிகாந்த் வில்லனாகவும் நடித்திருந்தார். ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்திருந்தார். இன்று ஒரு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டும், சிலர் அதுகூட இல்லாமல் வெறும் குறும்படம் இயக்கிய அனுபவத்தோடும் படம் இயக்க வருகிறார்கள். ஆனால். பாரதிராஜா பல இயக்குநர்களுடன் 12 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றி முழுமையாக சினிமாவை கற்று இயக்குநராக அறிமுகமானார்.
கமல்ஹாசனுக்கு பிளே பாய் இமேஜ் இருந்த காலகட்டத்தில் வெளியான படம்தான் '16 வயதினிலே'. மன்மத லீலை, மேல்நாட்டு மருமகள், சொல்லத்தான் நினைக்கிறேன் ஆகிய படங்கள் மூலம் அந்தப் பிம்பம் வலுவாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் கமல்ஹாசனை சப்பாணி கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் பாரதிராஜா. நவநாகரீக நகரத்து இளைஞராக நடித்துக்கொண்டிருந்த கமல்ஹாசனை சப்பாணி கதாபாத்திரத்தில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பாரதிராஜா கற்பனை செய்து பார்த்திருக்கிறார். இதுவொரு புதுமை என்றால் மற்றொரு புதுமை நகரத்துப் பெண்ணாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீ தேவியை மயிலு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது. பாரதிராஜா மாதிரியான திறமையான இயக்குநர் தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். பாரதிராஜா செய்த புதுமையை அவருக்கு முன்னும் யாரும் செய்ததில்லை; அவருக்குப் பின்னும் யாரும் செய்ததில்லை. '16 வயதினிலே' படத்தின் தொடக்கத்தில் எழுத்துப் போடும்போதே பாரதிராஜா எவ்வளவு புதுமையான மனிதர் என்று நாம் கவனிக்கலாம். படத்தில் கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியவர்களைக் காட்டும்போது அவர்கள் பெயர் வராது. அதற்குப் பதிலாக அவர்களது கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் வரும். இது இன்று சாதாரணமான விஷயமாகத் தெரியலாம். நடிகர்களின் சம்மதம் இல்லாமல் இதைச் செய்யமுடியாது. அவர்கள் அனைவரையும் சம்மதிக்கவைத்து அன்றே இதை பாரதிராஜா செய்துள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். ஒருமுறை பாரதிராஜாவிடம் மனதுவிட்டுப் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது இவற்றையெல்லாம் அவரிடம் சொல்லி வெகுவாகப் பாராட்டி நெகிழ்ந்தேன்.
'16 வயதினிலே' படம் முடிந்த பிறகு விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை. புகழ்பெற்ற நடிகர்கள், இளையராஜா இசை எனப் பிரம்மாண்டமாகப் படம் இருந்தாலும் கமல்ஹாசன் சப்பாணி கதாபாத்திரத்தில் நடித்ததை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா... படம் வெற்றிபெறுமா என அவர்களிடம் தயக்கம் இருந்தது. கடைசிவரை யாரும் படத்தை வாங்காததால் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு சொந்தமாகப் படத்தை வெளியிட்டார். படம் 175 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றிபெற்றது. எங்கு பார்த்தாலும் '16 வயதினிலே' படம் பற்றிய பேச்சுதான். கமல், ரஜினி மற்றும் ஸ்ரீதேவியின் கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, யார் இந்த பாரதிராஜா என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் கேட்க வைத்தது. பத்திரிகைகள் படத்தைத் தலையில் வைத்துக்கொண்டாடின. கமல்ஹாசன் என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லாமல் மாறுபட்ட கமல்ஹாசனை வைத்து படம் இயக்க வேண்டும் என்று நினைத்த புதுமை விரும்பி பாரதிராஜா அதன்பிறகு அடைந்த உயரம் நாமறிந்ததே.