எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
“இயக்குநர் இமையம் பாரதிராஜா தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர். கடந்த 30 ஆண்டுகளாக கிராமங்களில் இருந்து திரையுலக நோக்கி வரும் பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்தான் முன்னுதாரணம். குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் சினிமா துறையில் ஜொலிக்க முடியும் என்று இருந்த காலகட்டத்தில் அதையெல்லாம் உடைத்தெறிந்து மிகப்பெரிய புரட்சியை செய்தவர் பாராதிராஜா. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், மண் வாசனை, ஒரு கைதியின் டைரி, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை என அவர் இயக்கிய பல படங்களை காலத்தைக் கடந்தும் இன்று நாம் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால், திரைத்துறையில் அவரது பயணம் அவ்வளவு எளிதானதாக இருந்துவிடவில்லை.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பல்வேறு இயக்குநர்களிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார். அதில் மிக முக்கியமானவர் பிரபல கன்னட இயக்குநரான புட்டன்னா கனகல். தமிழ்நாட்டில் கே.பாலச்சந்தர் போல கர்நாடகாவில் புட்டன்னா கனகல் மிகப்பெரிய இயக்குநர். பாரதிராஜா படங்களில் இருக்கும் கவித்துவத்திற்கு புட்டன்னா படங்களின் தாக்கம்தான் முக்கிய காரணம்.
இருளும் ஒளியும் என்று ஒரு தமிழ்ப்படத்தை புட்டன்னா கனகல் இயக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார் பாரதிராஜா. ஜெமினி ஸ்டூடியோ வளாகத்தினுள்தான் படப்பிடிப்பு நடந்தது. பாரதிராஜாவிற்கு க்ளாப் அடிக்கும் வேலை. அதன் பிறகு ஊட்டி, கர்நாடகா எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. புட்டன்னா கனகல் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் பெரும்பாலும் அவர் கர்நாடகாவில்தான் படப்பிடிப்பு நடத்துவார். அதேபோல பாரதிராஜாவும் பெரும்பாலும் மைசூரில்தான் படப்பிடிப்பு நடத்துவார். பாரதிராஜா ஏன் மைசூர் போய் படப்பிடிப்பு நடத்துகிறார் என்று நிறைய பேர் கேட்பார்கள். புட்டன்னா கனகலிடம் வேலை செய்தபோது அங்கிருக்கும் இடங்களோடு அவருக்கு நல்ல பரிட்சயம் ஏற்பட்டதுதான் அதற்கு காரணம். இருளும் ஒளியும் படம் முடிந்த பிறகு இன்னும் சில படங்கள் புட்டன்னாவிடம் பாரதிராஜா வேலை பார்த்தார். அதன் பிறகு, தனியாக படம் இயக்க ஆரம்பித்த பாரதிராஜா தன்னுடைய தனித்தன்மையால் மிக விரைவிலேயே மிகப்பெரிய இடத்தைப் பிடித்துவிட்டார்.
ஜெமினி ஸ்டூடியோ இன்றைக்கு ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸாக மாறிவிட்டது. அந்த வளாகத்தினுள்தான் பாரதிராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மனோஜ் க்ரியேஷனின் அலுவலகம் உள்ளது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் சிவாஜி முதன்முதலாக வசனம் பேசிய இடத்தில் அவருடைய சிலை இருக்கும். அதனருகே, இந்த இடத்தில்தான் பராசக்தி படத்திற்காக சிவாஜி சக்சஸ் என்ற வசனம் பேசினார் என்று ஓர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும். இதை மனதில் வைத்துதான் முதன்முதலாக தான் க்ளாப் அடித்த இடத்திலேயே தன்னுடைய அலுவலகத்தை பாரதிராஜா அமைத்திருக்கிறாராம்”.