எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் விஜய்யின் திருமணம் குறித்த செய்தி பத்திரிகையாளர்களுக்கு எவ்வாறு தெரியவந்தது என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
நடிகர் விஜய்யின் திருமண செய்தியைப் பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் முதன்முதலில் தெரிவித்தது நான்தான். நடிகர் விஜய்க்கு லண்டனில் திருமணம் நடக்கவுள்ளது என நண்பர் ஒருவர் மூலமாக எனக்குத் தகவல் கிடைத்தது. விஜய் கதாநாயகனாக நடித்த ‘நிலாவே வா’ என்ற படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. அந்தப் படத்தை ஏ. வெங்கடேஷ் இயக்க கே.டி. குஞ்சுமோன் தயாரித்திருந்தார். அதே நேரத்திலேயே மனோஜ் சரண் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவான மற்றொரு திரைப்படத்தின் படப்பிடிப்பும் லண்டனில் நடைபெற்றுவந்தது. இயக்குநர் கே.எஸ். அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய என்னுடைய நண்பர் புவன், திடீரென எனக்குப் ஃபோன் செய்தார். நடிகர் விஜய்க்கு இன்னும் அரைமணி நேரத்தில் லண்டனில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அனைவரும் ஒரு சர்ச்சில் கூடியுள்ளதாகவும் கூறினார். மேலும், விஜய் திருமணம் செய்துகொள்ள உள்ள பெண்ணின் பெயர் சங்கீதா என்றும் இலங்கைத் தமிழரான அவரது தந்தை லண்டனில் நகைக்கடை நடத்திவருவதாகவும் தெரிவித்தார். இந்தத் தகவலை எனக்குக் கூறிய நண்பர் புவனும் இலங்கைத் தமிழர். அவரது அக்கா இந்த விஷயத்தைப் புவனுக்குக் கூறியுள்ளார். ஒரு நடிகரின் திடீர் திருமணம் என்றால் எந்த அளவிற்குப் பரபரப்பு இருக்குமோ அந்த பரபரப்போடு புவன் இந்த விஷயத்தை எனக்குக் கூறினார். நான் பொதுவாக நடிகர்களின் தொழில்முறை வாழ்க்கைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பேன். திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன்.
ஆனால், சில பத்திரிகைகள் நடிகர்களின் திருமணச் செய்திகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஆதலால், இந்தத் தகவலைப் பிற பத்திரிகைகளுக்கு கூறினால் அவர்களுக்குப் பயனாக இருக்கும் என நினைத்து மாலை மலர் சினிமா பிரிவு ஆசிரியரைத் தொடர்புகொண்டேன். அந்த நேரத்தில் அவர் அலுவலகத்தில் இல்லை. அதன் பிறகு, தினத்தந்தியின் சினிமா ஆசிரியர் பழனிக்குமாரிடம் முழு விவரத்தையும் தெரிவித்தேன். உடனே, அவர் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோனை தொடர்புகொண்டு லண்டனில் உள்ள நடிகர் விஜய்யை தொடர்புகொள்வதற்கான எண் மற்றும் முகவரியை வாங்கியுள்ளார். ஒரு பேட்டி விஷயமாக விஜய்யிடம் பேச வேண்டும் என தினத்தந்தியில் இருந்து கேட்டதால் குஞ்சுமோனும் உடனே கொடுத்துவிட்டார். தொடர்பு கொள்வதற்கான எண் கிடைத்தவுடன், பழனிக்குமார் ஃபோன் செய்துள்ளார். நடிகர் விஜய்தான் ஃபோனை எடுத்திருக்கிறார். அவரிடம் இதுபற்றி கேட்டால் இல்லை என மறுத்துவிடுவார் என்று நினைத்து அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்பா வெளியே சென்றுள்ளதாகவும் அவர் வருவதற்கு சற்று நேரம் ஆகுமென்றும் விஜய் தெரிவிக்க, சிறிது நேரம் கழித்து தான் தொடர்புகொள்வதாகக் கூறி பழனிக்குமார் அழைப்பை துண்டித்துவிடுகிறார்.
அன்றைய தினம், மாலை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளவிருந்த நடிகர் விஜய், ஊரில் இல்லாததால் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், சிறிது நேரங்கழித்து மீண்டும் ஃபோன் செய்கையில், எஸ்.ஏ. சந்திரசேகர் ஃபோனை எடுத்துள்ளார். அவரிடம், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை... விஜய்க்கு லண்டனில் திருமணம் நடைபெற்றுவிட்டதாக விழாவிற்கு வந்த அனைவரும் பேசிக்கொண்டனர் எனக் கூறியுள்ளார். உண்மையில் யாரும் அப்படிப் பேசிக்கொள்ளவில்லை. பத்திரிகையாளராக அந்தச் செய்தியை உறுதிசெய்ய சாதூர்யமாக இவ்வாறு கூறினார். உடனே, கல்யாணம் நடக்கவில்லை... நிச்சயதார்த்தம் மட்டும்தான் நடந்தது என எஸ்.ஏ.சந்திரகேகர் கூறியுள்ளார்.
மறுநாள் காலை, நடிகர் விஜய் காதல் திருமணம் என செய்தி வந்தது. தினத்தந்தியில் மட்டும்தான் இந்த செய்தி வந்தது. இந்த செய்தி நான் கொடுத்ததுதான் என்பது பிற பத்திரிகையாளர்களுக்குத் தெரியவந்ததும் இதுபோன்ற செய்தி கிடைத்தால் இனி எங்களுக்கு முதலில் கொடுங்கள் என நிறைய பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.
‘நிலாவே வா’ படத்தில் விஜய் கிறிஸ்தவராக நடித்திருப்பார். அதில், ஓர் இந்துப் பெண்ணிற்கும் கிறிஸ்துவ இளைஞனுக்கும் திருமணம் நடப்பதாகவே கதையில் வரும். அதேபோல படத்தில் நாயகியின் பெயர் சங்கீதா. இது இவர்கள் திட்டமிட்டு வைத்ததா அல்லது யதார்த்தமாக நடந்ததா என்று தெரியவில்லை.