Skip to main content

கமல் ரசிகர்களுக்கு ஒரு தரமான சம்பவம்... மீண்டும் நடக்குமா? 

Published on 17/09/2020 | Edited on 17/09/2020
kamal with lokesh

 

கமல்ஹாசனை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் செய்தி வெளியானதிலிருந்து கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' என  எகிறும் கிராஃபில் இருக்கும் இளம் இயக்குனர் லோகேஷ் இயக்கப்போகிறார் என்பது ஒரு காரணமென்றால், அவர் கமலின் தீவிர ரசிகர் என்பது மற்றொரு முக்கிய காரணம். ஏற்கனவே ஒரு கமல் ரசிகர் எடுத்த கமல் படம், இன்று வரை விருந்தாக இருந்து வருகிறது. அப்படி ஒரு விருந்தாக இந்தப் படமும் அமையுமென்ற எதிர்பார்ப்புதான் உற்சாகத்துக்கு முக்கிய காரணம்.

 

2006இல் கமல் ரசிகர் எடுத்த கமல் படம் 'வேட்டையாடு விளையாடு'. அப்போது இளம் இயக்குனராக, நியூ வேவ் டைரக்டராக இருந்த கௌதம் மேனன்தான் அந்த கமல் ரசிகர். 'மின்னலே', 'காக்க காக்க' என இரண்டு பெரிய வெற்றிகளை அதற்கு முன்பு கொடுத்திருந்த கௌதம் மேனன் காதல் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் பெயர் பெற்ற இயக்குனர். அப்பொழுதே சில பேட்டிகளில் தான் ஒரு கமல் ரசிகர் என்றும் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று 'சத்யா' என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்த பொழுது அதற்கு முன்பு சில ஆண்டுகள் ரசிகர்கள் மிஸ் பண்ணிய ஸ்டைலிஷான கமல்ஹாசனை தன் படத்தில் காட்டினார். 'வேட்டையாடு விளையாடு' படத்தின் ஓப்பனிங் சீன் இன்றளவிலும் கமல்ஹாசனின் படங்களில் மிகச்சிறந்த ஓபனிங் சீனாகக் கருதப்படுகிறது.

 

kamal entry

 

"என் கண்ணு வேணும்னு கேட்டியாமே.." என்று தொடங்கி "கேட்ட மூடுறா" என்று கோபத்துடன் கமல் சொல்ல அங்கு தொடங்கும் சண்டைக்காட்சி அப்படியே 'கற்க கற்க' பாடலுடன் தொடர்ந்து அப்படியே ஓப்பனிங் பாடலாக அமைந்தது கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. கமல் படங்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சிறந்த மாஸ் ஓபனிங் சீன்களில் அதுவும் ஒன்று.

 

'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலின் கதாபாத்திரம் வீரமாகவும் அதேநேரம் பெண்களை மதிப்பதாகவும் ஸ்டைலான ஆங்கிலம் பேசுவதாகவும் என அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்கத்தக்கதாக செதுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் கமலின் உடைகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. கமலின் மேனரிசங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரசிகனால் ரசித்து ரசித்து உருவாக்கப்பட்டது. உச்சக்கட்டமாக "சின்னப் பசங்களா யார்கிட்ட" என்று கமல் கேட்பது அப்போதைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடுவது போல ஒரு கமல் ரசிகனால் அனுபவித்து எழுதப்பட்டது.

 

kamal gowtham

 

காதல் காட்சிகளும் பாடல்களும் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் என்றும் மறக்க முடியாதவை.  இப்படி ஒரு கமல் ரசிகராக கௌதம் மேனன் தன் அபிமான நடிகரை வைத்து உருவாக்கிய திரைப்படம் ரசிகர்கள் பார்க்க விரும்பிய கமல்ஹாசனை திரையில் கொண்டு வந்தது. அதேபோல ஒரு ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' ரஜினி ரசிகர்கள் காண விரும்பிய ரஜினியை ஒரு இடைவெளிக்குப் பிறகு திரையில் கொண்டு வந்தது. இந்த வரிசையில் லோகேஷ் இயக்கப்போகும் திரைப்படம் அமையுமென நம்புகிறார்கள் ரசிகர்கள். அமையவேண்டும்... அது தமிழ் சினிமா  ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக அமையும். 

  

 

சார்ந்த செய்திகள்