சினிமாவில் நடிகருக்கும் இயக்குனருக்குமான புரிதல் படத்தின் வெற்றிக்கு மிக மிக அவசியமான ஒன்று. அந்த படத்தின் வெற்றிக்கு மட்டுமில்லாமல் அடுத்தடுத்து இருவரும் பணியாற்றுவதற்கும் அந்த புரிதல் தேவையான ஒன்று. ஆனால், அது அவ்வளவு எளிதாக அமைந்துவிடுவது இல்லை. ஒரு படம் பணிபுரியும்போதே நடிகருக்கும் இயக்குனருக்கும் பிரச்சனைகள் ஏற்படுவதையும் அதனால் பாதிப்புகள் உண்டாவதையும் அது பிரஸ்மீட் வரை செல்வதையும் அடிக்கடி பார்த்துள்ளோம். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் தனுஷும் வெற்றிமாறனும் இணைந்து பணியாற்றியுள்ள நான்காவது திரைப்படமான அசுரன் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இவர்கள் இருவருக்கும் உள்ள புரிதலும், நட்பும், இவர்கள் உருவாக்கியுள்ள படங்களிலையே தெரியும். அதை தாண்டி பல பேட்டிகளிலும் தங்கள் நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். எப்போது தொடங்கியது இந்த நட்பு, இயக்குனர் வெற்றிமாறன் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பாலுமகேந்திரா தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கினார். அப்போது அவருடன் பணியாற்றியவர் வெற்றிமாறன்.
நடிகர் தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி காதல் கொண்டேன் மூலம் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தவர். காதல் கொண்டேன் படத்தை பார்த்த பாரதிராஜா “அவன் மகாநடிகன்” என்று தனுஷை பாராட்டினார். பாலுமகேந்திராவோ ஒரு படி மேலே போய் தனுஷை வைத்து படம் இயக்க முடிவுசெய்து, தொடங்கிய படம்தான் ‘அது ஒரு கனா காலம்’. ஏற்கனவே பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றிமாறன் அது ஒரு கனா காலம் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்பொழுதுதான் தனுஷுக்கும் வெற்றிக்கும் அறிமுகம் எற்பட்டது. வெற்றியின் வித்தியாசமான பார்வையும், ஆங்கில புலமையும் தனுஷின் கவனத்தை ஈர்த்தது. தனுஷின் இயல்பான நடிப்பார்வமும், சினிமா மீதான காதலும் வெற்றிமாறனுக்கு தனுஷை நெருக்கமாக்கியது.
இந்த நட்பு தொடர்ந்து வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவனில் தனுஷ் நாயகனாக நடித்தார். தனுஷின் முழு ஆக்ஷன் திரைப்படம் பொல்லாதவன். தனுஷின் வேறு பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டியது. தொடர்ந்து வெற்றியின் இரண்டாவது படமான ஆடுகளத்திலும் தனுஷ் நடித்தார். அந்த படத்தின் மூலம் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. வெற்றிமாறனின் மூன்றாவது படத்தை தனுஷே தயாரித்தார். சிம்பு நடிப்பதாக இருந்து, ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் நடந்து வந்த வடசென்னை திரைப்படத்தில் பின்னர் தனுஷே நடித்தார். அந்த படமும் தனுஷின் திரை வாழ்வில் ஒரு முக்கியமானதாக அமைந்தது. ஆனாலும், வடசென்னை படம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. வடசென்னை மக்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், மீனவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் எதிர்ப்புகள் எழ, விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட வடசென்னை 2 தள்ளிப்போனது. ஆனாலும், அந்த கூட்டணி பிரியாமல் இப்போது அசுரன் வெளிவந்து இருக்கிறது.
“அசுரன் படத்தின் கதையில் ஒரு இளம் கதாபாத்திரம் இருக்கிறது. வேறு ஒரு ஹீரோவிடம் நான் அந்த கதையை சொல்லியிருந்தால் அந்த கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டிருப்பார்கள். ஆனால், எனக்குள்ளே அந்த கதையில் வரும் அப்பா கதாபாத்திரத்தில்தான் ஹீரோ நடிக்க வேண்டும் என்று யோசித்தேன். தனுஷிடம் இந்த கதையை சொல்லும்போதுகூட நான் என்ன நினைத்தேனோ அதையேதான் அவரும் சொன்னார். எனக்கு அவர் ஒரு கேடயம் போல இருக்கிறார்” என்று வெற்றிமாறன் தனுஷ் குறித்து அசுரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார். அதேபோல வெற்றிமாறன் குறித்து அசுரன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், “ வெற்றிமாறன் இருக்குறதுலேயே பெஸ்ட்தான் கொடுப்பார், பெஸ்ட்தான் என்னிடம் இருந்து எடுப்பார். இதுதான் நான் வெற்றிமாறன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை” என்று கூறியுள்ளார். இந்த நட்பும் புரிதலும் இன்றும் பல சிறந்த படங்களாக வெளிவருவதில் உறுதி!