உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் இந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு நாடுகள் ஒவ்வொருவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதிக்கு நீட்டித்துள்ளது. இதனால் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேறுவோரை காவல்துறை கைது செய்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் கரோனா குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியா முழுவதும் கடந்த 25 நாட்களாக லாக் டவுனில் இருந்திருக்கிறோம். இப்போது இன்னும் கொஞ்சம் நாள் இருக்கப் போகிறோம். இவ்வளவு நாள் இருந்தது முக்கியமல்ல, இனிமேல் இருக்கப் போவதுதான் மிகவும் முக்கியம். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் 130 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள நம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய வைரஸ் தொற்று என்பது குறைவு. அதற்குக் காரணமே ஊரடங்கைக் கடைப்பிடித்ததுதான்.
அரசு சொன்னபடி நாம் ஓரளவிற்கு நடந்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கம்மியான பரவல் தெரியப்படுத்துகிறது. இதை இன்னும் குறைத்து நாம் இதிலிருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்றால், அடுத்து வரும் நாட்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக் கவசம்! மிக மிக முக்கியம் ! மறக்க வேண்டாம்! Next 20 days will decide our social freedom. Respect the advice of Govt n doctors! Mask is a must. pic.twitter.com/ejmVllElO8
— Vivekh actor (@Actor_Vivek) April 17, 2020
வாய், மூக்கு இரண்டையும் மறைப்பது போன்ற முகக் கவசம் அணிய வேண்டும். கண் குறித்து கண் மருத்துவரிடம் கேட்டபோது, அதன் மூலம் பெரிய ஆபத்து இல்லை என்று சொன்னார்கள். வாய், மூக்கு இரண்டுமே கண்டிப்பாக முக கவசத்தால் மூடியிருக்க வேண்டும். மக்கள் அனைவருமே வீட்டை விட்டு வெளியே சென்றால், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். இரண்டு ரொம்ப, ரொம்ப முக்கியம். சாப்பாட்டுக்கு மிளகு ரசம், முகத்துக்கு முக கவசம். இரண்டும் இருந்தால் வாழ்க்கை ஆசம். முகக் கவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.