இந்த மாத தொடக்கத்திலேயே விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் படம் உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. பின்னர், தயாரிப்பு நிறுவனத்தின் நிதி பிரச்சனையால் படம் 27ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஆனாலும், விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து லாபம் என்றொரு படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி அதை தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதனின் துணை இயக்குநர் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பூஜை சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டு படபிடிப்பு தொடங்கியது. விஜய் செதுபதி இப்படத்தில் இசை கலைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது திடீரென அந்தப்படத்தில் இருந்து அமலா பால் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தேதிகள் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக நடிகை மேகா ஆகாஷ் அந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
இந்நிலையில் இந்த படத்திலிருந்து நானாக விலகவில்லை என்றும், தயாரிப்பாளரின் ஆணாதிக்க மனப்பான்மையாலும் அகம்பவாத்தாலும்தான் நான் வெளியேற்றப்பட்டேன் என்று அமலா பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், தான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமலா பாலின் தைரியமான இந்த அறிக்கையை பாராட்டியுள்ளார் நடிகர் விஷ்னு விஷால். இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளது. “ஒரு நடிகர் துணிந்து பேசுவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. பலமுறை இப்படி நடிகர்கள் பக்கம்தான் எப்போதும் தவறு என்பது போல சம்பவங்கள் நடந்துள்ளன. எவ்வளவு தயாரிப்பாளர்களால் நான் எப்படியெல்லாம் மோசமாக நடத்தப்பட்டேன் என்பதைச் சொல்லவேண்டும் என்று பலமுறை நினைத்துள்ளேன். ஆனால், எப்போதும் அவர்களை ‘முதலாளி’ என்று மரியாதையுடன்தான் அழைத்திருக்கிறேன்.
நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போலத்தான் சினிமாவுக்கும். சில அற்புதமான தயாரிப்பாளர்களுடனும் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், உணர்வு, தொழில், உடல் ரீதியிலும் நடிகர்களுக்கு எதிராக நடக்கும் இந்த அநீதி பற்றிப் பேசும் நேரம் வந்துவிட்டது” என்றார்.