நடிகர் விஷால் சினிமாவை தாண்டி தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். அந்த வகையில் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 'வில்லேஜ் டிக்கெட்' என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தப்பாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம் என அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டிருந்த வில்லேஜ் டிக்கெட் கண்காட்சியை மாட்டு வண்டியில் பயணம் செய்து சுற்றிப் பார்த்த பின்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த வயலில் பெண்களுடன் இறங்கி நடவு நட்டார். அப்போது அவரது தோள்பட்டை பகுதியில் சட்டை கிழிந்தது. உடனடியாக மாற்று சட்டை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சட்டையை ஏற்க மறுத்த விஷால் "விவசாயத்தால் கிழிந்த சட்டை அப்படியே இருக்கட்டும்" எனக் கூறி நிகழ்ச்சி முழுவதும் அதே சட்டையுடன் பங்கேற்றார். இந்த சம்பவம் அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மூன்றாவது முறையாக மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.