கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் அறிமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பனாரஸ்'. அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடிக்க, மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கன்னம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் சிங்கிள் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பேசுகையில், “ தயாரிப்பாளர் திலகராஜ் என்னுடைய நீண்டகால நண்பர். அவருடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கை தமிழில் வெளியிடுவதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகன், கதாநாயகியின் நடிப்பு நேர்த்தியாக இருக்கிறது. காட்சிகளும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளன. இதற்காக இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் என்பது அவசியம். 84 வயதிலும் நான் ஏன் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் நான் என்னை நம்பி இருக்கிறேன். நான் என்னுடைய குழந்தைகளை நம்பி இல்லை. எனக்கு எப்போது முடியாமல் போகிறதோ அப்போது மற்றவர்களை சார்ந்து இருந்துகொள்வேன். ஆரோக்கியத்தை பேணி காப்பது நம் கையில்தான் இருக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும். அதனை இன்றிலிருந்து தொடங்கினால்.. மூன்று மாதத்திற்குள் உங்கள் உடலில் மாற்றம் தெரியும். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஒழுக்கம் இதனை கடைப்பிடித்தால், ஆரோக்கியத்துடன் ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்” எனத் தெரிவித்தார்.