கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் மூன்றாண்டுகள் கழித்து நீதிமன்ற உத்தரவுப்படி சமீபத்தில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், பாண்டவர் அணி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.
அந்த சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், “தேர்தலில் வென்ற பாண்டவர் அணியைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள். மூன்றாண்டுகள் கழித்து வாக்கு எண்ணிக்கை நடப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. தேர்தல் அதிகாரிகள் குழுவினருக்கு நன்றி. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி.
பொதுவாக ஹாஸ்பிடலில்தான் அதிக கேஸ்கள் வரும். ஆனால், அதையெல்லாம் தாண்டி அதிக கேஸ்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வந்தன. இந்த மூன்று வருட காலத்தால் நடிகர் சங்கக் கட்டிடம் தாமதமாகியது. என்னுடைய கல்யாணமும்கூட. ஈகோ உள்ளிட்ட பல காரணங்களால் இது நடந்தது. நடிகர் சங்க கட்டிடம் சாதாரணமான கட்டிடமாக இருக்காது. அனைவரது கவனத்தையும் திருப்பக்கூடிய வகையில் அது இருக்கும். சென்னைக்கு வந்தால் நடிகர் சங்க கட்டிடத்திற்குப் போகவேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு ஒரு டூரிசம் ஸ்பாட்டாக அது இருக்கும்.
நாசர் சார் தலைமையில் இரண்டாவது முறையாக செயல்பட இருக்கிறோம். தியேட்டர் ஆர்டிஸ்ட்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர்கள் வாழ்க்கை மேம்படவும்தான் நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம். விரைவில் நாங்கள் பதவியேற்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.