திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்குப் பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், சுமார் 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் (நேற்று) ஜூலை 2ஆம் தேதி ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவுசெய்யக் கடைசி நாளாகும்.
இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், நடிகர் விஷால் ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்... "பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் எங்கே? எதற்காக இந்த தணிக்கை வாரியம்? ஏன் இந்த பரபரப்பான செயல்பாடு? எப்போதும் ஏன் சினிமா துறையை மட்டும் குறிவைக்க வேண்டும்? முதல் ஜிஎஸ்டி, பின்னர் பைரசிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமே இல்லை" என பதிவிட்டுள்ளார்.