மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் 'காளை', 'திமிரு', 'சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் விமானத்தில் சக பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. கோவா விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் ஏறக் காத்திருந்தபோது, விநாயகனால் தான் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறி சக பயணி ஒருவர் இந்த புகாரைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக கேரளா உயர் நீதிமன்றத்தில் சக பயணி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்கும் போது ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதே விமானத்தில் பயணிக்க காத்திருந்த விநாயகன், அவரை வீடியோ எடுப்பதாகக் கூறி என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவரிடம் தான் எந்த வீடியோவையும் எடுக்கவில்லை, தேவைப்பட்டால் என் ஃபோனை பாருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் அப்போதும் தொடர்ந்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.
இந்த சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தேன். இது குறித்து விமான நிறுவனத்திடம் கூறினேன். ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. பின்பு ஏர்சேவா போர்டல் மூலம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலரிடம் புகார் அளித்தேன். அவர்களிடமும் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அதனால் என் புகாரை ஏற்று விநாயகன் மீது இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலாளர் உரிய நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விநாயகனை மனுவில் எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.