இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகிவருகிறது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் விக்ரம் பிரபு நேற்று (22.06.2021) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் கரோனா தடுப்பூசி செலுத்திகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு....
"தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இது பாதுகாப்பிற்கான ஒரு படியாகும். இதைப் பெற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டிக்கொள்கிறேன். ஒரு மாதத்திலிருந்து தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. ஆனால் ஊசி போட்டுக்கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஒரு நபரிடமிருந்து தொடங்கியது என்பதை மறந்துவிடக்கூடாது!. சமூக விலகலைக் கடைப்பிடிப்போம். என்னை கவனமாக வழிநடத்திய மெட்வே மருத்துவ நிர்வாகத்துக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.