நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகும் படம் 'ஆதித்ய வர்மா'. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் அமைந்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளிவரும் இந்தப் படம் முதலில் 'வர்மா' என்ற பெயரில் பாலா இயக்கத்தில் தயாரானது. பாடல் வெளியீட்டு விழா வரை வந்த அந்தப் படத்தின் இறுதி வடிவம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் 'அர்ஜுன் ரெட்டி'யில் பணியாற்றிய கிரிசய்யாவின் இயக்கத்தில் மீண்டும் உருவாக்கியது. 'ஆதித்ய வர்மா'வின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியே பேசி நன்றி தெரிவித்த விக்ரம், தொடர்ந்து படம் உருவாக உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து, "நான் ஒரு ஃபோன்தான் பண்ணேன். 'சிவா... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் சிவா, இந்தப் படத்துக்கு ஒரு சாங் எழுதணும்'னு கேட்டேன். அவர் உடனே எழுதித்தந்தார். மற்ற எல்லா பாடல்களிலும் ஓரிரு வரிகளை நாங்க மாற்றினோம். ஆனால், சிவா எழுதிய பாட்டுல மட்டும் எதுவுமே மாற்றல. அந்த அளவுக்கு அருமையாக எழுதித்தந்தார். தேங்க்ஸ் சிவா" என்று கூறினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் எழுதிய பாடல், 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'எனக்கு கல்யாண வயசுதான்' பாடல். இந்தப் பாடல் பெருவெற்றி பெற, அவ்வப்போது பாடல் எழுதி வருகிறார். சமீபத்தில் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் 'காந்த கண்ணழகி' பாடலை இவர் எழுதியிருந்தார். அந்தப் பாடலும் ஹிட்டாகியுள்ளது.