Skip to main content

"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்" - விக்ரம்

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகும் படம் 'ஆதித்ய வர்மா'. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் அமைந்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக வெளிவரும் இந்தப் படம் முதலில் 'வர்மா' என்ற பெயரில் பாலா இயக்கத்தில் தயாரானது. பாடல் வெளியீட்டு விழா வரை வந்த அந்தப் படத்தின் இறுதி வடிவம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் 'அர்ஜுன் ரெட்டி'யில் பணியாற்றிய கிரிசய்யாவின் இயக்கத்தில் மீண்டும் உருவாக்கியது. 'ஆதித்ய வர்மா'வின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  
 

vikram


இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியே பேசி நன்றி தெரிவித்த விக்ரம், தொடர்ந்து படம் உருவாக உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் குறித்தும் விக்ரம் பேசினார். "ரவி, என் க்ளோஸ் ஃப்ரெண்ட். நான் ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு படமா நடிச்சு, தோற்று, திரும்ப முயற்சி பண்ணிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்து எனக்குப் பழக்கம். அப்போது மலையாள படங்களிலும் நடித்தேன். ரவியும் அங்கே வேலை பார்த்தார். நாங்க ரெண்டு பேரும் ஒரு சின்ன லாட்ஜ்ல ரூம் ஷேர் பண்ணிக்கிட்டு, எங்களோட கனவுகளை பேசிக்கிட்டு இருந்துருக்கோம். 'ப்ரொட்யூசர் ஒரு அக்ரிலிக் ஷீட் தர மாட்டேங்குறாங்கடா' என்று புலம்பியிருக்கார் ரவி. அப்படியெல்லாம் இருந்துட்டு ஒன்னா கனவு கண்டுட்டு இப்போ இந்த இடத்துக்கு வந்திருக்கோம். அவர் இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிபதிவர்களில் ஒருவரா இருக்கார். இது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. 'ஆதித்ய வர்மா' படத்தின் நிறத்தையே வேற மாதிரி மாத்தியிருக்கார். அவருக்கு என் நன்றி" என்று ரவி.கே.சந்திரனுடனான தனது நட்பு குறித்துப் பகிர்ந்தார் விக்ரம்.
 

kaithi


ரவி.கே.சந்திரன் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். பிளாக், ஃபனா, கஜினி, சாவரியா உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் பணிபுரிந்துள்ளார். அஜித் நடித்த 'சிட்டிசன்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'  படங்களின் ஒளிப்பதிவாளர் இவரே. 

 

 

சார்ந்த செய்திகள்